
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,156
Date uploaded in London – 20 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை
இரண்டாம் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.
நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 2
ச.நாகராஜன்
கந்தனை வளர்த்த கார்த்திகை!
தமிழர் தம் தனிப்பெரும் தெய்வம் முருகன். முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.
கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது.
அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகிய ஆறு நட்சத்திரங்களே அவைகள்!
கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்குப் போலத் தோற்றம் அளிப்பவை இந்த ஆறு நட்சத்திரங்களூம்.
பிளையாடிஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகும் நாட்களே வருடத்தில் மிகவும் உஷ்ணமான நாட்கள். இதை கார்த்தி நாட்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்.
சூரியனுக்கே இப்படி கூட்டு சேர்க்கையாலேயே அதிக வெப்பம் தரும் இதன் உண்மையான உஷ்ணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய வேண்டியது தான்.
இது 250 ஒளி வருட தூரத்தில் உள்ளது. பைபிளும் கார்த்திகை நட்சத்திரத்தை மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது. (Job 9.9,38.31. Ams 5.80)
அழுக்குகளையும் பொய்யையும் சுட்டுப் பொசுக்கும் இந்த நட்சத்திரம் ஒளி, தீபம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்வில் ஒளிமயமான ஏற்றத்தைக் குறிக்கும் நாள்!
சங்க இலக்கியத்தில் தனியொரு இடத்தை இந்த நட்சத்திரம் பெறுகிறது.
அகஸ்திய நட்சத்திரம்
கானோபஸ் என்று மேலை நாட்டினரால் குறிப்பிடப்படும் அகத்திய நட்சத்திரம் எப்போதெல்லாம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு பூ மலரும். அதுவே அகத்திப்பூ. அந்தக் கீரையே அகத்திக் கீரை.
“தூய கடல் நீரை முழுது உண்டு அது துரந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனால் வர்ணிக்கப்படும் அகத்தியர் தெற்கு வான மண்டலத்தில் தெரியும் நட்சத்திரம்.
சூரியன் சிம்ம ராசியில் மறையும் போது கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இதைக் கண்ட நமது முன்னோர் அவருக்கு கும்ப முனி என்ற பெயரை இட்டனர்.
அகத்தியர் தோன்றியவுடன் சரியாக மழைக்காலம் முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் நீங்கிய உடனேயே தோன்றும் அகத்தியர் நீரைக் குடித்து விட்டார் என்ற வழக்கு வந்தது.
இன்னொரு அறிவியல் கூற்றுப்படி எப்போதெல்லாம் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் கடல் நீர் கூடுதலாக வற்றுகிறது.
***