
Post No. 11,302
Date uploaded in London – – 28 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுளைக் காட்டு! – 1
ச.நாகராஜன்
கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருக்கிறார் என்றால் கடவுளைக் காட்டு!
விஞ்ஞானிகளில் பெரும்பாலோனோருக்கு இந்தக் கேள்வி எழுகிறது.
இதே கேள்வியைப் பு’திய நாத்திகவாதிகளும்’ கேட்கின்றனர்.
புதிய நாத்திகம் (New Atheism) என்னும் ‘நியூ அதியிஸம்’ கடவுள் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் மதமும் பகுத்தறிவற்ற தன்மையும் கொஞ்சம் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும் அது வலியுறுத்துகிறது.
கடவுளின் மீதான நம்பிக்கை பெரும் தவறு என்றும் டார்வினின் பரிணாமக் கொள்கையின் படியும் பல கோடி ஆண்டு இயல்பான வளர்ச்சியில் அணுத்துகள்கள் மாறி மாறி இயற்கைத் தேர்வின் படி மனிதனாக உருவானான் என்றும் அது வற்புறுத்துகிறது.
பழைய நாத்திகம் என்னும் கொள்கையில் ஊறிப் போன மடலின் மர்ரே ஓ’ஹேர் (Madalyn Murray O’Hare) முதலானோர் நாத்திகம் என்பது மதவாதக் கொள்கை போல ஒரு கொள்கை அல்ல என்றனர்.
ஆனால் புதிய நாத்திகமோ ‘கடவுள் இல்லை; இயற்கையின் இயல்பான பரிணாம எழுச்சியில் தான் அனைத்தும் உருவானது என்பது ஒரு தீவிரமான கொள்கை தான்’ என்று உறுதிபடக் கூறுகிறது.
இந்த புதிய நாத்திகம் என்ற சொற்றொடர் 2006ஆம் ஆண்டு கேரி உல்ஃப் (Gary Wolf) என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டது.
அதை உற்சாகமாக நாத்திகவாதிகள் பலரும் ஆமோதித்து வரவேற்றனர்.
இதற்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் உலகெங்கும் வெளியாகி விட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விட்டன.
காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும், ‘இந்தக் கடவுளைக் காட்டு, கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணத்தைக் காட்டு’ என்ற வாதத்திற்கு அவ்வப்பொழுது அந்தந்தக் காலத்திற்கேற்ப அறிஞர் பெருமக்கள் விடை அளித்து வந்துள்ளனர்.
இவர்களில் விஞ்ஞானிகளும் உண்டு; மெய்ஞானிகளும் உண்டு.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த லியனார்ட் யூலர் (Leonard Euler – தோற்றம் 15-4-1707 மறைவு 18-9-1783) ஒரு பிரபலமான கணித மேதை. இயற்பியல் விஞ்ஞானி. வானவியல் நிபுணர். பூகோளவியல் அறிஞர். தர்க்கத்தில் வல்லுநர். ஒரு பொறியியல் வல்லுநரும் கூட.
கணிதத்தில் அனலிடிக் நம்பர் தியரி, காம்ப்ளெக்ஸ் அனாலிஸிஸ், இன்ஃபைனட்ஸிமல் கால்குலஸ் (Analytic Number Theory, Complex Analysis, Infinitesimal Calculus) உள்ளிட்டவற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்து உலகை பிரமிக்க வைத்தவர் அவர்!
ரஷியாவில் செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் அமைந்திருந்த ராயல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்-இல் அனைவரும் போற்றும் ஒரு உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.
ஒரு நாள் பிரான்ஸை சேர்ந்த நாத்திகவாதியான டெனிஸ் டிடராட் (Denis Diderot) ரஷிய ராணியான காதரினின் அழைப்பின் பேரில் ரஷியாவுக்குவந்தார்.
எப்படியாவது ஆத்திகவாதியாக இருக்கும் யூலரை நாத்திகவாதியாக மாற்றுவது தான டிடராட்டின் நோக்கம்.
இதை அறிந்து கொண்ட யூலர் அவரை ராணியின் முன்னிலையில் பொது அவையில் இது பற்றி விவாதிக்க அழைத்தார்.
அரசவை கூட்டம் கூடியது.
யூலர் கம்பீரமாக டிடராட்டைப் பார்த்து, “ஸார்! ஏ ப்ளஸ் பி டு தி எந்த் பவர் டிவைடட் பை என் ஈக்வல்ஸ் எக்ஸ். தேர்ஃபோர் காட் எக்ஸிஸ்ட்ஸ். ரிப்ளை” என்று முழங்கினார்.
(Sir, a plus b to the nth power divided by n equals x; , therefore, God exists! Reply!)
கணிதத்தில் ஒன்றுமே தெரியாத டிடராட் முழித்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.
கூட்டத்தில் அனைவரும் சிரித்தனர். அவமானப்பட்ட டிடராட் மறுநாளே மூட்டை கட்டிக் கொண்டு பிரான்ஸுக்குத் திரும்பினார்.
கணிதத்தில் நிலை எண்கள் அல்லது மாறிலிகள் (Constants) பலவற்றை ஒன்று சேர்த்து அற்புதமான ஒரு சூத்திரத்தை யூலர் தரவே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் டிடராட் தவித்தார்.
கடவுள் என்பவர் கணிதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை பல கணித மேதைகள் வற்புறுத்தி வந்துள்ளனர்.

காலமும் கணக்கும் நீத்த காரணன் இறைவன்!
பிரபஞ்சமானது தானே தோன்றியது என்ற கூற்றை பிரபல விஞ்ஞானியான ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) தனது ஒரே ஒரு வாக்கியத்தால் தவிடு பொடி ஆக்கி விட்டார்.
பிரபஞ்சம் தானே உருவாக வேண்டுமெனில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு எண் அமைந்தால் மட்டுமே அது உருவாக முடியும். அப்படிப்பட்ட எண் எது என்று கேட்டால் அது இது தான் என்று அவர் ஒரு கணித சூத்திரத்தைக் கூறினார்.
அது இது தான்:-
Penrose has put ‘the probability against the emergence of Universe as 1 divided by ten raised to the power to the power of 123!’
கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த எண்ணை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்! இது அமைந்தால் தான் படைப்பவன் இன்றி பிரபஞ்சம் தானே உருவாகும் சாத்தியக்கூறு அமையும்!
ஆகவே படைப்பவன் – இறைவன் – ஒருவன் இருக்கிறான் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்!
**
புத்தக அறிமுகம் – 70
பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1)பிரமிடின் அபூர்வ சக்திகள்
2)பிரமிடா? ·ப்ராடா?
3)பிரமிட் கல்லறையின் புதிய ரகசியம்
4)உயிர்த்தெழ விரும்பும் உறைபனிச் சடலங்கள்
5)செத்தும் வாழ பல கோடி செலவழிப்போர்
6)நடமாடும் பிணம்
7)ரத்தம் உறிஞ்சும் டிராகுலா
8)மனித ரத்தத்தில் குளித்த மகாராணி
9)சூனியக்கலையின் சூத்திரதாரிகள்
10)மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?
11)மரணத்திற்குப் பின் – கார்ல் ஜங்கின் அனுபவம்
12)விமான விபத்தின் காரணங்களைக் கூறிய ஆவி
13)இறந்தும் எழுதினார் சார்லஸ் டிக்கன்ஸ்
14)சிந்தனையாளர் லாட்ஜின் அனுபவங்கள்
15)ஜெயிலுக்கு வந்த பேய்
16)பேயைப் படம் பிடித்த டி.வி.
17)ஸ்படிக மண்டை ஓடு காக்கும் உலக ரகசியம்
18)விளங்காத மர்மங்களின் தொகுப்பு
19)தானே எரிந்த விநோத சம்பவங்கள்
20)விநோதமான மழைகள்
21)கண்ணீர் விடும் அதிசய பொம்மை
22)உங்களிடம் சைக்கிக் பவர் உள்ளதா?
23)டெலிபதி மனிதர்
24)அயல் கிரகவாசிகள் நம்மைக் கடத்துகிறார்களா?
25)அயல்கிரகக் கடத்தல்
26)பறக்கும் தட்டைப் படம் பிடித்த பி.பி.சி. கேமராமேன்
27)படைவீரர்களை விழுங்கிய பறக்கும் தட்டு!
28)மர்ம வட்டங்கள் பற்றிய திரைப்படம்
29)அயல் மனித தேடல்
**.
நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
பிரமிடின் அபூர்வ சக்திகள் ஏராளம். அதன் மர்மங்களை விளக்கும் கட்டுரை உள்ளிட்ட 29 கட்டுரைகளை இந்த நூலில் காணலாம். உறைபனி சடலங்கள், நடமாடும் பிணம், ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மனித ரத்தத்தில் நிஜமாகவே குளித்த மகராணி, ஜெயிலுக்கு வந்த பேய் என்று பல்வேறு அதிசய சம்பவங்களை விளக்குகிறது இந்த நூல். டெலிபதி மனிதர், அயல்கிரகக் கடத்தல் என்று அயல் கிரகவாசிகள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இந்த நூலில் படிக்க முடியும்.
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**