
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,316
Date uploaded in London – 24 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)
நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
சந்திர வளம்!
சந்திரனில் குடியிருப்பு அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பிரம்மாண்டமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
முதலில் விண்வெளியில் பறப்பதற்கே பெரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜீரோ கிராவிடி எனப்படும் எடையற்ற நிலையில் வாழ்வது என்பதே ஒரு அரிய காரியம். சாப்பிடுவது, உறங்குவது, ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தொடுவது என்பது கூட எளிதில் முடியாத காரியம். மனித குல சந்ததி பெருக்கத்தை எப்படிச் செய்ய முடியும்? விண்ணில் கர்ப்பமுற்று குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகள் காண முயன்று வருகின்றனர்.
சந்திரனின் மீது சீனா காட்டும் தீவிர அக்கறையைப் பற்றி ஆராயப் புகுந்த உலக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டு பிரமித்தனர்.
பூரண எரிபொருள் – பெர்ஃபெக்ட் ஃப்யூயல் – எனப்படும் ஹீலியம்- 3 சந்திரனில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.
எதிர்காலத்தில் எந்த நாடுகளிடம் ஹீலியம் – 3 இருக்கிறதோ அவையே வல்லரசு நாடுகள். ஆகவே தான் சீனா சந்திரனைக் ‘கைப்பற்ற’ தீவிரம் காட்டுகிறது.
இந்த ஹீலியத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜெரால்ட் குல்கின்ஸ்கி. இவரை அமெரிக்கா அழைத்தது. நாஸா தனது ஆலோசனைக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டது.
ஹீலியம் – 3 சந்திரனில் ஒரு மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறது என்பதைச் சொன்னவர் குல்கின்ஸ்கி தான்.
பூமியில் கிடைக்காத இந்த அரிய எரிபொருளை யார் முதலில் சந்திரனிலிருந்து கொண்டு வருகிறார்களோ அவர்களே உலகை ஆளப்போகும் மன்னர்கள்!
ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு சொல்லலாம். வெறும் நாற்பதே நாற்பது மெட்ரிக் டன் ஹீலியம் – 3இன் ஆற்றல் மூலமாக அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சக்தியைப் பெறலாம்!
சந்திரப்பரப்பை 700 டிகிரி சென்டிகிரேட் அளவு உஷ்ணப்படுத்தினால் போதும், ஹீலியம் வாயு தானாகப் பிரியும். அதைப் பிடித்துக் குளிர வைக்க வேண்டியது தான்.
இது மட்டுமல்ல. மலைக்க வைக்கும் இதர தாது வளங்களில் முக்கியமான பிளாட்டினமும் சந்திரனில் அபரிமிதமாக உள்ளது. லட்சக்கணக்கான விண்கற்கள் சந்திரனின் மீது வெகு காலம் மோதியதால் ஏற்பட்ட பிளாட்டின பரப்பு, சந்திரனை தங்க முலாம் பூசிய சந்திரப் பரப்பு என்று கவிஞர்கள் சொல்லி வரும் வர்ணனையை மாற்றி, பிளாட்டின முலாம் பூசப்பட்ட சந்திரன் என்று சொல்லுமளவு மாற்றி இருக்கிறது.

இந்த பிளாட்டினத்தைச் சந்திரனிலிருந்து கொண்டு வந்தால் ‘ரேர் எர்த் மார்க்கெட்’ எனப்படும் அரியவகைச் சந்தைப் பொருள்களில் ஒன்றாக இது இருக்கும்.
குறைந்தபட்ச மதிப்பீடாக ஆண்டிற்கு சுமார் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினத்தை உலகில் விற்க முடியும். உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!
சந்திரன் உலகினர் அனைவருக்கும் பொது!
இப்படி அரிய வளத்தைக் கொண்டிருக்கும் சந்திரன் அனைவருக்கும் பொது என்ற கருத்தைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டன!
ஆனால் விசித்திரத்தில் விசித்திரம் என்னவெனில் இப்போதே ல்யூனார் எம்பஸி என்ற நிறுவனம் சந்திரனில் பிளாட் போட்டு பூமியில் விற்கிறது. இந்த ரியல் எஸ்டேட் விற்பனையை ‘அன் – ரியல் எஸ்டேட்’ (Unreal Estate) என்று பலரும் கிண்டல் செய்தாலும் வாங்குபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் – தங்கள் சந்ததியினருக்காக!
இந்த நிறுவனத்துடன் சண்டை போட்டு ஒரு விவசாயி, சந்திரன் தன்னுடையதே என்று போட்டிக்கு வந்தார்.
அவர் கூறிய காரணம் அனைவரையும் அசத்தி விட்டது.
250 ஆண்டுகளுக்கு முன்னர் பிரஷியா நாட்டை பிரடெரிக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மற்றவரின் நோய்களைத் தீர்க்க வல்ல அபூர்வ ஆற்றல் இருந்தது. அவர் தனது அபூர்வ ஆற்றலால் மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிரடெரிக் மன்னர் அந்த விவசாயிக்கு சந்திரனையே தானம் செய்து சாசனம் ஒன்றையும் வழங்கினார்.
அந்த விவசாயின் பரம்பரையில் தான் வந்ததால் தனக்கே சந்திரன் சொந்தம் என்று சந்திர சாஸனத்தைக் காட்டினார் அந்த விவசாயி.
பெண்மணிகள் விரும்பும் சந்திரன்!
வீராங்கனை கல்பனா சாவ்லாவை அறியாதவர் இருக்க முடியாது. அடுத்து இந்திய வமிசாவளியினரான சுனிதா வில்லியம்ஸும் விண்வெளி வீராங்கனை தான். இன்னும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உண்டு.
நமது பெண்மணிகளுக்குச் சந்திரன் என்றால் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. நிலவில் தேன் நிலவு கொண்டாட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
முதன் முதலில் விண்வெளியில் சுற்றுலா சென்ற முதல் பெண்மணியாகத் திகழ்கிறார் அனூஷே அன்சாரி. இவரே இப்படிப் பயணம் மேற்கொண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி ஆவார். முதலாவது ஈரானியப் பெண்மணியும் இவரே.
விண்வெளி சென்ற வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் கலத்தை விட்டு வெளியே வந்து நடந்தும் காட்டி விட்டனர்.
நவகிரகங்களில் சந்திரன்
இந்திய நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை நவ கிரகங்களும் 27 நட்சத்திரங்களுமே.
சந்திரன் மனதிற்கு அதிபதி என்று கூறுகின்றன நமது அறநூல்கள்.
இந்த மனதிற்கு அதிபதியை இந்தியா வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நாம் பெருமை கொள்வது தவறா, என்ன!
***