
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,261
Date uploaded in London – 12 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜூலை 11 – உலக மக்கள் தொகை நாள் – சிறப்புக் கட்டுரை மாலைமலர் 9-7-23 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்!
(இரண்டாம் பகுதி)
ச. நாகராஜன்
4. ஓஜோனில் ஒஜோன் உறை என்பது வளி மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த உறை தான் அல்ட்ரா வயலட் கதிர்களிடமிருந்து மனிதர்களையும் தாவர இனங்களையும் காக்கிறது. நகரங்களிலிருந்து எழும் நச்சுப் புகைகள் இந்த ஒஜோன் உறை மீது பட்டுப் பட்டு அதில் இப்போது துளை விழ ஆரம்பித்து விட்டது. குளோரோப்ளோரா கார்பன் எனப்படும் நச்சு மாசுப் பொருள் ஓஜோன் உறையிலிருந்து பெருமளவு ஆக்ஸிஜனை எடுக்கிறது. இதன் விளைவாக கண் நோய்கள், தோல் வியாதிகள் பெருமளவு ஏற்படுகிறது.
5. வளி மண்டலத்தில் தூசிப்படலம் வளி மண்டலம் காற்று மாசினால் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டே வருவதால் காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண் அபாயகரமான அளவை எட்டி விட்டது. இந்த எண் 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்கப்படக் கூடிய சூழ்நிலை இருப்பதை உணர்த்தும். 201 முதல் 300 வரை இருந்தால் அது அபாயகரமான சூழ்நிலையைக் குறிக்கும். காற்றின் தரம் குறைவதற்கான முக்கியமான காரணங்கள் வாகனங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகையும் பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் துகள்மப் பொருள்களுமே தான். துகள்மப் பொருள்கள் குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது அவற்றை சுவாசிப்பவருக்கு ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன.
6. நீர் அசுத்தமாதல் : சீரைத் தேடின் நீரைத் தேடு என்றனர் நம் முன்னோர். இந்த நீர் வளம் அசுத்தமாக ஆகிக் கொண்டே போவதோடு குறைந்து கொண்டே போகிறது. சுத்த நீர் இன்மையால் குடிநீர்த் தட்டுப்பாடு உலகெங்கும் இப்போது ஏற்பட்டு வருகிறது.
ஆங்காங்கே தொழிற்சாலைகளின் கழிவு நீர்கள் அமிலத் தன்மையுடன் ஆறுகளிலும் குளங்களிலும் கடலிலும் கலக்கப்படுகிறது.. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு நீரின் தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
7. நைட்ரஜன், பாஸ்பரஸ் பயன்பாடு : நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும். கார்பன் டை ஆக்ஸைடை மட்டும் எடுத்துக் கொண்டால் 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த வாயு அதிகமாக வெளிப்பட்டு வளி மண்டலத்தில் சேர்ந்ததால் புவியின் வெப்பம் சுமார் 1.5 டிகிரி பாரன்ஹீட் கூடி இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறது விஞ்ஞான ஆய்வு. புவி வெப்பம் அதிகமானால் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழிந்துபடும். மழை பொழிவது குறையும். பஞ்சங்கள் உருவாகும். அபாயகரமான கெமிக்கல்களால் ஆரோக்கியக் கேடுகளும் உருவாகும்.
8. நிலப் பயன்பாடு மாறுதல் : நில வளங்களைச் சுரண்டுவது ஆங்காங்கே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வாதார இடமாக அமைவது காடுகளே. ஆக இப்படி நிலத்தைச் சுரண்டாமல், காடுகளை அழிக்காமல் வாழாவிடில் அது மனிதகுலம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு அபாயமாகும்.
9. புதுக் கண்டுபிடிப்புகள் தரும் இரசாயன அபாயங்கள் : நவீன ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கும் கெமிக்கல்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை. சமீபத்தில் சீனாவின் சோதனைச் சாலை உருவாக்கிய கோவிட் நோய் அனைவரும் அறிந்ததே. பிளாஸ்டிக் அபாயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகமே மைக்ரோ பிளாஸ்டிக் துகள் பற்றி அலறிக் கொண்டிருக்கிறது.
இந்த அனைத்து அபாய நிலைகளுக்கும் காரணமாக அமைவது எல்லை மீறிய மக்கள் தொகையும் அறிந்தும் அறியாமலும் அவர்கள் இயற்கை வளத்தைத் தவறாக நுகர முயற்சிப்பதுமே தான்!
இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் அளவான குடும்பமே வளமான வாழ்வைத் தரும் என்ற எண்ணம் உலகில் வாழும் ஒவ்வொருவரின் மனதிலும் வேரூன்ற வேண்டும். இதற்கு விழிப்புணர்ச்சி தேவை.
பெண்களின் கல்வி அறிவை நூறு சதவிகிதம் உறுதிப் படுத்தி முழுமையாக்க வேண்டும்.
இதற்கான விழிப்புணர்வு நாளே உலக மக்கள் தொகை நாள்!
நமது புராணங்களில் பூமா தேவி பூமியில் தீயவர் எண்ணிக்கை கூடுதலாக ஆகி விட்டதால் பாரம் தாங்க முடியவில்லை என்று சிவபிரானிடமும் விஷ்ணுவிடமும் முறையிடும் பல வரலாறுகள் உள்ளன. சகாதேவன் கண்ணனை நோக்கி, “ நீ, யாவரையும் நீறாக்கி பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா” என்று கூறுவதை நினைவு கூரலாம்.
நாம் பூமாதேவியின் பாரமாக இயற்கை வளம் சுரண்டும் தீயவராக இல்லாமல் உரிய எண்ணிக்கையில் நல்லவராக இருந்து அவளைப் போற்றி வணங்கும் உண்மையான செல்வங்களாக இருக்க இந்த மக்கள் தொகை நாளில் உறுதி ஏற்போமாக!
***