
Post No. 11,315
Date uploaded in London – 2 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நூல்களை சேகரித்து, தேவையானவர்களுக்கு அவற்றை விநியோகிக்கும் ஒரு நல்ல வழக்கத்தைக் கொண்டவர் லண்டன் பத்மநாப ஐயர் . இலங்கைத் தமிழர் வட்டாரத்தில் இவர் பெயரை அறியாதவர்கள் குறைவு. வீட்டிற்குள் நுழையமுடியாத அளவுக்குப் புஸ்தகங்கள் இருக்கும் அவைகளை நீந்திக் கடந்தால் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருக்கும். அவர் எழுந்திருந்து நின்றுகொண்டு நம்மை உட்காரச் சொல்லி (இலங்கை த் தமிழ் பாஷையில் நம்மை இருக்கச்சொல்லி ) இந்தப் புஸ்தகங்களைப் பாருங்கள் என்று அடுக்கு அடுக்காக நம் முன்னேவைப்பார் . இடையிலே தேநீரும் கிடைக்கும் .
நான் எழுதிய 59 புஸ்தகங்களில் ஒரு பதினைந்து புஸ்தகங்களை அவருக்கு கொடுக்கச் சென்றபோது வழக்கம்போல புஸ்தகங்களை என் முன்னே அடுக்கினார். அவைகளில் நான் எடுத்த ஒரு நல்ல மருத்துவ புஸ்தகம் பற்றிய மதிப்புரை இதோ:-
நூலின் பெயர் தமிழர் மருத்துவம்
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்
முதல் பதிப்பு – டிசம்பர் 2021
பக்கங்கள் 224
விலை 250 ரூபாய்
வெளியீட்டாளர் – பட்டினம்
SALES OFFICE
AAZHI PUBLISHERS,
5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,
SALIGRAMAM , CHENNAI 600 093
கனடாவிலுள்ள டொரண்டோ நகரிலிருந்து அவர் எழுதிய புஸ்தக முன்னுரையில் பணிவோடு சொல்கிறார் —
“தமிழ் மக்களின் மருத்துவப் பாரம்பரியம் பற்றிய வரலாற்றை எழுதுவதற்குத் தகுதியான பலர் இருத்தல் கூடும் . எனினும் அவர்கள் இத்துறையில் பெரிதும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை மருத்துவம், தமிழ், வரலாறு ஆகிய பல துறைகளில் பரிச்சயம் உடைய வர்கள் மட்டுமே இது தொடர்பான முயற்ச்சியில் இறங்க முடியும் . இத்துறைகளில் எனக்குள்ள ஆர்வம் மட்டுமே எனது இம்முயற்சிக்கு உந்து கோலாய் இருந்தது .கடந்த 40 வருடங்களாக எனது தேடுதலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இச்சிறிய நூலை எழுதியுள்ளேன் இது தமிழர் மருத்துவத்தின் முழுமையானதோர் வரலாற்று நூலாக இல்லாவிடினும் வருங்கலத்தில் இது தொடர்பான விரிவான நூல்களுக்கு இந்நூல் அனுசரணையாக இருக்கும் என்பது என து நம்பிக்கையாகும்”
முன்னுரையில் கிடைக்கும் இன்னும் ஒரு தகவல்- கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு என்னும் பத்திரிக்கையில் 2016 முதல் 2018 வரையான கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக தகைசார் வாழ்நாட் பேராசிரியர் முதுமுனைவர் அ . சண்முகதாஸ் அணிந்துரையில் இந்த நூலின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
xxx
என் கருத்துக்கள்
தமிழர்களுக்கு உயர்வு நவிற்சி அணியில் ஆர்வம் அதிகம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நாங்கள் என்று எல்லாவற்றையும் சூப்பர்லேட்டிவ் டிகிரியில்(Superlative Degree) எழுதுவார்கள் . அப்படி யில்லாமல் நிதானமாக உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார் ஆசிரியர்.
அஸ்வினி தேவர்கள் செயற்கை கால் பொருத்திய செய்தி, ருக்கு வேதத்திலேயே இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, அதர்வண வேதத்தின் உப வேதமாகக் கருதப்படுவது ஆயுர்வேதம் என்று கூறி இந்திய மருத்துவத்தின் துவக்கத்தை முதல் அத்தியாயத்தில் காட்டுகிறார்.
முன்னர் ஒரு காலத்தில் ஒரு லட்சம் சுலோகங்களுடன் இருந்த ஆயுர்வேத நூல் பின்னர் 10,000 சுலோகங்களைக் கொண்ட எட்டுப் பாடங்களாக தொகுக்கப்பட்டது . இதனை ஈழத்தில் எழுந்த ஆயுள்வேத பரராசசேகரம் பின்வருமாறு கூறுகிறது
உன்னரும் கிரந்தம் எட்டிலக்கம் உள்ளதாம்
அன்ன நூல் முழுவது,ம் அறிந்து கற்றிட
உன்னருங் கலியுகத்து உணர்வின்றாதலிற்
பின்னதிற் சுருக்கமாய்ப் பிரித்துக்காட்டினான்
— பரராசசேகரம் , முதலாம் பாகம், பாடல் எண் 18
எட்டு பாடங்கள்
1.காயசிகிச்சா தந்திரம் (பொது மருத்துவம்) General Medicine
2.கெளமாரப்ரிய தந்திரம் (குழந்தை மருத்துவம் ) Paediatrics
3.பூதவிதிய தந்திரம் (மனநலக் கோளாறு மற்றும் தொற்றுவியாதி மருத்துவம் ) -the disease caused by evil spirits (psychiatry and infectious diseases
4.அ கத தந்திரம் (நஞ்சுமுறிப்பு) மருத்துவம் Toxicology
5.இரசாயன தந்திரம்( ஆயுள் நீட்டிப்பு மற்றும் உடல்வலு மேம்பாட்டு மருத்துவம் ) promoting longevity and stregth
6.வஜீகரண தந்திரம் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு மருத்துவம் ) sterility and aphrodisiacs
7.சலாக்கிய தந்திரம் (கண் மற்றும் தொண்டை , மூக்கு, காது நோய் மருத்துவம் ) Ophthalmology and the diseases of ear, nose and throat
8.சல்லிய தந்திரம் (அறுவை மருத்துவம் ) surgery
பின்னர் சரகர், தன்வந்திரி ஆத்ரேய புனர்வசு பற்றிய, நாம் அறியாத பல புதிய செய்திகளைத் தருகிறார் நூலாசிரியர்
நான் தினசரி சொல்லும் தன்வந்திரி மந்திரத்தையும் ஆசிரியர் முதல் அத்தியாயத்திலேயே கொடுத்திருப்பது என்னைக்கவர்ந்து இழுத்தது – (புஸ்தகத்தை நோக்கி.)
இது அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம். இதைச் சொன்னால் நோய்கள் வாரா ; வந்த நோய்களும் அகலும்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசாய
த்ரை லோக்ய நாதாய
மஹா விஷ்ணவே நமஹ
பொருள்
எல்லோர்க்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருப்பவரும் , சகல வித நோய்களைத் தீர்க்க மூவுலகத்தைக் காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரிக் கடவுளே உன்னை வணங்குகிறேன்.
ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் அவர் எடுத்தாண்ட நூல்களின் பெயர்களையும் சேர்த்துள்ளார். நூலாசிரியர் . 40 ஆண்டுக்காலத்தில் சேர்த்த தகவல்கள் என்பதற்கு இது சான்று பகரும்.
மதிப்புரையை முடிப்பதற்கு முன்னர் 20 அத்தியாயங்களில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன் :-
1. இந்திய துணைக்கண்டத்தில் தோன்றி வளர்ந்த மருத்துவக் கலை
2.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் பெளத்தத்தர்களின் பங்கு
3.சங்க கால தமிழகத்தில் மருத்துவக் கலை
4.பழந்தமிழ் இலக்கியத்தில் அறுவைச் சிகிச்சை பற்றிய குறிப்புகள்
5.வள்ளுவர் காலத்து மருத்துவ மரபு
6.ஆயுள்வேத மருத்துவப் பெயர்களில் அறநூல்கள்
7.ஆயுள்வேத மருத்துவத் துறையில் சம்ஸ்கிருத மொழி ஆதிக்கம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இயங்கிய ஒரு
ஆயுள்வேத ஆஸ்பத்திரி
8.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் தென்னிந்தியரின் பங்களிப்பு
9.தீதிலா வாகடம் செந்தமிழ் செய்திட
10. தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவம்
11.நோய்களைத் தோற்றுவிக்கும் காரணிகள்
12. நோய்களும் அவற்றின் குறிகுணங்களும்
13.இரசாயன தந்திரமும் இரச சாஸ்திரமும்
14. சித்தர்களின் சீனத் தொடர்பு
15.திருமூலரின் இரச சித்த பாரம்பரியம்
16. சித்த மருத்துவத்தின் தோற்றமும் அடையாளமும்
17. போகர் ஏழாயிரம்
18. வித்தியாசமான சித்தர்கள் சிலர்
19.பிற நாட்டவர்கள் பார்வையில் சித்தர்கள்
20.ஆயுள்வேதமும் சித்த மருத்துவமும்
ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்குத் தகவல் தரும் இந்த நூல், மருத்துவத்தில் – குறிப்பாக மருத்துவ வரலாற்றில் – ஆர்வம்கொண்ட அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல் ஆகும்
-சுபம்–
tags- ஆயுள்வேதம் , சித்த மருத்துவம், தமிழர் மருத்துவம், தன்வந்திரி, மருத்துவ நூல்
santhanam nagarajan
/ October 2, 2022nalla pani. paraattukal