london swaminathan in BBC Studio, Bush House, London
Post No. 11,642
Date uploaded in London – – 7 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
மதுரையில் ‘தினமணி’-யில் 16 வருடம் சீனியர் சப் எடிட்டராக வேலைபார்த்த பின்னர் 1987 ஜனவரியில் பி.பி.சி BBC அழைப்பின்பேரில் லண்டனுக்கு வந்தேன் . என்னை ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்ற , பி.பி.சி வெளிநாட்டு ஒலிபரப்பின் கிழக்கத்திய சேவையின் துணைத் தலைவர் (David Page, Asst. Head of BBC Eastern Service) டேவிட் பேஜ் என்னைப்பார்த்து வியந்தார் ; நோஞ்சானாக, ஒல்லியாக, ஒரே ஒரு பெட்டி , ஒரே ஒரு கைப்பையுடன் இறங்கிய என்னைப்பார்த்து காரின் பின்பக்கத்தை பூட்- டைத் திறந்து மற்ற பெட்டிகள் எங்கே ? என்றார். ‘இந்த இரண்டு’தான் என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே என் தாத்தாவின் கோட்டைக் கொண்டு வந்திருக்கேன்; இந்த ஊரில் உல்லன் கோட் Woollen Coat இல்லாமல் இந்தக் குளிரில் இருக்கக்கூடாது என்று சொல்லி ‘கோட்’ டைக் கொடுத்தார். அதற்குள் 3 சாமிநாதன்கள் நுழையும் அளவுக்கு இடம் இருந்தது. இந்தியன் இங்கிலீஷில் நான் என் வாழ்நாளில் விமானத்தைப் பார்ப்பதும் வெளிநாட்டுக்கு வருவதும் இதுதான் முதல் தடவை என்றேன். அடுத்த சில நாட்களில் லண்டனை மூழ்கடிக்கும் அளவுக்குப் பனி கொட்டித் தீர்த்தது பத்திரிகைகள் 130 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு அது என்று எழுதித் தீர்த்தன
டேவிட் பேஜ் என்னிடம் சொன்னார் – இப்பொழுது கிறிஸ்தமஸ் -புத்தாண்டு விடுமுறைக் காலம் என்பதால் பி பி சி ஹாஸ்டல் மூடியிருக்கிறது . ஆகையால் உன்னை பி பி சி தமிழோசையில் உன்னுடன் வேலை பார்க்கும் இலங்கைப் பெண்மணி Mrs ஆனந்தி சூர்யபிரகாசம் வீட்டில் முதல் 3 நாட்களுக்குத் தங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். எனக்கு வெளி உலகமே தெரியாது. நான் வெஜிட்டேரியன். என்றேன். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் கவலை வேண்டாம் என்றார்.
அங்கே போனவுடன் நான் முட்டை, மீன், மாமிசம் சாப்பிடாத வெஜிட்டேரியன் என்றேன். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னை வீட்டில் ‘சாமா’ என்றுதானே கூப்பிடுவார்கள்; அதுவும் தெரியும் என்றனர். இதென்னடா? சி ஐ ஏ CIA , கே ஜி பி KGB போன்ற உளவு அமைப்புகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே என்று பயந்தேன். ஆனால் அன்பே வடிவான, அமைதியி ன் உருவான சூர்யபிரகாசம் (ஆனந்தியின் கணவர்) உனக்காக தனி பாத்திரத்தில் வெஜிட்டேரியன் உணவு ஆக் கி வைத்துள்ளோம் என்றார். மிகவும் சுவையான உணவு. அன்று மட்டுமல்ல. பி பி சி ஹாஸ்டலில் என்னை விட்ட பின்னரும் கூட, வாரம் தோ றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்யப்பிரகாசம் சமைத்த சுவையான உணவு கிடைத்தது. அவர்தான் அந்த வீட்டில் சமைப்பவர். ஒரே வாரத்துக்குள் தமிழ் திரைப்பட நடிகை சுஹாசினி, அவருடைய சகோதரி டாக்டர் நந்தினி, அவரது கணவர் ஆகி யோரும் அங்கே வந்தனர். ஒரு புறம் வெஜிட்டேரியன் விருந்து மற்றோர் புறம் அசைவ விருந்து . ஆனால் சுஹாசினி நந்தினி போன்றோரும் சைவ உணவு மட்டுமே சாப்பிவிட்டனர் .
சில வாரங்கள் கழிந்தன. என்னை சென்னையில் இன்டெர்வியு செய்து, தமிழோசை ப்ரொட்யூசராகத் தேர்ந்தெடுத்த, இந்தி – தமிழ் சேவைப் பிரிவின் தலைவர் கைலாஷ் புத்வார் (Kailash Budhwar) எங்கள் அறைக்குள் நுழைந்தார். என்னைப்பார்த்து திகைத்தார்.

ஆங்கிலத்தில் அளவளாவினார்
உன்னை ஒரு வாரத்துக்கு முன்னர் பார்த்ததைவிட இப்பொழுது சோர்ந்து போயிருக்கிறாயே . என்ன விஷயம்? என்ன நடக்கிறது? என்று வினவினார்.
இல்லை; நீங்கள் என்னைத் தங்க வைத்துள்ள பி பி சி ஹாஸ்டலில் வெஜிட்டேரியன் உணவே கிடையாது. அரை வேக்காடு அரிசி மட்டும் உள்ளது அத்தோடு வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் மட்டும்தான் ஒரே ஒரு வேளை சாப்பிடுகிறேன். மற்ற நேரம் எல்லாம் ரொட்டி, சான்டவிச்–தான் என்றேன். பேசாமல் அடுத்த அறைக்குப் போனார். அது வங்காளி ஒலிபரப்புக்காரர்கள் அறை . அங்கிருந்து பங்கஜ் ஷா என்ற ஒருவரை அழைத்து வந்து, பங்கஜ் இன்று மா லை ஒலி பரப்பு முடிந்தவுடன் சுவாமிநாதனை இந்தியன் ஒய், எம் சி, ஏ ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வசதி செய். நா ன் இப்போதே அவர்களுக்குப் போன் செய்கிறேன். என்றார். மாலையில் அங்கே சென்றோம். பி பி சி என்று சொன்னவுடன் ராஜ உபசார த்துடன் ஆறு மாதங்களுக்கு தங்குவதற்கு அறை ஒதுக்கினார்கள். அங்கே பக்கா இந்திய உணவு கிடைத்தது. ஒரு புறம் வெஜிட்டேரியன் மறு புறம் நான் வெஜிட்டேரியன். ஆறு மாதத்துக்கு சுகபோகம்தான் ; பின்னர் இந்தியாவிலிருந்து மனைவியும் மகனும் வந்து சேரவே பி பி சியில் , அவ்வப்போது குரல் கொடுக்க வரும் மைத்ரேயி கணேசன் மூலம் ஒரு படேல் வீட்டு மாடியில் தங்கினோம். நிற்க.
xxx
மீண்டும் பிபிசி உலக சேவைக்கு வருவோம்
500 பேர் எழுதிய தேர்வில் முதன்மையில் நின்ற என்னைத் தேர்ந்தெடுத்த கைலாஷ் புதவார், பி பி சி கான்டீன் கமிட்டில்யிலும் மெம்பர்.. என்னை மனதிற்கொண்டு இனி பி பி சி கான்டீனில் தினமும் லஞ்ச் நேரத்தில் குறைந்தது ஒரு வெஜிட்டேரியன் டிஷ் vegetarian dish இருக்க வேண்டும். அதைத் தனியாக வெஜிட்டேரியன் போர்டின் கீழ் வைக்க வேண்டும். கரண்டியை மிக்ஸ் mix பண்ணக்கூடாது. வெஜிட்டேரியன் என்பது தெளிவாகத் தெரிவதற்காக மெனு Menu Borad போர்டில் அதை பச்சை வண்ணக் Green Logo குறியில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு என்னிடமும் தெரிவித்தார். அப்படியே நடந்தது . எனக்கும் மகிழ்ச்சி.
ஒரு வாரம் சென்ற பின்னர் மீண்டும் என் அறைக்கு வந்தார். சுவாமிநாதன் தினமும் 12 மணிக்கு கான்டீன் திறந்தவுடன் நீதான் முதலில் நிற்க வேண்டும். ஏனெனில் சைவ உணவுக்கு நீண்ட கியூ நிற்கிறதாம். நீ முதலில் சாப்பிட்டு விடு ; தாமதமாகப் போனால் கிடைக்காது என்று சொன்னார். நான் சிரித்துக்கொண்டே தமிழ்ப் பழமொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன் – பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று. அவரும் பலத்த சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினார்.

தனி ஒருவனுக்காக பி பி சி கான்டீன் மெனு Menu வையே மாற்றிய கைலாஷ் புதவாரை (Kailash Budhwar) நான் மட்டுமல்ல; வெஜிட்டேரியன் உணவை விரும்பும் வெள்ளைக்காரர்களும் நன்றியுடன் என்றும் நினைவு கூறுவர்.
1987ல் இலங்கை அகதிகளோ முஸ்லீம் அகதிகளோ குவியத் தொடங்காத காலம். ஒய் எம் சி ஏ Y M C A பக்கத்திலுள்ள ஒன்றிரண்டு வெஜிட்டேரியன் உணவு விடுதிகளுக்கு மேலாக, அதிகம் சைவ உணவு கிடைக்காத நகரம் லண்டன் . இப்போது இலங்கை அகதிகள் வருகையாலும் இந்திய கம்பியூட்டர் கும்பல் வருகையாலும், தடுக்கி விழுந்தால் சைவ உணவு விடுதியில்தான் விழுவீர்கள்.
(திரு கைலாஷ் புதவார், திரு. சூர்ய பிரகாசம் ஆகியோர் இப்பொழுது சொர்க்கத்தில் வாசம் செய்கின்றனர் )
–subham—tags. பிபிசி தமிழோசை கான்டீன் , கைலாஷ் புதவார், வெஜிட்டேரியன் உணவு,