
Post No. 12,294
Date uploaded in London – 19 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 2
ச.நாகராஜன்
நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.
இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.
சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.
நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.
ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.
சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.
இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.
கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் அரசவையில் பிரதான கவியாக இவர் அங்கம் வகித்தார்.
கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.
பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.
இவரது காவியத்திலிருந்து அறிஞர்கள் அனைவரும் மேற்கோள் கவிதைகளைக் காட்டுவது வழக்கம்.
போஜன் தான் இயற்றிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் இவரது கவிதையைக் காட்டியுள்ளான்.
திரிவிக்கிரம பட்டர் தனது நூலில் பாணரின் கவிதையை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.
ஆகவே இவர் போஜன் மற்றும் பாணரின் காலத்தையொட்டி வாழ்ந்திருக்கக் கூடும்.
நள தமயந்தி சரித்திரம் அனைவரும் அறிந்த ஒன்று தான். என்றாலும் இவர் அதில் மோஹா, விவேகா, காமதேவன், தர்மா என்று பல புதிய கதாபாத்திரங்களைப் புகுத்தி கதையைச் சுவையுள்ளதாக ஆக்கி இருக்கிறார்.
மஹாபாரதத்தின் மூலத்தை இவர் சற்று விரிவுபடுத்தி அழகுற அமைத்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரது காவியம் பாதியில் நின்று விட்டது.
ஏழு அத்தியாயங்களுடன் இது நிற்கக் காரணம் என்ன?
அதற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது:
தேவாதித்யா என்ற பிராமணர் ஒருவர் அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்.
அவர் ராஷ்டிரகூட மன்னரின் அவையில் இருந்தார். ஒரு சமயம் அவர் தனது நகரிலிருந்து வெளியே சென்றிருந்த சமயம் இன்னொரு அறிஞர் மன்னரின் அவைக்கு வந்து தன்னோடு போட்டி போட வல்லவர் யாரேனும் இருக்கிறார்களா என்று வினவினார்.
அப்படி இல்லையெனில் தனக்கு ஜயபத்ரம் எழுதித் தருமாறு கேட்டார்.
ஜெயபத்ரம் வெற்றி பெற்றதற்கான அத்தாட்சிப் பத்திரம்.
மன்னர் திகைத்தார். தேவாதித்யரை அழைக்க ஆளை அனுப்பினார். அவரோ ஊரில் இல்லை.
தேவாதித்யரின் மகனே திரிவிக்கிரம பட்டர். அவர் சோகத்தில் ஆழ்ந்தார். தன் தந்தையைப் போலத் தனக்கு அறிவில்லையே என்று வருந்தினார்.
சரஸ்வதியின் முன் அமர்ந்து தனக்கு அருள் புரிய வேண்டுமென்று உளமார வேண்டினார். அவர் முன் பிரத்யட்சமான சரஸ்வதி தேவி அவருக்கு அருள் புரிவதாகவும் ஆனால் அவர் தந்தை திரும்பி வரும் அளவே அவருக்குத் தனது அருள் இருக்கும் என்று கூறினாள்.
உடனே அவர் நள சம்பு காவியத்தை ஆரம்பித்தார்.
‘புண்ய ஸ்லோகோ நளோ ராஜ’ என்று ஆரம்பித்த அவர் மளமளவென்று கவிதையாகவும் உரைநடையாகவும் நூலை வழங்க ஆரம்பித்தார். மன்னரும் மகிழ்ந்து அவருக்கு நல்ல வெகுமதிகளை வழங்கினார்.
ஏழாவது அத்தியாயத்தை அவர் முடித்த போது அவர் தந்தை ஊருக்குத் திரும்பினார்.
அத்தோடு சரஸ்வதி கூறிய படி அவரது கவிதை புனையும் ஆற்றல் நிற்க நூலும் ஏழு அத்தியாயங்களுடன் நின்று விட்டது.
என்றாலும் இந்த ஏழு அத்தியாயங்களில் உள்ள பல பாடல்களைப் பின்னால் வந்தவர்கள் பல இடங்களில் எடுத்துக்காட்டாகக் காட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட அரிய நூல் என்பது விளங்குகிறது.
நள தமயந்தி சரித்திரத்திற்கு அணி சேர்க்கும் அழகிய நூல் நள சம்பு!
***