தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !! (Post No.12,340)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,340

Date uploaded in London – –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகில் தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும்தான் அதிசய மொழிகள். ஒரே எழுத்துக்கு அதிகமான பொருள்கள் இருப்பதால் புலவர்கள் அவைகளைப் பயன்படுத்தி பெரிய இலக்கிய விந்தைகளைச்  செய்தார்கள் . ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் ஓரெழுத்து உண்டு . ஐ” I “என்றால் ‘நான்’ போனற ஒன்றிரண்டுதான். ஆனால் தமிழில் 54 ஓரெழுத்து சொற்கள் உள . அவற்றில் கோ என்ற எழுத்துக்குத்தான் அதிக பொருள்/ அர்த்தங்கள்.

சம்ஸ்க்ருத மொழியில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்கள் என்று தனித்தனி அகராதிகளே இருக்கின்றன. அது  மட்டுமல்லாமல் அவற்றுக்குள்ள மந்திர சக்திகளையும் வேத விற்பன்னர்கள் கண்டு பிடித்துள்ளனர். எடுத்துகாட்டாக ஸ்ரீ என்ற எழுத்தைச் சொல்லலாம். இதற்குள்ள பொருள், மந்திர சக்தி முதலியன பற்றி புஸ்தகமே எழுதலாம் ; காஷ்மீரில் ஸ்ரீ நகர் உண்டு. ஒரிஸ்ஸாவில் ஸ்ரீ நகர் ( புரி ) உண்டு பர்மாவில் ஸ்ரீ நகர் உண்டு; ஸ்ரீ விஜய என்ற விஷ்ணு சஹஸ்ர நாமச் சொல்லைக்கொண்டு தென் கிழக்கு ஆசியாவில் பிரம்மாண்டமான இந்து சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்கள்.

xxxx

இப்பொழுது தமிழ் மொழி அதிசயங்களைக் காண்போம்.

முதலில் ஓரெழுத்து பற்றி தொல்காப்பியத்தில் காண்கிறோம்

நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

–தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,; சூத்திரம்  43

XXX

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே

–தொல்காப்பியம் எழுத்ததிகாரம், ; சூத்திரம் 44

XXX

பொருள்

ஆ , ஈ , ஊ , ஏ, ஐ, ஓ ,ஒள ஆகிய நெட்டெழுத்து ஏழும் தனித்து நின்று பொருள் தரும்..

ஆனால் அ இ உ எ ஒ ஆகிய குற்றெழுத்து ஐந்தும் தனித்து நின்று பொருள் தராது.

இதற்கு எடுத்துக்காட்டாக உரைக்காரர்கள் காட்டும் சொற்கள் –

ஆ- பசு; ஈ – கொடு , ஈ ; ஊ -ஊன் ; ஏ -அம்பு; ஐ- அழகு; ஓ – மதகு நீர் தாங்கும் பலகை

தொல்காப்பியருக்குப்  பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தி முனிவர் தமிழில் தோன்றிய பல மாறுதல்களைக் கணக்கிற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றி நன்னூல் என்ற புஸ்தகத்தை நமக்கு அளித்தார் ; அவர் சொல்கிறார்,

உயிர்மலிலாறுந் தபநவி லைந்தும் 

கவச வினாலும் யவ்விலொன்றும்

ஆகு நெடில் நொது வாங் குறிலிரண்டோடு

ஓரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின

–நன்னூல் , எழுத்ததிகாரம், 129

சிறப்பான 42  எழுத்துக்களை பவணந்தி முனிவர் சொன்னபோதிலும் , சிறப்பில்லாத 12 எழுத்துக்கள் என்ன என்பதையும் உரைகாரர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

42 சிறப்பான ஓரெழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு பொருள் உண்டு.; உரைகார்கள் சிறப்பில்லாத 12 எழுத்துக்களையும் சேர்க்கவே நமக்கு 54 ஓரெழுத்து சொற்கள் கிடைக்கின்றன .

ஒரு எழுத்துக்கு ஒரு பொருள்தான் என்று எண்ணிவிடக்கூடாது.

ஒரே எழுத்துக்கு பல பொருட்களும் கிடைக்கும் .

கோ என்றால் அரசன்  மேலும்  44 அர்த்தங்கள் உள

xxxx

கோ என்றால் நிறைய அர்த்தங்கள் உள ; அவையாவன

பிற்கால உரையாசிரியர்கள் தமிழ் ஸம்ஸ்க்ருதம் என்று வேற்றுமை பாராட்டவில்லை. எந்தத்  தமிழ்  அகராதியை எடுத்தாலும் அதில் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்திருக்குறளை எடுத்துக் கொண்டால் அதில் ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாத அதிகாரமே இராது. ஏனெனிலவர் இரண்டு மொழிகளையும் தன் இரு கண்கள் எனப் பாவித்தார்

கீழே கோஎன்பதற்கு தமிழ் அகராதி  பசு என்று சொல்லும். சம்ஸ்கிருதத்திலும் கோ – மாதா பசு’தான்

மேலும் உள்ள பொருள்கள் 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியைக் கொண்டு காண்போம்

அரசன் அம்பு, ஆகாயம் , ஆண்மகன், இடியேறு எருது, கண் , திசை நீர், பசு, கோ -வேனல், தெய்வ லோகம் , பூமி, மலை, வச்சிராயுதம் ., இலந்தை, உரோமம் , கிரணம், இரக்கக் குறிப்பு, சந்திரன், சூரியன், கோமேதக யாகம், பொறி, மலை, மாதா, மேன்மை, வாணி, வெளிச்சம்,பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை , குசவன், சொல், இரசம்/சாறு, வெந்நீர், கோவை செய், தொடு, ஒழுங்காக்கு, கதை கட்டு , தறி, தடு , எதிர், அழைப்புக்குறி , பொறி, உயிர் மெய் எழுத்து .

இவைகளில் சில ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆனாலும் தமிழ்ப் புலவர்கள் அவைகளை பாடல்களில் பயன்படுத்தியத்தைக் கருத்திற்கொண்டே அகராதி தொகுத்தோர் சொற்களை சேர்த்துள்ளனர்..

சிறப்பான 42 சொற்களுக்கு பல கலைக்களஞ்சியங்கள் குறைந்தது ஒரு சொல்லையாவது கொடுத்துள்ளன . சிறப்பில்லாத 12 சொற்களை அவை காட்டவில்லை. இதோ சிறப்பில்லாத , தொல்காப்பியர் சொல்லாத, பவணந்தி சொல்லாத ஓரெழுத்துக்கள்:–

அ – முதல் எழுத்து; அஃ றி ணைப்பன்மை ஈறு ; ஆறாவதன்  பன்மை உருபு , சாரியை, நினக்கு சுட்டு, அவன் . சம்ஸ்க்ருதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் .

இ – இவன் , இது, சுட்டு, இக்கொற்றன்

உ- சுட்டு, உவன் , உ க்கொற்றன்

எ – எ க்கொற்றன், வினா, எவன்

ஒ – மயில்

ஒள – அழைத்தல்,, வியப்பு, தடை, அனந்தம் , கடித்தல், பூமி

கீ – கிளியின் குரல்

கு – பூமி, கெடு , நான்காம் வேற்றுமை  உருபு

கெள – கொள்ளு , தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கவ் வென்னேவல் ,

கை – இகழ்ச்சி

பீ – அச்சம், மலம்

வீ – சாவு, நீக்கம், பறவை, பூ,  வீ வென்னேவல்

ஆக பவணந்தி சொன்ன 42 எழுத்துக்களுடன் இந்த 12-ஐ  யும் சேர்த்தால் தமிழில் 54 ஓரெழுத்துக்கள் உண்டு.

திருக்குறளில் அ -கரம் என்று துவங்கும் முதல் குறளுக்கும் , பகவத் கீதையில் நான் அகாரமாக இருக்கிறேன் என்ற சொல்லுக்கு பாஷ்யக்காரர்கள் செய்த உரைகளையும் படிப்போருக்கு அ – என்ற எழுத்தின் பெருமை மேலும் விளங்கும். அது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பதை அறிந்தே வள்ளுவனும் முதல் குறளில் பயன்படுத்தினான் போ லும் ! ஒள என்ற வியப்புக்குறியை நாமும் வவ், வாவ்  vaav, vav  என்று இன்றும் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்!

—subham—

Tags- ஓரெழுத்து , அதிசயம், தமிழ், கோ , பவணந்தி தொல்காப்பியம், 42, 54, அர்த்தம் , பொருள்

Leave a comment

Leave a comment