
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,200
Date uploaded in London – 29 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
வண்ண சிகிச்சை (கலர் தெராபி)
தியோ ஜெம்பல் என்ற ஜெர்மானியர் நவீன வண்ண இயல் மூலமாக நோய்களைத் தீர்ப்பதில் வல்லவர். ஒலியை விட வண்ணங்கள் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இவர் நிரூபித்ததோடு அந்த அளவுகளையும் தெரிவித்தார்.
வண்ண சிகிச்சைக்கு இசை வல்லுநர் ஒருவரின் துணையையும் அவர் மேற்கொண்டார்.
சூரியனுடைய ஒளி பூமிக்கு வர எட்டரை நிமிடங்கள் ஆகும். ஆனால் சூரியன் என்று நினைத்தவுடனேயே அந்த எண்ணம் சூரியனை தொடர்பு படுத்துவதால் அந்த எண்ணத்தின் வேகம் சூரிய ஒளியின் வேகத்தை விட அதிகம் என்று கூறும் இவர் வண்ணங்களின் வேகம், அவை உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். தாவரங்களின் வளர்ச்சியிலும் வண்ணங்களுக்குப் பங்கு உண்டு என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
கலர் தெராபி என்பது வண்ணங்களை வைத்துச் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இதை எழுதியுள்ள மேரி ஆண்டர்ஸன் ஹிந்து யோகம் கூறும் அவுரா எனப்படும் ஒளிவட்டம் பற்றி விவரிக்கும் போது உடலின் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் வண்ணங்களுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார். ஏழு வண்ணங்களை உபயோகித்து வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்.
கிரகங்களும் வர்ணங்களும்
குண்டலினி யோகத்தில் உடலில் உள்ள ஆதார சக்கரங்களுக்கு உரிய நிறங்களையும் நமது நூல்கள் கூறுகின்றன. மூலாதாரம் – சிவப்பு, ஸ்வாதிஷ்டானம் – ஆரஞ்சு, மணிபூரகம் – பிரகாசமான மஞ்சள், அனாகதம் – பச்சை, விசுத்தம் – நீலம், ஆக்ஞா- கருநீலம், சஹஸ்ராகாரம் – நாவல் நிறம் அல்லது செவ்வூதா நிறம் என்று இப்படி நிறங்களை நூல்கள் தருகின்றன. இவற்றை அறிவதால் குண்டலினி யோகத்தைச் செய்வோர் தங்களது முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களில் சூரியனுக்கு சிவப்பு. சந்திரனுக்கு வெண்மை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு வெளிர் பச்சை, குருவிற்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெண்மை, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு கருமை என நமது அறநூல்கள் கூறுகின்றன. இந்த நிறத்தில் ஆடைகள், நைவேத்யம் ஆகியவற்றைச் செய்வது மரபு.
வண்ணமும் அது குறிக்கும் குணமும்
குறிப்பிட்ட ஒரு ஆராய்ச்சியாளராக சுமார் 30 வருடங்கள் வண்ண ஆய்விலேயே ஈடுபட்டவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த மனைசார் உளவியலாளரான (Clinical Psychologist) டாக்டர் கார்ல்டன் வேக்னர் என்பவராவார்.
இவரது புத்தகங்கள் உலகமெங்கும் பரவலாக படிக்கப்படுகின்றன. அவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றித் தங்கள் பழக்கவழக்கங்களை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள விழைவோர் ஏராளம்! (தி வேக்னர் கலர் ரெஸ்பான்ஸ் மற்றும் கலர் பவர் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை)
இவர் வண்ண ஆய்வு மையம் ஒன்றை நடத்த ஆரம்பித்து பல்வேறு வண்ணங்களில் ஒவ்வொன்றும் உங்களை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கும் அல்லது வளத்தைத் தரும் என்பதைச் சொல்லித் தந்தார்.
அதன்படி ஒவ்வொரு வண்ணத்திற்கான குணங்கள் இதோ:
அடர்த்தியான நீலம் (Dark Blue) : நம்பிக்கை, பழமையில் பற்று, பொறுப்பு, அமைதி, புத்திசாலித்தனம்
இள நீலம் (Light Blue) : அமைதி, அன்பு, லட்சியத்தில் பற்று, தகவல் பரிமாற்றத்தில் நிபுணத்துவம்
பச்சை – அமைதி, உண்மை, எதிலும் சமநிலை, உறுதி
மஞ்சள் – உற்சாகம், மலர்ச்சி, புத்திசாலித்தனம், துணிவு, போட்டியில் முதன்மை
வெள்ளை – நேர்த்தி, ஒழுங்கு, சுயதேவை பூர்த்தி, எச்சரிக்கை உணர்வு, ஆன்மீகத்தில் பற்று, ஆக்கபூர்வமான சிந்தனை
கறுப்பு – சோகம், சுகவீனம், தீவிரம், அகங்காரம், மரியாதை, துக்கம், தீமை, தெரியாத விஷயங்கள்
ஆரஞ்சு – படைப்பாற்றல், மலர்ச்சி, மகிழ்ச்சி, உடனடி செயல், செக்ஸ்
இளஞ்சிவப்பு – அன்பு, ஓய்வு, தாய்ப்பாசம்
சிவப்பு – சக்தி, வெற்றி, உடனடி செயல், அமைதியற்ற துடிப்பு, பொறுமையின்மை, தீவிரம்
வயலட் – அமானுஷ்ய சக்தி, வசீகரம்
தனக்கென ஒரு ராசி நிறத்தை ஒரு ஆணோ பெண்ணோ தமது அனுபவத்தின் படி தேர்ந்தெடுப்பதை அனுபவத்தில் பார்க்கிறோம்.
ப்ரூஸ் லீ – மஞ்சள், கருமை, ஐன்ஸ்டீன் – மஞ்சள், சார்லி சாப்ளின் – கருப்பு, நீலம் என இப்படி பிரபலங்களும் கூட தங்களுக்கான நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இறுதியாக ஒரு சுவையான தகவல் : உலகிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வண்ணம் எது தெரியுமா?
நீலம்!
****