
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,117
Date uploaded in London – 11 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 2
ச.நாகராஜன்
ஓம் உச்சரிப்பில் வரும் ஶ்ரீ யந்திரம்
ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி என்பவர்.
இவர் மந்திரத்திற்கு மகிமை உண்டா என்று ஆராய ஆரம்பித்தார். ஒவ்வொரு ஒலி அலையாக இவர் சோதிக்க ஆரம்பித்தார்.
க்ளிசெரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்ற பொருள்களின் மீது ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை இவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். ‘லோ ப்ரீகெவென்ஸி சவுண்ட் வேவ்ஸ்’ எனப்படும் குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரணப் படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன.
ஓம் என்ற உச்சரிப்பில் ‘ஓ’ என்பது ஒலிக்கப்பட்டவுடன் அந்த ஒலி அலை ஒரு வட்டத்தை உருவாக்கியது. ஓம் என்று முடிந்த போது அது ஒரு ஶ்ரீ சக்கரத்தை வட்டத்தினுள்ளே உருவாக்கியது.
நமது நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக ஶ்ரீ சக்கரம் வழிபடப்படுகிறது. ஓம் உச்சரிக்கப்படுகிறது.
ஜென்னி தனது ஆய்வுகளின் மூலமாக மனித உடலில் திசுக்கள், உயிரணுக்கள், உறுப்புகள் தம் தமக்கு உரியதான ஒரு ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.
நமது அறநூல்கள் ஒலி அடிப்படையிலான நாமங்களை 108, 1008 என்று கொண்டிருப்பதை நாம் நினைவு கூரலாம்!
யூ டியூபில் cymatics மற்றும் chladni patterns என்று பதிவிட்டால் ஒலி அலைகள் ஏற்படுத்தும் சித்திரங்களைக் காட்டும் பல காணொளிக் காட்சிகளைக் காணலாம்.
ஶ்ரீ சக்கரத்தை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானி!
ஶ்ரீ சக்கரத்தை ஆராய வேண்டும் என்று மாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலைச்சேவ் என்பவருக்கும் ரஷிய விஞ்ஞானக் கழகத்தின் தலைவரான இன்னொரு விஞ்ஞானி ஐவான் கோவலான் சென்கோ என்பவருக்கும் ஏற்பட்டது.
ஶ்ரீ சக்கரத்தில் உள்ள கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வடிவியல் அமைப்பைக் கண்டு பிரமித்த இவர்கள் கணினி மூலமாக அதைத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தனர்.
இந்தச் சக்கரத்தில் நடுவில் பிந்துவும் (புள்ளி) சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. மேல் நோக்கி உள்ள நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ் நோக்கிய் ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வம், ஞானம், முக்தி ஆகியவற்றைப் பெற காலம் காலமாக இதை அனைவரும் வழிபடுவது கண்கூடு. இந்தியாவெங்கும் ஏராளமான ஆலயங்களில் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லைக்கே சென்றனர். நவீன கணினி கூட இதை முழுதுமாக ஆய்வு செய்யப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட இவர்கள்
ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் வினாக்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்றனர் அவர்கள். (How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding)
இதை மனநலம் பாதிக்கப்பட்டு தன் நிலையை இழந்தவரிடையே பயன்படுத்திய அவர்கள் பாதிக்கப்பட்டோர் நலமடைவதைக் கண்டு பிரமித்தனர். குறிப்பிட்ட முறைப்படி இந்த ஶ்ரீ சக்கர யந்திரம் அமைக்கப்பட வேண்டும். இதே போல உள்ள ஆனால் குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்படாத யந்திரத்தை அவர்கள் பயன்படுத்திய போது சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். இந்த ஆய்வை, ஆய்வின் மேலாளரும் உறுதிப்படுத்திய பின்னர் உலகினருக்கு ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்தனர்.
விரிவான ஆய்வை இணையதளத்தில் படிக்கலாம்; தரவிறக்கம் – டவுன்லோட் – செய்து கொள்ளலாம்
உளவியல் நோய்களைக் குணப்படுத்தும் குண்டலினி
உலகின் பிரபலமான யோகா ஆய்வாளரும் விஞ்ஞானியும் குண்டலினி யோகா சிகிச்சை நிபுணருமான டேவிட் ஷானஹாஃப் கால்ஸா ‘இண்டர் நெட் யோகி” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர். தூக்கமின்மை, உளவியல் ரீதியாகப் பாதிப்பு, அஜீர்ணத்தால் பாதிப்பு, கார்டியோ வெ/ஸ்குலர் எனப்படும் இதயக் குழலிய வியாதியால் பாதிப்பு ஆகியவை கொண்ட ஏராளமானோருக்குத் தனது விசேஷ தியான முறைகளை இவர் கற்றுக் கொடுக்கிறார். தனது ‘செர்பெண்ட் பவர்’ என்ற நூலில் 29ஆம் அத்தியாயத்தில் குண்டலினி யோகம் பற்றி இவர் விளக்கிக் கூறுகிறார். இவரால் பயன்பெற்று வருவோர் ஏராளம்!
இவரது நூல்கள் பிரபலமானவை.
மூளை ஆற்றலைக் கூட்டும் தோப்புக்கரணம்!
லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் மூளை ஆற்றலை ஊக்குவிக்க ஒரு பயிற்சியை அனைவருக்கும் சொல்லித் தருகிறார்.
ஒரு மாணவன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்க முடியவில்லை. அவர் கூறிய பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன் ‘ஏ’ கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.
பயிற்சி என்ன? பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வல்து காதை இடது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். ஆக இப்படி உட்கார்ந்து எழுந்தால் போதும். இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் செய்தாலேயே மூளை ஆற்றல் கூடும். இது நிரூபிக்கப்பட்ட பயிற்சி ஆனது
யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங், காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.
அட, பிள்ளையார் முன்னால் போடும் தோப்புக்கரணத்திற்கு – உக்கிக்கு – இவ்வளவு சக்தியா என்று வியக்க வேண்டியது தான்; பிரமிக்க வேண்டியது தான். அறிவியல் பிள்ளையார் உக்கியை ஆமோதிக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்?
தொடரும்