ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை (Post No.12,297)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,297

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனுக்கு வருகை தந்து 16 நாட்களுக்கு லண்டன் ஈலிங் பேட்டையில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் தொடர் சொற்பொழிவாற்றிய பொற்கிழிக் கவிஞர், தமிழ் அறிஞர் சொ சொ மீ . சுந்தரம் அவர்களுக்கு நேற்று கோவில் கமிட்டியார் தக்க மரியாதைகளை செய்து கெளரவித்தனர் .பேராசிரியரும் அருணகிரிநாதர் என்ற தலைப்பில் உரையாற்றி, தனது தொடர் சொற்பொழிவினை நிறைவு செய்தார் .

காசியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருக்கும் அகில உலக கோவில் மகாநாட்டில் சொற்பொழிவாற்ற லண்டனிலிருந்து சொ சொ மீ சுந்தரம் புறப்பட்டுச் சென்றார் .

14-7-2023 அன்று தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ . சுந்தரம்  திரு ஞான சம்பந்தர் என்ற தலைப்பில் உரை ஆற்றினார் . சம்பந்தருக்கும் மதுரையில் அரசியலில் ஈடுபட்ட சமணர்களுக்கும் நடந்த மோதல்கள், அனல் வாதம் புனல் வாதம் கதைகளை பலரும் அறிவர். ஆயினும் சமணர்களுக்கும் சைவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதைப் பலரும் அறியார் . மூன்று முக்கிய விஷயங்களை சொ சொ மீ சுந்தரம் அழகாக விளக்கினார் :

1.ஒருவர் செய்த வினைகளின் பலன் அந்த மனிதரைத் தானாகப் பற்றிக்கொள்ளும்

ஆனால் சைவமோ சிவபெருமான் என்ற ஒரு கடவுளே நமக்கு வினைப்பயனைத் தருபவன் என்பதை ஒப்புக்கொள்கிறது . சமணர்களுக்கு கடவுள் இல்லை .

2.பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அவர்கள் அடுத்த பிறவியில் ஆண்களாகப் பிறந்துதான் மோட்சத்தை அடைய  முடியும். இதற்காகப் பெண்கள் இப்பிறவியில் தவம் செய்யவேண்டும் என்பது சமணர் கூற்று

ஆனால் இந்துக்களோ பெண்களும் மோட்சம் அடைந்த பல கதைகளைக் கூறுகின்றனர் . சிவன் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவன் இல்லை . இங்குள்ள கனக துர்க்கை உள்பட நாம் வணங்குவது எல்லாம் பெண் கடவுளர்கள்தான்

3. வழிபாட்டுத் தலங்களில் ஆடலும் பாடலும் கூடாது என்பது சமணர்தம் கொள்கை.;

ஆனால் நாமோ அவைகளை வழிபாட்டின் ஒரு அம்சமாகப் பார்க்கிறோம் ; இந்துக் கடவுளர் அனைவரும் நடனப் பிரியர்கள்

நடராஜன் ஆடிக்கொண்டே இருக்கிறார் ; கணபதியும் ஆடுகிறார்.அவரை நர்த்தன கணபதியாகப்  பார்க்கிறோம் .

கண்ணனும் ஆடுகிறான்.

பாம்புத் தலை மேலே நடஞ்செய்யும் பாதத்தினைப் புகழ்வோம் என்று கிருஷ்ணன்  ஆட்டத்தை பாரதி பாடுகிறார் .

காளியும் ஆடுகிறாள் . பாரதியாரே

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை……. என்று காளியின் நடனத்தைப் பாடுகிறார்..

முருகன் ஆட்டத்தினை அருணகிரிநாதரும் திருப்புகழில் பாடுகிறார்

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட

     மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

xxx

அது மட்டுமல்ல சமணர்கள் விபூதிக்கும் சிவன் நாமத்துக்கும் எதிரிகள்

நமசிவாய என்று யாரவது சொல்லிவிட்டால் கேட்டுமுட்டு (கேட்ட தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்

விபூதி பூசியவனைப் பார்த்தால் கண்டு முட்டு ( கண்டதே தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்.; அவர்களைச் சேர்ந்த கூன் பாண்டியனும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தான் . பாண்டியன் மனைவியான மங்கையர் கரசியார் , மந்திரி குல சிறையார் இருவரும் சம்பந்தரை வரவழைத்து சைவத்தைக் காப்பாற்றினார்கள்.

Xxx

ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..

Xxxxx

மதுரை ஜோக் Joke  – பையக் கொடு !!

ஞான சம்பந்தர்  மதுரைக்கு வந்து பாண்டிய மன்னனை சந்திக்கவிருப்பதை அறிந்த சமணர்கள், சிறுவன் தங்கிய மடத்துக்கு இரவோடு இரவாக தீ வைத்தனர். சம்பந்தரைத்  தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது  சமணர் திட்டம். ஆனால் சிவனின் பரிபூரண அருள்பெற்ற  சம்பந்தரை தீ ஒன்றும் செய்யவில்லை. அந்த தீயையே அவர் பாண்டிய மன்னனுக்கு நோய் தரும் நெருப்பாகத் திருப்பி அனுப்பினார்.

பையவே சென்று பாண்டியர்க்காகவே என்பது  சம்பந்தரின் வாக்கு.

பைய என்பது மெதுவாக என்று பொருள் தரும் சொல். மதுரைத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்.

இது பற்றி சொ சொ மீ ஒரு ஜோக் JOKE சொன்னார்

தமிழ்நாட்டில் பஸ் கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது காசுகளை வாங்கிப் பையில் (SHOULDER BAG)  போடுவார்கள் . பொதுவாக பெரிய நோட்டைக் (Currency Note) கொடுத்தால், மீதி சில்லறையை அப்புறம் வாங்கிக் கொள் என்பார்கள் .

இப்படி மதுரை வாசியிடம் ஒரு வெளியூர் கண்டக்டர் சொன்னார்.

பஸ் பயணியும் அதற்கென்ன பையக் கொடுங்கள் என்றார் (பைய= மெதுவாக).

கொஞ்ச நேரம் ஆயிற்று. மீதிப்  பணத்தை பயணி கேட்டார்.

இன்னும் சில்லறை சேரவில்லையப்பா என்கிறார் பஸ் கண்டக்டர்.

பயணி சொன்னார் – அதற்கென்ன பையக் கொடுங்கள் .

கண்டக்டருக்கு கோபம் வந்து விட்டது

ஏனப்பா , உன் மிச்சக் காசுக்காக என் பையையே கொடு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய் என்று திட்டினார்.

பின்னர் எல்லா பயணிகளும் பைய= என்றால் மதுரையில் மெதுவாக என்று பொருள் என்று விளக்கினர் .

சம்பந்தர் இந்தச் சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தினார்

xxx

ஆணை நமதே நாயனார்

திரு ஞான சம்பந்தரை அழைக்க பாண்டிய நாட்டு ராணியே வந்தார். அப்போது அப்பரும் அங்கே இருந்தார். அப்பருக்கு சமணர்கள் இழைத்த தீமைகள் ஏராளம். அவர் சம்பந்தரை எச்சரித்தார். ஐயோ நீங்கள் சின்னப் பையன். அவர்களோ பொல்லாதவர்கள் கொல்லாமை என்னும் போர்வையில் மறைந்து உறையும் பொல்லாதவர்கள் போகாதீர்கள் என்றார். மேலும் நாளும் கோளும் சரியில்லை என்கிறார் .

சம்பந்தரோ சுப்பிரமணியரின் மறு அவதாரம். நாளும் கோளும் சிவன் அடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லி வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு பதிகப் பாடலைப் / பதிகத்தைப் பாடி இதைப் பாடும் எவரையும் நவக்கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் ஒன்றும் செய்யாது; தீமை என்பதே இராது என்று சொல்லி ஆணை நமதே என்கிறார். இது போலப் பல பாடல்களில் ஆணை என்று கட்டளை இடுகிறார் ; இதனால் இவர்க்கு ஆணை நமதே நாயனார் என்ற பெயரும் உண்டு .(IT IS MY COMMAND/ ORDER)

xxx

இவ்வாறு பல அரிய செய்திகளை சொற்பொழிவில்  வழங்கிய சொ சொ மீ , சிவனுடைய 5 தொழில்களான ஆக்கல் அழித்தல் அருளுதல்  காத்தல்,  மறைத்தல் என்ற 5 தலைப்புகளில் சம்பந்தர் வரலாற்றை அமைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்

சுபம் —-

Tags- கோளறு பதிகம், ஆணை நமதே நாயனார், சமணர் கொள்கைகள்,  பைய, மெதுவாக, பையக் கொடு ஜோக்

Leave a comment

Leave a comment