சதகங்கள் கூறும் நோயில்லா நெறி! (Post No.11,228)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,228

Date uploaded in London – –    31 AUGUST 2022         

 Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளியான கட்டுரை

 சதகங்கள் கூறும் நோயில்லா நெறி!

 ச.நாகராஜன்

ஒவ்வொரு மனிதனும் நூறாண்டு வாழ முயற்சியை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அற நூல்கள் கூறுகின்றன; அத்தோடு வாழ்கின்ற அந்த நூறாண்டுகளும் நோயற்ற, பயனுள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன.

இப்படிச் சொல்லி விடுவதோடு நிற்காமல் பயனுள்ள ஆரோக்கியமான நூறாண்டு வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றன.

இப்படிப்பட்ட நூல்கள் கணக்கற்றவை.

இவற்றில் சதகங்களும் தங்கள் பங்கிற்கு சில வழிகாட்டு நெறிகளைத் தருகின்றன.

சதகம் என்றால் நூறு பாடல்கள் அடங்கிய நூலாகும்.

இங்கு அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் மற்றும் குமரேச சதகம் ஆகிய இரு நூல்களிலிருந்து ஆறு பாடல்களைப் பார்ப்போம்.

குமரேச சதகம்

இந்த சதகத்தில் வரும் 19ஆம் பாடல் உடல் நலம் பற்றிக் கூறுகிறது.

     உடல்நலம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
      மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
      வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
      மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
      முதிரா வழுக்கையிள நீர்

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
      தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
      சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
      வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
      மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் : பெருந்தவம் புரிந்த  மங்கையும் மான் வயிற்றில் பிறந்தவளுமான வேடர் குல வள்ளியம்மையின் மனதிற்கு இசைந்த மணவாளனே! மயிலில் மீது ஏறி திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல்வயலில் உயர்ந்த மலையின்  மேல் எழுந்தருளியிருக்கும் குமரேசனே!

மாதத்திற்கு இரண்டு முறை பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது

குற்றமற்ற பேதி (வயிற்றுக்கழிவு) மருந்தை வருடத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்வது

எண்ணெயைத் தலையில் தேய்த்து வாரத்திற்கு இரு முறை குளிப்பது

பேரறிவு கொண்டு தன் வயதினுக்கு இளைய அடர்த்தியான கூந்தலையுடைய  ஒரு பெண்ணுடன் சேர்வது (உறவு கொள்வது)

முதிர்ந்த தயிர், காய்ச்சிய பால், நீர் மோர், உருக்கிய நெய், முற்றாத வழுக்கைக் கொண்ட இளநீர், எவ்வளவு உணவானாலும் கூட உண்ட பிறகே தண்ணீரை அருந்துதல்,

உடம்பின் மீது இரக்கம் கொண்டு உண்ட பிறகு உலாவுதல்,

ஆகிய இவற்றை, பெரியோர் உடல்நலம் தருபவை ஆகும் என்று கூறுவர்.

அடுத்து 30ஆம் பாடலில் நோய் வரும் காரணங்கள் பட்டியலிடப்படுவதைக் காணலாம். இவற்றையெல்லாம் தவிர்த்தால் நோயற்ற வாழ்க்கை அமையும் என்பது கவிராயரின் வழிகாட்டு நெறியாகும்.

நோய்க்கு வழிகள்

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால்
      கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
      கனிபழங் கறிஉண்ணலால்

நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
      நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையி னால்பனிக் காற்றின்உடல் நோதலால்
      நீடுசரு கிலையூறலால்

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
      வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்
      மெய்வாட வேலைசெயலால்

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்
      வன்பிணிக் கிடமென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
      மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் :

மயிலில் மீது ஏறி திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல்வயலில் உயர்ந்த மலையின்  மேல் எழுந்தருளியிருக்கும் குமரேசனே!

அதிக உணவை விரும்பி உண்ணல்

மனதை வருத்தும் கவலை கொள்ளல்

மிகுந்த தொலைவு நடத்தல்

மலசலங்களை அடக்குதல்

மிகவும் கனிந்த பழம், பழைய கறிகளையும் உண்ணல்

உணவில் நெல்லும் உமியும் இருக்க அதை உண்ணல்

உணவுக்குப் பின் குளித்தல்

தூக்கமில்லாமை

உடலுக்கு ஒவ்வாத நீரிலே குளித்தல்

பனி கலந்த காற்றிலே உடல் வருந்துவதால்

சருகும் இலையும் நீண்டநாள் குடிக்கும் நீரில் ஊரில் கிடக்க அதைப் பருகுவதால்

மெல்லியலார் தம் சேர்க்கையை மிகவும் மனம் கொண்டு விரும்புதல்

கழியும் மலம் சிக்குதல்

பெரும் சுமையைத் தூக்குதல்

காலை வெயிலில் காய்தல்

உடல் தாங்க முடியாத வேலைகளைச் செய்தல்

கொடிய இரவில் தயிர், கள், கீரை போன்ற கறிகாய்களை உண்ணல்

ஆகிய இவை அனைத்தும் கொடிய நோய் உருவாவதற்கான காரணங்களாக அமையும்.

சருகு ஆதி என்பதற்கு இஞ்சி, நெல்லி, பாகற்காய், கஞ்சி என்ற பொருளும் உண்டு.

அடுத்து அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகத்தில் வரும் நான்கு பாடல்களைப் பார்ப்போம்.

இதில் வரும் 50வது பாடல் எந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

முழுக்கு நாள்

வருமாதி வாரந் தலைக்கெண்ணே யாகாது
          வடிவமிகு மழகு போகும்
    வளர்திங்க ளுக்கதிக பொருள்சேரு மங்கார
          வாரந் தனக் கிடர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடுஞ்
          செம்பொனுக் குயரறிவு போந
    தேடிய பொருட்சேத மாம்வெள்ளி சனியெண்ணெ
          செல்லமுண் டாயு ளுண்டாம்
பரிகார முள தாதி வாரந் தனக்கலரி
          பௌமனிக் கான செழுமண்
    பச்சறுகு பொன்னவற் காவெருந் தூளொளிப்
          பார்க்கவற் காகு மெனவே
அரிதா வறிந்தபே ரெண்ணெய்சேர்த தேமுழுக்
          காடுவா ரருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள் : அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

ஞாயிற்றுக்கிழமை தலைக்கு எண்ணெய் இடக்கூடாது. அப்படிச் செய்தால் உருவத்தில் உள்ள அழகு நீங்கும்.

திங்கட்கிழமைகளில் முழுகினால் அதிக செல்வம் சேரும்.

செவ்வாய்க்கிழமைகளில் முழுகினால் துன்பம் உண்டாகும்.

அழகு மிகும் புதன்கிழமைகளில் முழுகினால் சிறந்த அறிவு உண்டாகும்.

நல்ல வியாழக்கிழமைகளில் முழுகினால் அறிவு கெடும்.

வெள்ளிக்கிழமைகளில் முழுகினால் சேர்த்து வைத்த செல்வம் அழியும்.

சனிக்கிழமைகளில் முழுகினால்  செல்வம் சேரும். ஆயுளும் கூடும்.

ஆனால் இப்படி தகாத கிழமைகளில் முழுகினால் பரிகாரமும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமைக்கு அலரி மலர்

செவ்வாய்க்கு நல்ல மண்

வியாழனுக்கு பசுமையான அருகம்புல்

ஒளியுடைய வெள்ளிக்கு எருப் பொடி.

அருமையாக உணர்ந்தவர்கள் இப்படி எண்ணெயுடன் இவற்றையும் சேர்த்து நீராடுவர்.

அடுத்து 51ஆம் பாடல் மருத்துவன் யார் என்பதற்கான இலக்கணத்தை வரையறுப்பைக் கூறுகிறது:

மருத்துவன்

தாதுப் பரீக்ஷைவரு காலதே சத்தொடு
          சரீரலட் சண மறிந்து
    தன்வந்த்ரி கும்பமுனி தோர்கொங் கணர்சித்தர்
          தமதுவா கட மறிந்து
பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரை
          பிரயோக மோடு பஸ்பம்
    பிழையாது மண்டூர செந்தூர லக்ஷம்
          பேர்பெறுங் குணவா கடம்
சோதித்து மூலிகா விதநிகண் டுங்கண்டு
          தூய தைலம் லேகியஞ்
    சொல்பக்கு வங்கண்டு வருரோக நிண்ணயந்
          தோற்றியே யமிர்த கரமாய்
ஆதிப் பெருங்கேள்வி யுடையனா யுர்வேத
          னாகுமெம தருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள் :

அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

நாடிப் பரீட்சையையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,

தன்வந்திரி, கும்பமுனி, கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து

பல்வகைப்பட்ட பெருமை மிக்க குளிகைகளையும், மருந்துச் சரக்குகளைத் தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும், பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று

மண்டூரம், செந்தூரம் ஆகியவற்றின் இயல்புகளைப் புகழ் பெற்ற மருத்துவ நூலின் வாயிலாகக் கற்றுத் தேர்ந்து

பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து,

தூய எண்ணெயும், லேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து,

வரும் நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து

கை நலம் உடையவனாக

முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வி அறிவையும் உடையவனே

மருத்துவன் ஆவான்.

அடுத்து 65ஆம் பாடல் உணவில் எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

உணவில் விலக்கு

கைவிலைக் குக்கொளும் பாலகப் பால்வருங்
          காரார்க் கரந்த வெண்பால்
    காளான் முருங்கைசுரை கொம்மடி பழஞ்சோறு
          காந்திக் கரிந்த சோறு
கெவ்வையில் சிறுகீரை பீர்க்கத்தி வெள்ளுப்பு
          தென்னைவெல் லமலா வகஞ்
    சீரிலா வெள்ளுள்ளி யீ ருள்ளி யிங்குவொடு
          சிறப்பில்வெண் கத்திரிக் காய்
எவ்வமில் சிவன்கோயி னிர்மா*ல் யங்கிரண
          மிலகுசுட ரில்லாத வூ
    ணிவையெலாஞ் சீலமுடை யோர்களுக் காகா
          வெனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்று
          மமலனே யருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே. 65

இதன் பொருள் :

ஐம்புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே! அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

கை விலைக்கு வாங்கும் பால்

ஆட்டுப்பால்

காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பால்

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்த சோறு,  செவ்வை இல்லாத சிறுகீரை, பீர்க்கு, அத்தி, வெள் உப்பு, தென்னை வெல்லம், பிண்ணாக்கு, சிறப்பில்லாத உள்ளிப்பூண்டு, சிறப்பில்லாத வெங்காயம், பெருங்காயம், சிறப்பு இல்லாத வெள்ளைக் கத்தரிக்காய், குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து கழிக்கப்பட்ட பொருள்கள்,

சூரியன் ஒளியும், விளக்கும் இல்லாத காலத்து உணவு

ஆகிய இவை அனைத்தும்  ஒழுக்கமுடையோருக்கு

ஏற்கத் தகாதவை என பழமையான அற நூல்கள் கூறும்.

தவிர்க்க வேண்டியவற்றை அறிந்து கொண்டோம். இனி 73ஆம் பாடல் எந்த இலையில் உண்ண வேண்டும் என்ற முறையைக் கூறுகிறது.

உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னபுர சுடனற் குருக்கத்தி
          மாப்பலாத் தெங்கு பன்னீர்
    மாகிலமு துண்ணலா முண்ணாத வோவரசு
          வசனஞ் செழும் பாடலம்
தாழையிலை யத்தியா வேரண்ட பத்திரஞ்
          சகதேவ முண் முருக்குச்
    சாருமிவை யன்றிவெண் பாலெருக் கிச்சிலிலை
          தனினுமுண் டிடவொ ணாதலால்
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்
          சாதங்கள் பல வருந்தல்
    சற்றுண்டன மெத்தவீ நணிதனையு மெய்ப்பிணி
          தனக்கிட மெனப் பருகிடார்
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலக
          னாகுமெம தருமை மதவே
    ளனுதினமு மன் தினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள்:

நாற்புறமும் கடல் சூழ்ந்த உலகில் வேளாளர் மரபில் சிறப்புற்றவன் ஆகிய எமது அருமை அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

வாழையிலை, புன்னை, புரசு, நல்குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் ஆகிய இலைகளில் குற்றமற்ற உணவைப் படைத்து உண்ணலாம்.

உண்ணத்தகாதனவோ எனில்,

அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை, அத்தி, ஆல் ஏரண்ட பத்திரம், சகதேவம், முள்முருக்கு ஆகிய இவையோடு

வெண்மையான பாலை உடைய எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது கூடாது.

இடைவிடாத சிற்றுண்டி, நீர் அடிக்கடி பருகல், பல் வகையான சோறுகளை உண்ணுதலும், சிறிதாக உண்ணல், மிகுதியாக உண்ணல் ஆகிய இவை அனைத்தும் உடல் நோய்க்கு இடமாகும்

ஆகவே தவிர்க்க வேண்டிய இவற்றைத் தவிர்த்து உண்ணல் வேண்டும்.

மேலே கண்ட பாடல்களில் பல விஷயங்கள் பெரு நகரங்களில் வாழ்வோருக்கு இன்றைய கால கட்டத்தில் பொருந்தாது. ஏனெனில் அவர்களுக்குப் பாலும் இப்படிக் கிடைக்காது; இலைகளில் சோறு உண்ணுதலும் அரிது.

ஆனால் கிராமங்களில் வாழும் லட்சக் கணக்கானோருக்கு இந்த விதிகள் இன்றும் பொருந்தும்; என்றும் பொருந்தும்.

கூடவே மேலை நாட்டு ஆய்வாளர்கள் நமது பழைய நூல்களை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றாக கடைப்பிடிக்க ஆரம்பிப்பதையும் மனதில் கொண்டால், இவற்றை கூடிய மட்டில் நாம் கடைப்பிடிப்பது நமது ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும் ஆயுளை நீட்டிக்கும் என்பதை அனுபவத்தால் அறியலாம்.

காலத்தால் அழியாத இப்படிப்பட்ட பாடல்கள் நூற்றுக் கணக்கில் நமது நூல்களில் உள்ளன. அவற்றை அறிவோம். ஆரோக்கியம் பெறுவோம். ஆயுளை நீட்டித்துக் கொள்வோம்

***

tags- அம்பலவாணக் கவிராயர் ,அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், நோயில்லா நெறி

புத்தக அறிமுகம் – 42

மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும்

பாகம் – 2

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்          

31. ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

32. ஸ்ரீ கபாலி சாஸ்திரி ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய மஹாகவி பாரதியார்!

33. புதுவை வாழ்க்கை – 1

34. பாரதியாரின் தம்பி – பரலி சு. நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்

35. மஹாத்மாவும் மகா கவியும்! – கல்கியின் கட்டுரைகள்!

36. பாரதிதாசன் கவிதைகள்!

37. நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

38. பாரதி பற்றிய கட்டுரைகள் – ரா.பி.சேதுப்பிள்ளை

39. காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – சீனி.விசுவநாதன்

40. மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் – சீனி.விசுவநாதன்

41. சுப்பிரமணிய பாரதி – பிரேமா நந்தகுமார்

42. ஆஷ் கொலை வழக்கு – ரகமி

43. மகாகவி பாரதியார் (கட்டுரை) – விஜயா பாரதி

44. வரகவி பாரதியார் – பண்டித வித்துவான் தி.இராமானுசன்

45. மகாகவி பாரதியார் – எஸ்.திருச்செல்வம்

46. பாரதியார் – வரலாறும் கவிதையும் – ப.மீ.சுந்தரம்

47. பாரதியும் உலகமும் – ம.ப.பெரியசாமித் தூரன்

48. பாரதி யுகம் – ப.கோதண்டராமன்

49. இரு மகா கவிகள் – க.கைலாசபதி

50. பாரதி ஆய்வுகள் – க.கைலாசபதி

51. பாரதி சபதம் – மது.ச.விமலானந்தம்

52. பாட்டும் சபதமும் – மது.ச.விமலானந்தம்

53. புதுமைப்புலவன் பாரதி – சுகி சுப்பிரமணியன்

54. பாரதி வழி – ப.ஜீவானந்தம்

55. பாரதி பாடம் – ஜெயகாந்தன்

56. பாரதி கண்ட சித்தர்கள் – சி.எஸ்.முருகேசன்

57. பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு – சா.தாசன்

58 பாரதியார் கவிதைகளில் அணிநலம் (1) – (2) சிவ. மாதவன்

59. வீர வாஞ்சி – ரகமி

60 வழி வழி பாரதி – சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் அது பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.

அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.

பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.com இல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பு முதல் பாகமாக வெளியிடப்பட்டது. அடுத்த 30 அத்தியாயங்கள் இரண்டாம் பாகமாக மலர்கிறது.

முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் பாரதி அன்பர்கள் விரும்பும் நூலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இந்தத் தொடர் வெளி வந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தில் அவரை உரிய விதத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் மேலும் பல நூல்களை இந்த இரண்டாம் பாகத்தில் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

பங்களூர்                                               ச.நாகராஜன்

21-3-2022 

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a comment