
Post No. 12,343
Date uploaded in London – 30 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் ஆடி மாத அம்மன் வரிசைத் தொடரில் 25-7-2023 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்
இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்
இன்றைய கர்நாடக மாநிலத்தில், மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் பிரபலமான 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாக இலங்குகிறது
மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சாமுண்டி தேவி தனது பிரதிநிதியாக மைசூரை ஆண்டு வந்த மன்னர்களை நியமித்து அறநெறி வழியில் அவர்களை ஆட்சி செய்ய வழி காட்டி வந்த தெய்வம்.
சாமுண்டியை மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக அனைவரும் வழிபட்டு வந்தனர்; வருகின்றனர்.
தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை இலங்குகிறாள் சாமுண்டி.
கிரௌஞ்ச பீடம்
சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் கிரௌஞ்ச பீடம் என்று அழைக்கப்படுகிறது.
மஹாநந்தி
இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில் அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தி சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது.
பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நீளம் சுமார் 16 அடி. உயரம் சுமார் 13 அடி.
ஆக, நாட்டின் உள்ள நந்திகளில் பெரிய நந்தியைக் கொண்டுள்ளது சாமுண்டீஸ்வரி ஆலயம்.
12ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள வம்ச மன்னர்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.
பின்னர் இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.
மகாபல கிரி
மகாபல கிரி என்று அழைக்கப்பட்ட இந்த மலையில் மகாபலேஷ்வர் என்ற பெயரில் சிவபெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. இது மிகப் புராதனமானது. இந்த ஆலயத்தில் உள்ள கணபதி மற்றும் ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்திகள்.
முன்பொரு காலத்தில் மகாபலேஸ்வரர் ஆலயமும் சாமுண்டீஸ்வரி ஆலயமும் ஒரே மதில் சுவருக்குள் அமைந்திருந்தது. பின்னால் சாமுண்டீஸ்வரியின் தேர் பவனிக்காக ஆலயங்கள் பிரிக்கப்பட்டு தேர் செல்லும் பாதை தனியே அமைக்கப்பட்டது.
சுயம்பு லிங்கமாக உருவாகியுள்ள மகாபலேஸ்வரர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வலது புறம் உள்ள ஆலயத்தில் இருந்து அருள் பாலித்து வருகிறார்.
மகிஷாசுர வதம்
சாமுண்டி தேவியைப் பற்றி ஸ்கந்த புராணமும் மார்க்கண்டேய புராணமும், தேவி பாகவதமும் விவரிக்கின்றன.
முன்னொரு காலத்தில் மைசூர் பிரதேசத்தை மகிஷாசுரன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அவன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்து அவர் அருளைப் பெற்றான். தனக்கு சாகா வரம் வேண்டும் என்று அவன் கேட்க சிவபிரான் அவனிடம் அவனுக்கு ஆண்கள், விலங்குகள், நீர் ஆகியவற்றால் மரணம் ஏற்படாதிருக்க வரத்தை அருளினார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மகிஷாசுரன் தனக்கு மரணமே இல்லை என்ற மமதையில் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
இதனால் தேவர்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகவே அவர்கள் சிவபிரானை அணுகி தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபிரானும் மனம் கனிந்து அவர்களிடம் இதற்காக தேவியை அணுகுமாறு கூறினார்.
பார்வதி தேவியை அணுகிய தேவர்கள் தங்கள் நிலையைத் தெரிவிக்க, தேவி அவர்களிடம் அஞ்ச வேண்டாம் என்று கூறி தாமே சாமுண்டியாக அவதரிப்பதாக உறுதி கூறினார்.
அதன்படியே ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சாமுண்டியாக மைசூரில் அவதரித்தார்.
மகிஷனுடன் உக்கிரமாகப் போர் புரிந்த சாமுண்டி தேவி அவனை வதம் செய்தார்.
தேவியின் உக்கிரத்தைத் தாங்க முடியாத மகிஷாசுரன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கடைசியில் சப்தமி திதி, மூல நட்சத்திரத்துடன் கூடிய திங்கள்கிழமை அன்று சாமுண்டி மலைக்கு ஓடி வந்து அம்மனின் திருப்பாதங்களில் சரண் அடைய அவனது தலையைத் துண்டித்தாள் அம்மன். அவனைத் தனது பாதங்களில் ஐக்கியப்படுத்த அனைவரும் மகிஷனின் வதத்தால் மகிழ்ந்தனர்.
மகிஷன் வதம் செய்யப்பட்ட பின், தேவர்கள் தேவியின் உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்தினர்.
மார்க்கண்டேய மஹரிஷி தேவிக்கு எட்டு கரங்களுடனான வடிவத்தை இங்கு அமைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அம்மன் அங்கிருந்து அருளாட்சி செய்து வருகிறார்.
மகிஷனின் நினைவாக மகிஷாவூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி மைசூர் என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
மார்க்கண்டேயரின் ஆசிரமும் இந்தப் பகுதியில் உள்ளது. மார்க்கண்டேயர் கடும் தவத்தை இங்கு மேற்கொண்டதை புராணங்கள் சித்தரிக்கின்றன. இங்குள்ள சிவலிங்கம் பக்தர்களால் விசேஷமாக வழிபடப்படுகிறது.
***
தொடரும்