
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,086
Date uploaded in London – 5 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் நாளிதழில் 1-6-2023 அன்று வெளியான கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது
ஜூன் 1 – ஹெலன்கெல்லர் நினைவு நாள்
தடைகளை அகற்றும் விடைகள்! – 2
ச.நாகராஜன்
மரங்களின் நாயகி!
2021 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளஸி கௌடாவும் ஒருவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை.
உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.
30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்!
மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது.
காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர்.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17ஆம் வயதிலேயே இழந்து விதவையானார்.
பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.
அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.
நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம்.
அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.
சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர்.
தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர்.
மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘விருக்ஷ தேவி’ என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.
மனம் போன போக்கில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கைச் செல்வத்தை மனித குலம் அழிக்க முற்படும் போது அதைத் தடுத்து விழிப்புணர்வை ஊட்டும் துளஸிகள் நிறைய பேர் நமது நாட்டிற்குத் தேவை அல்லவா!
இயற்கையை அழித்தால் வரும் தடைகள் ஏராளம்! அந்தத் தடையைப் போக்கும் விடையாக அமைகிறார் துளஸி!
கல்லூரியில் படிக்க 2500 மைல் நடந்தவர்!
கயிரா : தோற்றம் : 1942 மறைவு 14-10-2012
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நியாஸாலேண்டில் மப்லே என்ற கிராமத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் லெக்ஸன் கயிரா. பிறந்தவுடன் குழந்தையை அதன் தாயார் டிடிமு ஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். ஏனென்றால் குழந்தையை வளர்ப்பதற்குப் போதுமான வசதி அவரிடம் இல்லை. அண்டை அயலார் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை டிடிமு ஆற்றிலிருந்து காப்பாற்றினர். அன்றிலிருந்து அந்தக் குழந்தையின் பெயரில் டிடிமு சேர்ந்து அவர் லெக்ஸன் டிடிமு கயிரா ஆனார். பள்ளிப் படிப்பை முடித்த லெக்ஸனுக்குச் சிறந்த கல்லூரியில் படிக்க ஆசை. அவரது பள்ளியில் இருந்த குறிக்கோள் வாசகம் : நான் முயற்சி செய்வேன் – I will Try – என்பது.
தனது தாயாரிடம் சென்று, “அம்மா. நான் அமெரிக்கா சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உனது ஆசியும் அனுமதியும் வேண்டும்” என்றார்.
அம்மாவிற்கு அமெரிக்கா என்றால்அது எங்கு இருக்கிறது என்பதே தெரியாது.
அவர், “ ஆஹா! அதற்கென்ன! தாராளமாகப் போய் வா” என்று ஆசி கூறி அனுமதி தந்த அவர், “ எப்போது கிளம்பப் போகிறாய்?” என்றார்.
அவருக்கு அமெரிக்கா எங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்த கயிரா பரபரப்புடன் “நாளைக்கே” என்றார்.
மறுநாளே கிளம்பி விட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் நியாஸாலேண்டிலுருந்து கெய்ரோ 3000 மைல் தூரத்தில் இருந்தது. அதை நான்கு நாட்களில் அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கயிரா ஐந்து நாட்கள் கழித்து 25 மைல் தூரம் மட்டுமே நடந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
காட்டு வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் ஆங்காங்கு கிடைத்த வேலைகளைச் செய்து பசியாறி ஒரு வருடம் நடந்து கொண்டே இருந்த கயிரா உகாண்டா நாட்டை வந்தடைந்தார். அங்கு செங்கல் சூளை ஒன்றில் வேலை கிடைத்தது. கம்பாலாவில் அமெரிக்க கல்லூரிகளைப் பற்றிய விவரம் அடங்கிய டைரக்டரி அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது.
வாஷிங்டனில் உள்ள மவுண்ட் வெர்னானில் உள்ள ஸ்காகிட் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்தார்.
மூன்று வாரங்களில் கல்லூரியில் இடம் தருவதாகவும் கூடவே ஒரு வேலையும் தருவதாகவும் பதில் வந்தது.
திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் கயிரா. அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஏழ்மை நிலையையும் கேட்டு பரிதாபப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி கல்லூரி நிர்வாகத்திற்கு அவரைப் பற்றி விளக்கமாக கடிதமொன்றை அனுப்பினார்.
உடனே அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் நிதி திரட்ட ஒரு சிறப்பு உதவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 1700 டாலர் சேர்த்து அவருக்கு அனுப்பினர்.
ஒரு வழியாக நடையாய் நடந்து அவர் ஸ்காகிட் கல்லூரியை அடைந்த போது அவருக்கு அங்கு ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
“உனக்கு என்ன ஆசை?” என்று கேட்ட போது எனது நாட்டிற்குப் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றார்.
அனைவரும் நகைத்தனர். கயிரா சொல்லக் கூடாத எதையேனும் சொல்லி விட்டோமோ என்று திகைத்தார்.
அங்கு படித்தார்; தேர்ந்தார். ‘தி லூமிங் ஷேடோ’ என்ற நாவலை எழுதினார். இங்கிலாந்தை தனது வசிப்பிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜில் பேராசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.
தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ வில் ட்ரை’ என்ற தலைப்பிட்டு ஒரு நூலாக எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது. அவர் பெயரில் அவரது நாட்டில் ஒரு பள்ளியும் சிம்பம்பா என்ற கிராமத்தில் துவக்கப்பட்டது. 2016இல் அவரது அஸ்தி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கையே தடைக் கல்லாக இருந்தாலும் அதைப் படிக்கட்டுக் கல்லாக மாற்றிய கயிராவின் லக்ஷிய வாசகம் – நான் முயற்சி செய்வேன் என்பது தான்!
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
தங்களுக்குத் துன்பம் அளிக்க வந்த தடைகளை எல்லாம் எதிர்கொண்டு துன்பம் கண்டு பயப்படாதிருத்தல், மனம் தளராமை, உற்சாகம், குறிக்கோளை அடைய இடைவிடா உழைப்பு உள்ளிட்டவற்றை தங்களது விடைகளாக அளித்த இவர்கள் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்!
இவர்கள் அனைவரது வாழ்க்கையும் ஒரு ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டுகிறது.
When troubles come to trouble you, don’t allow the troubles to trouble but allow the trouble to trouble the troubles so that no trouble is free to trouble you. Let not the troubles trouble you but let the troubles trouble the troubles.
தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வரும் போது அவற்றை உன்னை தொந்தரவு செய்ய விடாமல் தொந்தரவுகளை தொந்தரவு செய்ய தொந்தரவுகளை அனுமதித்து விடு. அப்போது ஒரு தொந்தரவும் உன்னைத் தொந்தரவு செய்யாது. தொந்தரவுகளை உன்னைத் தொந்தரவு செய்ய விடாதே; தொந்தரவுகளைத் தொந்தரவுகளே தொந்தரவு செய்யட்டும்.
அழகாக சுருக்கமாகத் தான் சொன்னார் வள்ளுவர்:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். குறள் எண் 623
துன்பத்திற்குத் துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் தருவர்.
***
கட்டுரை ஆசிரியர் 132 நூல்களை எழுதியவர். இவற்றைப் பற்றிய விவரங்களை www.pustaka.co.in உள்ளிட்ட இணையதளங்களில் அறியலாம்.