மோதிலால்ஜியின் கோபம்! (Post No.12,094)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,094

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 3

ச.நாகராஜன்

மோதிலால்ஜியின் கோபம்!

பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones என்ற நூலில் ஏராளமான சுவையான சம்பவங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் ஒன்று இது:

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால்ஜி. ஒரு சமயம்  5000 மைல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கடைசியாக வியன்னாவிற்குச் சென்றிருந்தார். அவருக்கு ஆஸ்த்மா நோய் பாதிப்பு உண்டு.

வியன்னாவில் ஒரு பிரபல டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று நினைத்த அவர் அந்த டாக்டரிடம் சென்றார்.

மொழிபெயர்ப்புக்காக ஒரு பெண்மணி அமர்த்தப்பட்டார்.

டாக்டரோ மிகப் பிரபலமானவர். அவர் மோதிலால்ஜி எவ்வளவு சுருக்கமாகத் தனது பிரச்சினையைச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்தார்.

மோதிலால்ஜியிடம் சுருக்கமாகச் சொல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மோதிலால்ஜியோ விவரமாகப் பேசிக் கொண்டிருந்தார். மூன்றாவது முறையாகச் சுருக்கமாகச் சொல்லுமாறு டாக்டர் வற்புறுத்தினார்.

மொழிப் பிரச்சினை வேறு அங்கு இருந்தது. ஒவ்வொன்றையும் அந்தப் பெண்மணி மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும்.

“என்ன தான் பிரச்சினை? எதனால் இப்படி அவஸ்தைப் படுகிறீர்கள்?” என்று பொறுமை இல்லாமல் டாக்டர் கேட்டார்.

ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் மோதிலால்ஜி கூறினார்; “நானா? ஒரு பொறுமையற்ற, தகாத ஒரு டாக்டரிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறேன்” என்றார்.

இதைக் கேட்ட மொழிபெயர்க்கும் பெண்மணி பெரிதாகச் சிரித்து விட்டார்.

டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.

மோதிலால்ஜி சொன்னதை அப்படியே சொல்ல வேண்டுமென்று டாக்டர் பெண்மணியிடம் வற்புறுத்தினார்.

அந்தப் பெண்மணியும் மோதிலால்ஜி சொன்னதை அப்படியே மொழிபெயர்த்துச் சொல்லி விட்டார்.

அவ்வளவு தான் டாக்டரும் சிரித்து விட்டார். போதுமான நேரத்தைக் கொடுத்து மோதிலால்ஜி சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். மருந்தையும் சொல்லி விட்டு, பிறகு கேட்டார் :”நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று.

மோதிலால் தான் ஒரு வக்கீல் என்று சொன்னார்.

“அதானே, அப்படித்தான் நான் நினைத்தேன்” என்றார் டாக்டர்!

யானையின் ஞாபகசக்தி!

யானையைப் பற்றிய இரு சுவையான நிகழ்ச்சிகளையும் பட்டாபி சீதாராமையா தனது Feathers and Stones புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

முதலாவது சம்பவம்.

ஒரு தையற்காரர் தினமும் தன் கடை வழியே செல்லும் ஒரு யானைக்குக் கொஞ்சம் வெல்லம் கொடுப்பது வழக்கம்.

தினமும் அந்த யானை அந்த தையற்காரர் கடை வந்தவுடன் நின்று விடும். வெல்லத்தை வாங்கிக் கொண்டு தனது தும்பிக்கையை உயர்த்தும். ஒரு நாள் அந்தத் தையற்காரரிடம் வெல்லம் இல்லை.

யானை வந்தது. அவர் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்.

கொஞ்சலாக போகச் சொன்னார். ஆனால் யானை நகரவில்லை.

உடனே தன் கையிலிருந்த ஊசியால் தும்பிக்கையில் ஒரு சின்ன வருடலைச் செய்தார்.

யானை அகன்றது. மறு நாள் யானை திரும்பி வரும் போது கடையின் முன்னே வந்து நின்றது. தையற்காரரைப் பார்த்தது. அவரும் யானையைப் பார்த்தார்.

யானை தன் தும்பிக்கையை உயர்த்தி குளத்தில் இருந்து தான் விசேஷமாகக் கொண்டு வந்திருந்த சகதியை அவர் தலையில் பொழிந்தது.

ஊசிக் குத்தலுக்கு சகதி அபிஷேகம், சரி தானே!

அடுத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்த ஒன்று.

கோவில் யானைக்கு பழம், தேங்காய், வெல்லம் என இப்படி எதையாவது மக்கள் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் ஒரு பையன் முள் நிறைந்த ஒரு உருண்டையைக் கொடுக்க அந்த யானை அதை வாங்கி விழுங்கியது.

மறு நாள் ஏராளமான கூட்டம் கோவிலில்.

யானை அவ்வளவு கூட்டத்திற்கும் இடையே சென்று அந்தப் பையனைத் தன் துதிக்கையால் தூக்கித் தன் காலில் போட்டு மிதித்தது.

அனைவரும் இதைப் பார்த்துத் திடுக்கிட்டு அலறினர்.

இதே போல் தான் ஒட்டகமும் பழிவாங்கும் குணம் கொண்டதாம்.

பாம்போ தீங்கு செய்வோரை நன்கு நினைவில் இருத்திப் பழி வாங்குமாம்!

***

Leave a comment

Leave a comment