
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,076
Date uploaded in London – 3 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத சுபாஷிதம்
புண்ணியமான பெயர்கள்!
ச.நாகராஜன்
புண்ணியமான பெயர்கள்!
புண்ணியமான பெயர்களைச் சொல்வது கூட புண்ணியம் தான்.
நள மஹாராஜன், யுதிஷ்டிரர், ஜனக மஹாராஜன், ஜனார்தனர்
இவர்கள் பெயர்கள் புண்ணியமான பெயர்கள்.
புண்யஸ்லோகோ நளோ ராஜா புண்யஸ்லோகோ யுதிஷ்டிர: |
புண்யஸ்கோகோ விதேஹஸ்ச புண்யஸ்லோகோ ஜனார்தன: ||
மனிதர்களில் நான்கு வகை!
மனிதர்களில் நான்கு வகை உண்டு.
1) சத்புருஷர்கள் – தன்னலமற்று மற்றவர்களுக்கு உதவி புரிபவர்கள்
2) சாமான்யா – சுயநலத்துடன் மற்றவர்களுக்கு உதவி புரிபவர்கள்
3) மானுஷ ராக்ஷஸா – சுயநலத்திற்காக மற்றவர்களின் நலத்தைக் கெடுக்கும் மனித அரக்கர்கள்
4) நிரர்தகம் பரஹிதம் நிகந்தி – எந்த வித காரணமுமின்றி மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிப்பவர்கள்
ஏதே சத்புருஷா: பரார்தகடகா: ஸ்வார்தம் பரித்யஜ்ய யே
சாமான்யாஸ்து பரார்தமுத்யமம்ருத: ஸ்வார்தீவிரோதேன யே |
தேமீ மானுஷராக்ஷஸா: பரஹிதம் ஸ்வார்தாய நிகநந்தி யே
யே நிகநந்தி நிரர்தகம் பரஹிதம் தே கே ந ஜானீமஹே!
– நீதி சதகம் 64
புத்தகத்தை எப்படிக் காப்பது?
நம்மிடமிருக்கும் நல்ல புத்தகத்தை எப்படியெல்லாம் யாரிடமிருந்தெல்லாம் காக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!
தைலம் – எண்ணெய் படாமல் பத்திரமாக நமது புத்தகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
நீர் – தண்ணீர் பட்டால் அவ்வளவு தான்! நீர் படாத இடத்தில் இருக்க வேண்டும்.
சிதில பந்தனா – பைண்டிங் செய்யும் போது சரியாகச் செய்ய வேண்டும். தவறான முறையில் புத்தகத்தைத் தைத்தால், பைண்ட் செய்தால் நீடித்து இருக்காது!
மூர்க ஹஸ்த தானம் – இது மிக முக்கியமானது. அறிவற்ற ஒருவன் கையில் புத்தகத்தைக் கொடுத்தால் இருவகையில் நஷ்டம். நமக்கும் பிரயோஜனம் இல்லை; அவனுக்கும் இல்லை!
தைலாத்ரக்ஷேத் ஜலாரக்ஷேத் ரக்ஷேத் ஷிதிலபந்தனாத் |
மூர்கஹஸ்தே ந தாதவ்யமிதம் வததி புஸ்தகம் ||
புகழப்பட வேண்டியவை
புகழவும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா? யாரெல்லாம் அல்லது எதெல்லாம் புகழப்பட வேண்டியவைகள்? இதோ பட்டியல்!
ஜீரணம் அன்னம் – நன்கு ஜீரணித்த உணவு
கதாயௌவன பார்யா – இளமை கழிந்து விட்ட நிலையில் இருக்கும் மனைவி
விஜித சங்க்ராம சூரன் – போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனான சூரன்
கதபாரா தபஸ்வி – தனது லக்ஷியத்தை எட்டி விட்ட தபஸ்வி
ஜீர்ணமன்னம் ப்ரஷம்சந்தி பார்யா ச கதயௌவனாம் |
ஷூரம் விஜிதச்ம்க்ராமம் கதபாரம் தபஸ்வினம் ||
– விதுர நீதி ||| – 69
சரியான அளவில் எடுத்துக் கொண்ட உணவு எதைத் தரும்?
சரகர் கூறும் ரகசியம் இது:
சரியான அளவில் எடுத்துக் கொண்ட உணவு எதைத் தரும்?
1) பலம் – வலிமை
2) வர்ண – உடல்வாகு, நிறம்
3) சுகம் – சந்தோஷம்
4) ஆயுள் – நீண்ட ஆயுள்
மாத்ராவத்ய ஆசன மஷிதமநுபஹத்ய ப்ரக்ருதிம் பலவர்ணசுகாயுஷா யோஜயத்யுபயோக்தகாரம் |
சரக சூத்ரம் – V 8