
Post No. 12,285
Date uploaded in London – 17 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 1
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் அகண்டது. ஆழமானது, நீந்திக் கரையேற முடியாதது.
பல லட்சம் நூல்கள் உள்ள பிரம்மாண்டம் அது.
ஆகவே தான் ஒரு ஆயுள் காலம் போதாது – அதை ஒரு பார்வை பார்க்க!
என்றாலும் கூட அமிர்தக் கடலில் எந்தத் துளியைப் பருகினால் என்ன? அமிர்தம் அமிர்தம் தான்.
சில துளிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு பார்ப்போம்.
இது நூலை முழுமையாகப் படிக்க ஆவலைத் தூண்டும்.
அதனால் ஏற்படும் பயன்களையும் பெறலாம்.
இங்கு அறிமுகப்படுத்தப்படும் எந்த நூல்களும் எந்த ஒரு குறிப்பிட்ட அளவீட்டின்படியோ அல்லது மதிப்பீட்டின்படியோ தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இவை நம் கைக்குக் கிடைத்த துளிகள், அவ்வளவு தான்!
1.
லீலா சுகர் இயற்றிய நூல் இது. இவருக்கு வில்வமங்கள ஸ்வாமிகள் என்ற ஒரு பெயரும் உண்டு.
இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.
இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. இது மதுர காவியம் என்று கூறப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் பால லீலைகளைச் சுவைபடக் கூறும் நூல் இது. சுகப் ப்ரம்மம் கிருஷ்ணரின் பால்ய பருவத்தை அழகுற பாகவதத்தில் சித்தரித்திருக்கிறார். சுகரைப் போல வில்வமங்களரும் கிருஷ்ணரின் பால்ய லீலைகளைக் கொண்டு காவியம் படைத்ததால் இவர் லீலா சுகர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் கேரள பிரதேசத்தில் வாழ்ந்தவர். குருவாயூரப்பன் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இவர் அழைத்த போதெல்லாம் பால கிருஷ்ணன் உடனே வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இவர் பாடப்பாட ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் கிருஷ்ணர் தன் தலையை அசைத்து அப்படிப்பட்ட லீலை உண்மை தான் என்று அங்கீகரித்ததாக வரலாறு கூறுகிறது.
குருவாயூரப்பனால் அங்கீகரிக்கப்படாத ஸ்லோகங்களை லீலா சுகர் தன் நூலில் சேர்க்கமாட்டாராம். குருவாயூரப்பன் அவர் பாடிய ஒரு ஸ்லோகத்தையும் ஒரு நாளில் அங்கீகரிக்கவில்லையெனில் அவர் நீர், ஆகாரம் எதுவும் இன்றி அன்று பட்டினி கிடப்பாராம்.
இந்த பிரேம பக்தி காவியத்தைப் பயில்வதிலும் பாடுவதிலும் பக்தர்கள் பரம சந்தோஷத்தை அடைகின்றனர். இவர் இயற்றிய வேறு சில ஸ்தோத்ரங்களும் நூல்களும் கிழே தரப்பட்டுள்ளன.
ஶ்ரீ சின்ஹம் புருஷாகாரம்
அபிநவ கௌஸ்துப மாலா
தக்ஷிணாமூர்த்தி ஸ்தவம்
காலவத காவ்யம்
துர்கா ஸ்துதி
பாலகிருஷ்ண ஸ்தோத்ரம்
பாலகோபால ஸ்துதி
ஶ்ரீ கிருஷ்ண வரதாஷ்டகம்
வ்ருந்தாவன ஸ்தோத்ரம்
பாவனாமுகுரம்
ராமசந்த்ராஷ்டகம்
கணபதி ஸ்தோத்ரம்
அனுபவாஷ்டகம்
மஹாகாலாஷ்டகம் கார்கோடகாஷ்டகம் க்ருஷ்ணலீலா விநோதம் சங்கர ஹ்ருதயமகமா சுபந்த சாம்ராஜ்யம் திங்கண்ட சாம்ராஜ்யம் க்ரமதீபிகா
இணையதளத்தில் ஏராளமான இவரது நூல்களைப் படித்து மகிழலாம்.
***