
Post No. 12,152
Date uploaded in London – 19 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை
முதல் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.
நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 1
ச.நாகராஜன்
நாம் அனைவருமே நட்சத்திர மனிதர்கள் தாம்!
நாம் எல்லோரும் நட்சத்திரங்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கிறோம் – ‘வீ ஆர் ஆல் மேட் ஆஃப் ஸ்டார்ஸ்’ (We are all made of Stars – Moby) என்ற ஆகப்பெரும் அமெரிக்க இசைக்கலைஞரான மோபியின் பாடல் உலகையே கலக்கி ஆட்டி வைத்தது அனைவரும் அறிந்ததே
நம் உடலில் உள்ள கார்பன், நைட்ரஜன் அணுக்கள் மற்றும் இதர மூலகங்கள் அனைத்தும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்ற தலைமுறை நட்சத்திரங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நவீன அறிவியலும் ஒத்துக் கொண்டிருக்கிறது.
வானில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் தட்ப வெப்ப நிலையையும் , மனிதர்களின் மனோநிலையையும் பாதிக்கிறது என்பதையும் அறிவியல் ஒப்புக் கொண்டு விட்டது.
இதே கருத்தை இந்திய நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டுபிடித்துக் கூறியது தான் அதிசயம்.
புவியில் உள்ள மனிதர்களைப் பாதித்து நல்லதையும் கெட்டதையும் நல்கும் 28 நட்சத்திரங்களில் காலப்போக்கில் நமது சுழற்சியிலிருந்து வெளியில் சென்று விட்ட அபிஜத் நட்சத்திரத்தை விட்டு விட்டு மீதியுள்ள அஸ்வினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களை நமக்குப் பலன் தரும் தாரகைகளாக நமது அறநூல்கள் பட்டியலிட்டுள்ளன.
சங்க காலத் தமிழகத்தில் வானவியல் உச்சகட்டத்தில் இருந்ததை அதில் நாம் காணும் சுமார் 150க்கும் மேற்பட்ட அதிசயிக்கத்தக்க அற்புதமான வெவ்வெறு பாடல்களில் வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் தரும் உண்மைகளோ நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
இந்தப் பின்புலத்துடன் வானில் ஒளிரும் சில நட்சத்திர இரகசியங்களையும் அதிசயங்களையும் பார்க்கலாமா?
திருவாதிரை நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியைக் கொண்டிருக்கின்றன. அவை திருவாதிரையும் திருவோணமும் தான். திருவாதிரை சிவபிரானுக்கும் திருவோணம் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கும் உரியது.
பல இரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை! பிரம்மாண்டம் என்றால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம்? இரண்டுகோடியே ஐம்பது லட்சம் சூரியன்களைத் தன்னுள்ளே அடக்கி வைக்கக் கூடிய அளவு அது பெரியது. சூரியனோ பூமியை விட பதிமூன்று லட்சம் மடங்கு பெரியது. அப்படியானால் திருவாதிரை பூமியை விட எத்தனை கோடி மடங்கு பெரியது! கணக்கிட்டுப் பாருங்கள்!!
பீடல்ஜியஸ் (Betelgeuse) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திருவாதிரையானது, செக்கச் செவேலென்று ஒளிரும் உக்கிரமான ஒரு நட்சத்திரம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி வர்ணிக்க முடியும்? அமெரிக்காவில் மவுண்ட் வில்ஸன் ஆப்ஸர்வேடரியிலிருந்து நூறு அங்குல டெலஸ்கோப்பை வைத்து இதைப் பார்க்கும் விஞ்ஞானிகள், “அது ஒளிர்கிறது! பல கோடி சூரியன்கள் ஒன்றாக ஆகி எரிவது போல எரிகிறது” என்கின்றனர்.
முக்கண்ணன் தனது உக்கிரமான பார்வையினால் மன்மதனை எரித்தான் என்பதை பட்டி தொட்டிகளிலேல்லாம் காலம் காலமாக நாம் கேட்டு வரும் வில்லுப்பாட்டு கூறுகிறது. காம தகனம் கதையைக் கேட்காதோர் இல்லை!
கடுமையான கோடைகாலம் முடிந்தவுடன் வசந்த காலம் வர காம உணர்வும் எழுகிறது. இந்த உணர்வு எழுவது எப்போது? சூரியன் மறைந்தவுடன் தனுர் ராசிக்குரிய நட்சத்திரங்கள் எழுகின்ற வேளையில் தான்.
வில்லுடனும் அம்புடனும் குறிக்கப்படுவது இந்த தனுசு ராசி. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களே மலர் கணையைத் தொடுக்கும் வில்லுடன் கூடிய மன்மதனைக் குறிக்கிறது.
கீழ்வானத்தில் அதாவது கிழக்கே திருவாதிரை நட்சத்திரம் எழ மேல் வானத்தில் தனுர் ராசி நட்சத்திரங்கள் மறைகின்றன, ருத்ரனின் பார்வை பட்டு மன்மதன் மறைகிறான்; எரிந்து போவதாகப் புராணங்கள் கூறுகின்றன! எப்போதும் தேவ- அசுர நட்சத்திரங்கள் நேர் எதிரெதிராக 180 டிகிரியில் இருப்பதை நாம் அறிந்தால் மன்மதனின் மறைவு நமக்கு நன்கு புரிய வரும்.
இதை ரெட் ஜெயண்ட் என்று அனைவரும் புகழ்கின்றனர். எகிப்திய பிரமிடிற்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஓரியன் மிஸ்ட்ரி உள்ளிட்ட பல ஆங்கில நூல்கள் விவரிக்கின்றன. படித்தால் பிரமிப்பு தான் ஏற்படும்!
இது 642 ஒளி ஆண்டுகள் தூரத்தில் புவியிலிருந்து இருக்கிறது.
ஒரு ஒளி ஆண்டு என்பது ஆறு லட்சம் கோடி மைல்கள் ஆகும்!
விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கைப் போட்டால் ஒரு ஆண்டிற்கான மைல்களாக ஒளி செல்லும் தூரமாக வருவது இது!
திருவோணம் நட்சத்திரம்
“மூவுலகும் ஈரடியா முறைநிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி” கொண்ட திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கேட்கிறார்!
மகாபலி என்ற அசுரன் இந்திரனுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணு புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் 12ஆம் நாள் அபிஜித் என்ற சுபயோக வேளையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் வாமனனாக குள்ள வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அங்கு மகாபலி அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க மூன்று அடி நிலம் வேண்டும் என்கிறார் வாமனன். உடனே தந்தேன் என்கிறான் மகாபலி.
தனது முதல் இரு அடிகளால் பூமியையும் ஏனைய அனைத்து உலகங்களையும் அளந்த வாமனன் மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்கிறார். அதற்குத் தன் தலையில் அந்த அடியை வைக்குமாறு மகாபலி சொல்ல மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து அவனைப் பாதாள லோகம் சேர்க்கிறார் வாமனனான மஹாவிஷ்ணு.
இது மலையாளத்தில் ஓணம் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதை மஹாவிஷ்ணு.
ஆங்கிலத்தில் அக்கிலா எனப்படும் நட்சத்திரத் தொகுதி திருவோணத்தைக் குறிக்கிறது.
இதன் மேல் பக்கத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும் மூன்று நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன.
இந்த நட்சத்திரத் தொகுதியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பால் வீதி என்பது காசியோபியா நட்சத்திர மண்டலத்தில் ஆரம்பித்து சிரியஸ் நட்சத்திரத்தைத் தாண்டி தென் மண்டலத்தில் போகிறது.
பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் இது பரவி இருக்கிறது.
இந்தப் பால்வீதி மண்டலத்தைப் பார்த்துப் பிரமித்துப் போன விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், “இருண்ட வானத்தில் தங்கத் துகள்களை இரு கைகளாலும் ஒருவன் வாரி இறைத்தது போல பால் வீதி மண்டலம் உள்ளது” என்கிறார்.
அறிவியல் வியக்கும் இந்தப் பால்வீதியே அனந்தசயனம் அதாவது பாம்பணை! கற்பனைக்கெட்டா தூரம் இந்த லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் படுக்கை போலப் பரவி இருப்பதை வானில் பார்ப்பதே தனி ஒரு ஆனந்தம் தான்!
இங்குள்ள முக்கிய நட்சத்திரங்களே குடை விரித்த பாம்பு போலத் தோற்றமளிக்கின்றன! அங்குள்ள வானநடுவரையால் கடக்கப்படும் திருவோண நட்சத்திரமே திருமால் வாமனாக அவதரித்த நட்சத்திரம்.
கருடனின் உருவத்தில் மூன்று நட்சத்திரங்களாக தலைப்பகுதியில் உள்ளவையே வாமனனின் பாதங்கள்.
இப்படி புராணத்தையும் அறிவியலையும் இணைக்கும் அற்புத நட்சத்திரமே திருவோணம்.
இந்த நட்சத்திர விசித்திரத்தைப் பார்த்த குலசேகரத்தாழ்வார், “மாதவனை வணங்குகிறேன். எவருடைய நட்சத்திர வடிவமானது குளிர்ந்த அலைகளையுடைய பாற்கடல் போலப் பரந்திருக்க, அதன் நடுவே பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த மாதவனை வணங்குகிறேன்” என்கிறார். – முகுந்தமாலை செய்யுள் 39)
***
– தொடரும்