
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,303
Date uploaded in London – 21 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
தேவியின் மூக்குத்தி
தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது – ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.
இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.
அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.
கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து
தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.
கோவில் அமைப்பு
இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால்
தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.
கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமணம் கைகூடும் தலம்
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.
இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் சென்று நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.
இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில்
கன்யாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.
விவேகானந்தர் தவம் புரிந்த இடம்
கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.
ஶ்ரீபாதப் பாறை
இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப் பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
மருந்துவாழ் மலை
கன்யாகுமரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருந்துவாழ்மலை பற்றிய ஆன்மீக வரலாறு ஒன்று உண்டு,
ஹனுமார் அரிய உயிர்காக்கும் சஞ்சீவனி மூலிகையை மலையுடன் பெயர்த்துக் கொண்டு வந்த போது மலையின் ஒரு பகுதி இங்கு விழ அது அரிய மூலிகைகளைக் கொண்ட மருந்து வாழ் மலை என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மலை 2500 அடி உயரம் உள்ளது.
அரிய வகை மூலிகைகளை இது கொண்டுள்ளது. அகத்தியர் இங்கிருந்து தவம் புரிந்து இந்த இடத்திற்கு சக்தி ஊட்டியுள்ளார்.
கன்யாகுமரியில் 131 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.
குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!
***
கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள 132 நூல்கள் பற்றிய விவரங்களை
இணையதளத்தில் காணலாம்.