
Post No. 12,299
Date uploaded in London – 20 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம் – பாரதியார்
மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்
நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்யாகுமாரி..
பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.
சக்திபீடங்களில் முக்கியமானது
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.
பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி எனப்படும் சதி தேவி தனது தந்தை புரியும் யாகத்திற்குத் தன் கணவனான சிவபிரானை அழைக்காதது குறித்து பெரிதும் வருத்தமும் கோபமும் கொள்கிறாள்.
தான் மட்டும் யாகத்திற்குச் செல்கிறாள். ஆனால், தட்சன் செய்த அவமரியாதை காரணமாக யாக குண்டத்தில் விழுந்து தன் உயிரை விடுகிறாள். இதை அறிந்த சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டு சதியின் உடலை ஏந்தியவாறே தாண்டவம் ஆடி அலைகிறார்.
இதைக் கண்ணுற்ற மஹாவிஷ்ணு சதியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுகளாக ஆக்க, அவை பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் விழுகின்றன. பெரும் வரங்களை நல்கும் சக்தி பீடங்களாக அந்த இடங்கள் மாறி அந்த இடங்களிலெல்லாம் அன்னை ஆட்சி புரிந்து பக்தர்களுக்கு இன்றளவும் அருள் பாலித்து வருகிறாள்.
தேவியின் முக்கிய அங்கமான முதுகுப் பகுதி விழுந்த இடமே சக்தி பீடமான கன்யாகுமாரி!
கன்யாகுமாரி தல வரலாறு

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா.
மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.
சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர்.
அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.
கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.
ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.
மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.
சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.
திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.
இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.
தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.
குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.
– தொடரும்