
Post No. 12,057
Date uploaded in London – – 29 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகுதி- 2
அந்தப்புரம்

சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் ; இங்கு இரண்டு அறைகள் இருந்தன.இப்பொழுது ஒரு அறையின் பகுதி மட்டுமே இருக்கிறது. இங்கு ராஜா வீட்டுப் பெண்கள் இசை, இலக்கிய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர் .
நாடக சாலை
நாடக சாலையின் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கின்றன; மேலே செல்வதற்கு இரு புறமும் படிகள் இருக்கின்றன.மன்னர், தன் மனைவி மக்களுடன் தீவர்த்தி வெளிச்சத்தில் நாட்டிய , நாடகங்களைக் கண்டு மகிழ்ந்த இடம்.
ஆயுத சாலை
அந்தப்புரத்திற்கு மேற்கில் ஆயுத சாலை இருந்தது. நாடக சாலையின் மேற்கில் வசந்த வாவி என்னும் தடாகம் இருந்தது. அதைத் தாண்டி மல்யுத்தம் செய்யும் இடம், ஆட்டுக்கிடாய் சண்டை நடக்கும் இடம், சொந்தக்காரர்கள் வசிக்கும் வீடுகள் இருந்தன..மிகவும் திட்டமிடப்பட்டு கட்டிய அரண் மனை இது.
தேவி பூஜைக் கோவில்
நாடக சாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோவில் இருந்தது இங்கு திருமலை நாயக்கர் தினமும் வருவார். ராஜ ராஜேஸ்வரியை வணங்குவார் . கோவிலுக்கு முன்னர் ஒரு குளமும், நந்த வனமும் இருந்தன .
ரங்க விலாசம்
மதுரையில் மஹாலுக்கு அருகிலுள்ள பத்துத் தூண் பகுதியில் 10 தூண்களைக் காணலாம். இதற்கும் மேற்கில் ரங்க விலாசம் இருந்தது நாயக்கரின் தம்பி முத்தியாலு இங்கு வசித்ததால் இதுவும் சொர்க்க விலாசம் போலவே இருந்திருக்க வேண்டும் .
அரண்மனை வாசல்
பத்துத் தூண்களின் கிழக்கில் அரண்மனை வாயில் இருந்தது. அங்கு 18 இசைக் கருவிகள் வாசிக்கும் இடமும், அலங்கார வேலைப்பாடு நிறைந்த வாசலும் இருந்தது. இப்பொழுது இதை நவபத்கானா தெரு என்று அழைக்கிறார்கள் ; 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெரும்பாலான பகுதிகளை அடையாளம் காண முடிந்தது ; அவைகளைச் செப்பனிட்டபோதும் பராமரிப்பின்றி அழிந்துபோயின ;1837ல் மதில் சுவர் இடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நாயக்கரின் பேரன் அரண்மனையின் முக்கியப் பகுதிகளை இடித்து அவைகளைத் திருச்சி நகருக்குக் கொண்டு சென்று புதிய அரண்மனை கட்டுவதற்கு முயற்சி செய்தான் ; அதுவும் நிலைக்கவில்லை .மீதியிருந்த பகுதிகளை சென்னை கவர்னர் நேப்பியரும் பின்னர் டாக்டர் இரா நாகசாமி தலைமையில் வந்த தொல் பொருட் துறையினரும் (அரண்மனையின் பகுதிகளை) பாதுகாத்தனர்.
வாஸ்த்து சாஸ்திரம் கற்போர், இந்த அரண்மனையின் எந்தப் பகுதியில் என்னென்ன இருந்தது என்பதைக் கற்று அறிவது பயன்தரும் .
மதுரை மீனாட்சி கோவிலை திருமலை நாயக்கர் எப்படி அழியாத சின்னமாக மாற்றினார் என்பதை மதுரைக் கோவில் திருப்பணி மாலை பாடல் சொல்கின்றது :–

உரக்க வெகு ரொக்கம் கொடுத்துப் படங்கு தூண்
உத்திரம் முதல் பழங்கல்
ஒடிந்தன பிடுங்கி நலமாய் அமைத்துக் காரை
யோடு சீரணம் அகற்றி
அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டுநன்
றாய்க் குழைத்துச் செங்கலும்
அடுக்கா ப்பரப்பி க் கடுக்கா யொடு ஆமலகம்
அரிய தான்றிக்காய் உழுந்து
ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரினில்
ஊறிய கடுஞ்சாறும் வி ட்டு
ஊழிக்காலங்களிலும் அசையாத வச் சிரக்
காரை விட்டோங்கும் அம்மை
சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலும்
செப்பமிட்டுவித்து நன் றாய்ச்
செய்வித்த புண்ணியம் சதகோடி புண்ணியம்
திருமலை மகீபனுக்கே.
தற்கால பொறியியல் மாணவர்கள் இதில் சொன்ன பொருட்களைக் கலந்து கட்டிடம் கட்டிப் பார்க்க வேண்டும். சோதனை முறையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் இதை ஆராய வேண்டும்.
XXXXX

திருமலை நாயக்கர் வரலாறு
தந்தையின் பெயர்- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர் பிறந்த நாள் – தைப் பூசம் (பொ .ஆ 1584)
ஆட்சிக்காலம் – 1627 – 1659
ஆண்ட பகுதிகள் – திருச்சி முதல் திருவனந்த புரம் வரை
தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் பெரும்பகுதி
திருச்சியில் இருந்த தலைநகர் 1624ல் மதுரைக்கு மாற்றப்பட்டது
செய் த போர்கள் – மைசூர் போர், திருவாங்கூர் போர் , இராமநாதபுரம் போர், செஞ்சிப் போர்
தானைத் தலைவன் – தளவாய் இராமப்பையன்
துணைப் படைத் தளபதி – அரங்கண்ண நாயக்கர்
திருப்பணிகள் – மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவிலின் வானளாவிய, உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்; அதிசய சிற்பங்கள் நிறைந்த புது மண்டபம், 2 பெரிய தேர்கள், சிவா பெருமானுக்கும், அன்னை மீனாட்சி அம்மனுக்கும் விலை மதிக்கவொண்ணாத நகைகள்
ஏற்படுத்திய விழாக்கள் -சித்திரைத் திருவிஆ, வைகாசி வசந்த விழா, ஆவணித் திருவிழா, புரட்டாசி நவராத்ரி விழா. அவர் பிறந்த நாளான தைப்பூசத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் தெப்பத் திருவிழா
திருப்பணி செய்த வேறு கோவில்கள் – அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவானைக்காவல், திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி கோவில்கள்
அவர்காலத்தில் வாழ்ந்த மற்றும் அவரது சபையை அலங்கரித்த புலவர்கள் :-
குமர குருபரர் ( அவர் யாத்த நூல்கள் — மீனாட்சியம்மை பிள்ளை த் தமிழ், கந்தர் கலிவெண்பா);
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (அஷ்டப் பிரபந்தங்கள்);
சுப்பிரதீபக் கவிராயர் (விறலி விடு தூது, கூளப்ப நாயக்கன் காதல் );
நீல கண்ட தீக்ஷிதர் ( நிறைய சம்ஸ்க்ருத நூ ல்கள் )
சபைக்கு வந்த வெளிநாட்டினர் – கிறிஸ்தவ பிரசாரகர் ராபர்ட் டி நோபிளி
நாயக்கர் இறந்த வருடம் – 1659
( திருமலை நாயக்கர் பற்றிய விவரங்கள், தொல்பொருட் துறைப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி தொகுத்தது . அவர்தான் மஹால் பற்றிய தமிழ், ஆங்கிலப் பிரசுரத்தை வெளியிட்டு நாயக்கரின் புகழ் பரப்பினார். 1976-ம் ஆண்டில் அவர் நடத்திய கல்வெட்டு முகாமில் நாயக்கரின் உருவங்கள் ஒவ்வொரு கோவிலிலும் வெவ்வேறு வடிவத்தில், கோணத்தில் காணப்படுகின்றன என்று சொன்னார்)
.jpg)
(கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டபோது மதுரை ஆர். எஸ்.எஸ். இயக்கத்தினர் கோவிலுக்கு எதிரேயுள்ள புது மண்டபத்தில் பெரிய கண்காட்சியை ஏற்பாடு செய்தனர். பல வாரங்ககளுக்கு நடந்த அந்தப் படக்காட்சிக்கு ஏராளமான மக்கள் வந்தனர் ;அப்போது காலை முதல் மாலை வரை நானும் அங்கு சேவை செய்தேன் . ஆர். எஸ்.எஸ். பிரசாரகர் சிவராம்ஜி (சிவராம் ஜோகலேகர்) பல சுவையான விஷயங்களை சொல்லுவார். நாள் தோறும் ஒலிபெருக்கி மூலம், பகவத் கீதை, மராட்டிய ஞானேச்வரி கீதங்கள், தமிழில் உள்ள பக்திப்பாடல்களை ஒலிபரப்பினோம் .)
–SUBHAM–
TAGS- திருமலை நாயக்கர், மதுரை , மீனாட்சி கோவில், பத்துத் தூண், நவபத்கானா , இரா.நாகசாமி, அரண்மனை, மஹால்





.jpg)









