ராமாயணத்தில் நதிகள் – 5 (Post.11,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,515

Date uploaded in London – 7 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி 

ராமாயணத்தில் நதிகள் – 5

ச.நாகராஜன் 

கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்: 

3. கங்கை

‘கங்கை என்னும் கடவுள் திரு நதி’ என்று கம்பன் போற்றும் தெய்வத் திருநதியைப் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.

கம்ப ராமாயணத்தில் இரண்டாவது காண்டமாக அமையும் அயோத்தியா காண்டத்தில் ஆறாவது படலமாக அமைவது கங்கைப்படலம்.

இதில் அருமையான 77 பாடல்கள் உள்ளன.

இவை அனைத்தையும் படித்து மகிழ்வதே சாலச் சிறந்தது. என்றாலும் இந்தத் தொடரில் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

பரிதி பற்றிய என்று தொடங்கும் பாடல் 9இல் கம்பன். –

‘சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும் விரி திரைப் புனல் கங்கை”

என்று கங்கை பற்றிக் குறிப்பிடுகிறான்.

வேதங்களைப் பயின்று மேம்பாடுற்ற குற்றமற்ற முனிவர் சூழ்ந்து, தங்கப் பெற்ற பரவுகின்ற அலை நீரை உடைய கங்கா நதி” என்பது இதன் பொருள்.

அடுத்த பாடலில்

கங்கை என்னும் கடவுள் திரு நதி

தங்கி வைகும் தபோதனர் யாவரும்

எங்கள் செல் கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகன் காண வந்து அண்மினார்

என்கிறான்.

 கங்கை என்று சொல்லப்படுகின்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த நதிக் கரையில் தங்கி வாழ்கின்ற தபஸ்விகள் அனைவரும் ‘நாங்கள் தவம் செய்து அடையும் புகலிடமாகிய பரம்பொருள் இங்கேயே வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து அழகிய திருக் கண்களை உடைய இராமபிரானைத் தரிசிப்பதற்காக வந்து நெருங்கினார்கள்.

 இப்படி தபஸ்விகள் மட்டுமல்ல, கங்கா நதியே இராமபிரானை கைகூப்பி வணங்கிப் போற்றுகிறாள்:

பாடல் 17 : – 

கன்னி நீக்கு அருங் கங்கையும் கை தொழாப்

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர்; யானும் இன்று என் தந்த

உன்னின் நீக்கினன் உய்ந்தனனெனால் என்றாள்

  அழியாத் தன்மையின்று நீங்குதல் இல்லாத ஜீவ நதியான அந்த கங்கை இராமபிரானை கை கூப்பி வணங்கிக் கூறுகிறாள் :

 “ உலகத்தவர் சொல்ல முடியாத மிகுதியான பாவத்தை என்னிடத்தில் மூழ்குவதால் போக்கிக் கொள்வர்; இன்று இப்போது அந்தப் பாவங்களை எல்லாம் திரிவிக்கிரமனாகிய ஶ்ரீ பாதத்திலிருந்து என்னை உண்டாக்கிய உன்னாலே நீ என்னிடத்து மூழ்குவதால் போக்கினவளாய் உய்ந்தேன்”

கங்கையை ‘தள்ளு நீர்ப் பெருங்கங்கை” (பாடல் 19) – மோதும் தன்மையை உடைய நீரையுடைய சிறந்த கங்கை அலை” என்கிறான் கம்பன்.

கங்கையில் சீதை, ராமன் குளித்ததைப் பாற்கடலுடன் வர்ணிக்கும் கம்பன், சீதைகங்கையில் குளித்ததால், கங்கை நறு மணம் பெற்றாள் என்கிறான்.

(நாவி நாண்மலர் கங்கையும் நாறினாள்)

 இராமனே வந்து மூழ்கியதால் கங்கா நதிக்கு மகிமை கூடுகிறதாம்.

இங்கு கம்பன் சமத்காரம் தோன்ற ஒரு கவின் மிகு சொற்றொடரைக் கையாள்கிறான் :

“கங்கையிற்றருங் கங்கையினாடினான்”

 கம் – நீரினால்;

கையின் – கையின் மூலமாக;

தரும் – உண்டாக்கிய

கங்கையின் – கங்கா நதியில்

ஆடினான் – நீராடினான்.

கம் + கை = கங்கை – கையினால் உண்டாக்கிய கங்கையில், அந்த ராமனே வந்து மூழ்கினான் என்பது நிருத்தி அலங்காரம் என்னும் பிரிநிலை நவிற்சி அணி ஆகிறது. 

அடுத்து இராமனைப் பார்க்க குகன் வருகிறான். அவனை கம்பன், ‘கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான்’ – கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன்’ என வர்ணிக்கிறான்.

 அடுத்து அயோத்தியா காண்டத்தில் 11வது படலமாக அமைவது குகப்படலம்.

இதிலும் கங்கா நதியின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது.

கம்பன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் பெருமையைப் பேசாமலிருக்க முடியுமா, என்ன?

‘பூவிரி பொலன் கழல் பொரு இல் தானையான்

காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீ இ’  (குகப்படலம் பாடல் 1)

 என்று கூறுகிறான்.

“அழகு மிக்க பொன்னால் ஆகிய வீரக் கழலையும் ஒப்பில்லாத சேனையையும் உடைய பரதன் காவேரி பாயும் சோழ நாட்டை ஒத்த கழனிகளை உடைய கோசல தேசத்தை விட்டு நீங்கி” என்பது இதன் பொருள். 

கோசல தேசம் காவிரி நாடு போல இருந்ததாம். என்ன அழகிய புகழ் மொழி?! 

                          ****                   தொடரும்

Leave a comment

Leave a comment