அறிவியல் வியக்கும் யோகா! – இரண்டாம் பகுதி (Post No.12,167)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,167

Date uploaded in London –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

 21-6-23 யோகா தினத்தையொட்டி 20-6-23 மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

அறிவியல் வியக்கும் யோகா! – இரண்டாம் பகுதி 

ச.நாகராஜன்

தலாய்லாமாவின் அழைப்பு

2000ஆம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார்.

விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்ஸன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார். 

யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார்.

மாக்னெடிக் ரெஸோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார்.

ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் ‘தயை’ என்னும் தியான லாமாவின் மூளையில் இடது பக்க ப்ரண்டல் கைரஸின் செயல்பாட்டைக் காண்பித்தன.

இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

வலதுபக்க ப்ரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். ‘தயை தியானத்தில்’ லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப் படுத்தியது.

அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர்.

திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ ‘ஓபன் ஸ்டேட்’ என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார்.

இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.

பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.

பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்)  வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோஸீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

மஹரிஷி மஹேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது.

ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, “உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா” என்று கூறுகிறது.

யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

***

Leave a comment

Leave a comment