தமிழுக்குக் கொடுத்த ஓரி! (Post No.11,634)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,634

Date uploaded in London –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 43 

தமிழுக்குக் கொடுத்த ஓரி!

ச.நாகராஜன் 

பழங்காலத்தில் கொங்குமண்டலத்தில் சிறப்புற அமைந்துள்ள பகுதி கொல்லி மலை.

இந்தக் கொல்லி மலைக்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் பெரும் வள்ளலாக வாழ்ந்து வந்தான் ஓரி என்னும் மன்னன்,

தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளும் படி எல்லா வளப்பமும் பொருந்தியதாக அமைந்திருந்தது கொல்லி மலை. கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்டு வந்தான் ஓரி.

அவன் அல்லும் பகலும் தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்ற பெயரையும் பெற்றான்.

 இவனை ஆதனோரி என்று வல் வில் ஓரி என்றும் கூறுவர்.

அகநானூறு, “ஒரி பல்பழப்பலவின் பயங்கெழு கொல்லி” என்றும் குறுந்தொகை, “ வல்விலோரி கொல்லிக் குடவரை” என்றும் கூறுவதைப் பார்க்கலாம்.

கொல்லிக் குடவரை என்பதால் கொல்லி மலையின் மேற்குப் பகுதியே இவனது பகுதி எனத் தோன்றுகிறது.

கொல்லி மலையின் மேற்குப் பகுதி பூந்துறை நாட்டின் இணை நாடான ஏழூர் நாட்டின் தொடர், ராசிபுர நாட்டின் பகுதி, வாளவந்தி நாட்டின் பங்கான தூசியூர் நாட்டினிடமும் இது பொருந்தியுள்ளது.

கடையெழு வள்ளல்களில் இன்னொருவனான காரிக்கு இவன் பகைவன். பரணர் நற்றிணையிலும் (265ஆம் பாடல்), கபிலர் 320ஆம் பாடலிலும், குறுந்தொகை 100ஆம் பாடலிலும் இவன் சிறப்பிக்கப்பட்டிருக்கிறான்.

கொல்லி மலையின் மேற்குப் பகுதிகள் இன்றும் சிறப்புற இருக்கின்றன. வாளவந்தி நாடு – வலப்பூர் நாடு – அரியூர் நாடு – குண்டூர் நாடு – தேவானூர் நாடு – சேவூர் நாடு – தின்னனூர் நாடு – ஆகிய இந்த ஏழு நாடுகளும்  சேலம் மாவட்டத்தில் நாமக்கல் பகுதியில் உள்ளன.

பயில நாடு – பிறக்கரை நாடு – சித்தூர் நாடு – இடைப்புளி நாடு – திருப்பளி நாடு – குண்டுனி நாடு – ஆலத்தூர் நாடு ஆகிய இந்த ஏழு நாடுகளும் ஆற்றூர் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஓரியை கொங்குமண்டல சதகம் பாடல் 43இல் பாராட்டிப் புகழ்கிறது இப்படி:

விரையார் தொடையணி மூவேந்த ராசை மிகுந்துநச்சத்

தரைமீ தெலாவள முஞ்செறி கொல்லித் தடவரையாள்

துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரந்து செம்பொன்

வரையா தளித்தநல் லோரிவள்ளல் கொங்கு மண்டலமே

 பொருள் :

தமிழ்நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளத் தக்க எல்லா வளப்பமும் பொருந்திய கொல்லி மலைக்கு அரசனாய், அல்லும் பகலும் ஓயாது தமிழுக்குச் செம்பொன் கொடுப்போனான ஓரி என்னும் வள்ளலும் கொங்குமண்டலத்தைச் சார்ந்தவனே என்பதாம்.

***

 tags-   கடையெழு வள்ளல், ஓரி ,கொல்லி மலை

Leave a comment

Leave a comment