
Post No. 12,311
Date uploaded in London – 23 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)
நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
உலக சந்திர தினம்!
உலகெங்கும் ஜூலை மாதம் இருபதாம் நாள் உலக சந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கியநாடுகளின் பொதுச்சபை இந்த நாளை உலக சந்திர தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானத்தை 2021இல் நிறைவேற்றியது.
சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதரே இல்லை. காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சந்திரனைச் சுட்டிக் காட்டி அம்புலிமாமா வா வா என்று அழைத்து வந்திருக்கிறோம். காதலன் காதலியைப் பார்த்து, ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று சந்திரன் போன்ற முகம் என்று வர்ணித்து மகிழ்கிறான்.
காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கவர்ச்சியினால் விண்வெளி யுகத்தில் மனிதன் சந்திரனில் காலடி பதிக்கத் திட்டமிட்டான்; வெற்றியும் பெற்றான். இனி மிகப் பெரும் வெற்றிகளையும் பெறப் போகிறான். ஆகவே தான் இந்தக் கொண்டாட்டம்.
சந்திர மனிதன்!
உலக சந்திர தினமாக ஜூலை 20 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது?
இந்த நாளில் தான் 1969ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனித குலத்தின் பிரதிநிதியாக முதன் முதலில் சந்திரனில் தன் காலடித் தடத்தைப் பதித்தார்.
அமெரிக்காவின் பெருமுயற்சியின் காரணமாக சந்திரனுக்கு விண்கலத்தில் பயணித்து அங்கு இறங்கி தன் காலடியைப் பதித்த அவர், “மனிதனுக்கு அது ஒரு சிறிய தடம். மனிதகுலத்திற்கு பிரம்மாண்டமான தாவல்” என்று குறிப்பிட்டார். மொத்த உலகமும் அவரது இந்தக் கூற்றை ஆமோதித்தது.
ஓஹையோவில் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் வானில் பறப்பதில் தீரா ஆசை கொண்டார். தன் வீட்டிலேயே ஒரு சிறிய விண்ட் டனலை அமைத்து விமானங்களில் சிறிய மாதிரிகளைச் செய்து பார்ப்பது அவரது பொழுது போக்கு. படிப்பை முடித்த பின்னர் விமான நிறுவனத்தில் சேர்ந்த அவர் இரண்டு லட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு அடி உயரம் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 1962இல் விண்வெளி வீரர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சந்திரனை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். உலக சாதனையை நிகழ்த்தினார்.
எதற்காக சந்திரனுக்குப் பயணம்?
எதற்காகப் பெரும் பொருட்செலவில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?
மனித குலம் நசித்து விடாமல் நீடித்து இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் தான்!
நாளுக்கு நாள் பெருகி வரும் ஜனத்தொகை, பூமியின் ஆதார வளங்களான நிலம், நீர், காற்று ஆகியவற்றை அசுத்தப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தல், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் ஏற்படும் போரினால் மனித குல நாசம் ஆகியவை போன்ற காரணங்களினால் மனிதன் இன்னொரு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான முயற்சி தேவை என்று ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
பிரபல திரைக்கதை வசனகர்த்தாவான சார்லஸ் ப்ரோஸர், அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் மனித குலம் இருக்குமா என்று கவலைப்பட்டு ‘கையாசெலின் – சந்திரனுக்குச் சென்று குடியேறி பூமியைக் காப்போம்’ என்ற படத்தை எடுத்தார். உலகெங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் விண்வெளிக்குச் சென்று குடியேறினாலொழிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட மனித குலம் தாக்குப் பிடிக்காது என்றார். ஆனால் இதை மறுத்த சார்லஸ் ப்ரோஸர் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிக மிக அதிகப்படியான காலம். உடனடியாக நாம் விண்வெளியில் குடியேற வேண்டும்” என்றார்.
விண்வெளியிலும் சென்று ஆதிக்க மனப்பான்மையைக் கொள்ளக் கூடாது என்று விண்வெளி உடன்பாடு ஒன்று சர்வதேச அளவில் ஒப்பந்தமாகி உள்ளது. இதை ஏராளமான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் படி ஏராளமான பாதுகாப்பு விதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நான்கு நாடுகளில் ஒன்று இந்தியா!
சந்திரன் மீது கண்ணைப் பதித்து ஆக்கபூர்வமான வெற்றிகளைப் பெற்றுவரும் நாடுகள் நான்கு. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவையே அந்த நாடுகள்.
முதலில் விண்வெளிப் பயணம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ரஷியா. அதைத் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் விண்வெளி ஆய்வையும் பயணத்தையும் மேற்கொண்டு வெற்றி கண்டது அமெரிக்கா. சீனா தனது உள்ளார்ந்த ஆசையால் விண்கலங்களைத் தனியே அனுப்பி வெற்றிகளைப் பெற்றது.
இந்த விண்வெளிக் களத்தில் இறங்கிய இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய இரு கலங்களை சந்திரனை ஆராய அனுப்பியது.
2008 அக்டோபர் 22ஆம் தேதி செலுத்தப்பட்ட சந்திரயான் 1 மற்ற நாடுகள் கண்டுபிடிக்காத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தது. சந்திரனில் நீர் அணுத்துகள்கள் உள்ளன என்பதை முதன் முதலாக இந்திய விஞ்ஞானிகளே கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.
சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இப்போது 2023இல் சந்திரயான்- 3 ஜூலை 14ஆம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
40 நாட்கள் பயணப்பட்டு சந்திரனில் மெதுவாகத் தரை இறங்கும் சந்திரயான் -3 அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வெற்றியே பெறுவோம்.
*** தொடரும்