
Post No. 12,192
Date uploaded in London – 27 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம் 4
ச.நாகராஜன்
நூறு பவுண்ட் விவகாரம் தீர்வு தந்த வக்கீல்!
ஜான் பில்பாட் கரன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான வக்கீல், பேச்சாளர். – John Philpot Curran (தோற்றம் 24 ஜூலை 1750 மறைவு 14 அக்டோபர் 1817)
ஒரு நாள் அவரிடம் ஒரு விவசாயி வந்தார்.
“நான் இந்த நகருக்கு வருவது இது தான் முதல் தடவை. நான் தங்கி இருந்த சத்திரத்தின் காப்பாளரிடம் நூறு பவுண்டை கொடுத்து பத்திரமாக வைத்திருக்குமாறு கூறினேன். அவரும் வாங்கிக் கொண்டார். ஆனால் திருப்பிக் கேட்கும் போது நீ கொடுக்கவே இல்லை என்கிறார். தயவு செய்து நீங்கள் தான் அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்றார் அவர்.
அவர் கூறியதைக் கேட்ட கரன் யோசித்தார். பின்னர் கூறினார்: “நீங்கள் அவரிடம் சென்று இன்னொரு நூறு பவுண்டைக் கொடுங்கள். ஆனால் இந்த முறை சாட்சியாக ஒரு பாதிரியாரை அழைத்துச் சென்று அவர் முன்னால் அதைக் கொடுங்கள்” என்றார்.
விவசாயியும் அப்படியே செய்தார். கரனிடம் வந்து அவர் சொன்னபடியே இன்னும் ஒரு நூறு பவுண்டைக் கொடுத்ததாகச் சொன்னார்.
கரன் கூறினார் : “இப்போது நீங்கள் தனியே சென்று ஒரு நூறு பவுண்டைக் கேளுங்கள்” என்றார்.
விவசாயி சத்திரக் காப்பாளரிடம் சென்றார். நூறு பவுண்டை மட்டும் கேட்டார்.
சத்திரக் காப்பாளரும் உடனே நூறு பவுண்ட் நோட்டைக் கொடுத்தார் – அது பாதிரியார் முன்னால் வாங்கிய நூறு பவுண்டு ஆயிற்றே.
சந்தோஷத்துடன் கரனிடம் வந்த விவசாயி, “நூறு பவுண்டைப் பெற்று விட்டேன். ஆனால் முதலில் கொடுத்த நூறு பவுண்ட் வரவில்லையே” என்றார்.
கரன் கூறினார் : “இப்போது பாதிரியாருடன் சென்று நான் இவர் முன்னால் கொடுத்த நூறு பவுண்டைத் தாருங்கள் என்று கேளுங்கள்” என்றார்.
விவசாயி பாதிரியாரை அழைத்துக் கொண்டு சத்திரக் காப்பாளரிடம் சென்று, “இவருடன் வந்து கொடுத்தேனே, அந்த நூறு பவுண்டைத் தாருங்கள்” என்றார்.
இப்போது சத்திரக் காப்பாளர் சங்கடத்தில் மாட்டிக் கொண்டார்.
விவசாயிக்கு நூறு பவுண்ட் தந்து விட்டேன் என்று அவர் சொன்னால் சாட்சி எங்கே என்று விவசாயி கேட்பார்.
ஆகவே பேசாமல் நூறு பவுண்டை எடுத்துக் கொடுத்தார்.
விவசாயி மகிழ்ச்சியுடன் கரனைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்தார்.
கரனைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன.
குதிரைக்கு சொந்தக்காரன் யார்?

அக்பரின் அரசவையில் ஒரு மனிதன் வந்து தன் குதிரையை இன்னொருவன் திருடி விட்டதாக புகார் செய்தான்.
அந்த நபரைக் கூட்டி வரச் சொல்லி விசாரித்த போது தான் எந்தக் குதிரையையும் திருடவில்லை என்றும் தன்னிடம் இருக்கும் ஒரே குதிரை தன்னுடையது தான் என்றும் அவன் சாதித்தான்.
அக்பர் பீர்பலிடம், “இதை எப்படித் தீர்த்து வைப்பது?” என்று கேட்டார்.
அக்பரிடம் பீர்பல் இதைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.
குதிரை வைத்திருந்தவனை நோக்கிய பீர்பல் குதிரையை அரசுக்குச் சொந்தமான குதிரை லாயத்தில் கொண்டு விடுமாறு கூறினார்.
குதிரையும் வந்து சேர்ந்தது.
பின்னர் இருவரையும் ஒரு வாரம் கழித்து தன்னைப் பார்க்குமாறு கூறினார்.
ஒரு வாரம் கழிந்தது. இருவரும் வந்தனர்.
“இப்போது உங்கள் குதிரை லாயம் சென்று உங்கள் குதிரையை அடையாளம் கண்டு பிடித்துப் பாருங்கள்” என்றார் பீர்பல்.
முதலில் குதிரையைத் திருடியன் குதிரை லாயம் சென்றான்.
அங்கு நூற்றுக் கணக்கான குதிரைகள் இருந்தன.
விரைவாக ஒவ்வொரு குதிரையாகப் பார்த்த அவன், “ஒரு குதிரையைக் காட்டி இது தான் என் குதிரை” என்றான்.
பிறகு குதிரைக்குச் சொந்தக்காரன் குதிரை லாயம் வந்தான்.
அவனும் தனது குதிரையைப் பார்த்து விட்டு, “இது தான் எனது குதிரை” என்று அடையாளம் காட்டினான் தன் குதிரையை.
பீர்பல் இருவருடன் கூடவே சென்றார்.
பின்னர் குதிரையை அதன் நிஜமான சொந்தக்காரரிடம் தர ஏற்பாடு செய்தார்.
குதிரையைத் திருடியவன், “நான் தானே முதலில் குதிரையை அடையாளம் காட்டியவன். என்னை எப்படிப் புறக்கணிக்கலாம்” என்று வாதிட்டான்.
பீர்பல் கூறினார் : “நான் உங்களை குதிரையை அடையாளம் காண்பிக்கச் சொன்னது நீங்கள் குதிரையைக் கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்க்க அல்ல; நீங்கள் குதிரையைப் பார்க்கும் போது அது எப்படி உங்களைப் பார்க்கிறது என்பதைப் பார்க்கத் தான். நீ பார்த்த போது குதிரை ஒரு வித உணர்ச்சியையும் காண்பிக்கவில்லை. ஆனால் நிஜமான சொந்தக்காரனைப் பார்த்த போது உற்சாகமாக கனைத்து குதித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தது. ஆகவே தான் அவனிடம் குதிரையைக் கொடுக்கச் சொன்னேன்” என்றார்.
அக்பர் பீர்பலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.
அவையோர் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்தனர்.
***