இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி (Post.12,347)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,347

Date uploaded in London –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மாலைமலர் ஆடி மாத அம்மன் வரிசைத் தொடரில் 25-7-2023 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்

இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

சாமுண்டி பெயர் காரணம்

தேவி  சும்ப நிசும்பர்கள் என்ற அரக்கர்களையும் வதம் செய்தாள். அந்த அரக்கர்களின் சேனாதிபதிகளான சண்ட முண்டர்களையும் வதைத்ததால் சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள். தேவி பாகவதம் ஐந்தாம் ஸ்கந்தம் 26ஆம் அத்தியாயம் கோரமாக நடந்த சண்ட முண்டர்களுடனான தேவியின் கோர யுத்தத்தை வர்ணிக்கிறது.

சாமுண்டி தேவி 64 யோகினிகளில் ஒரு யோகினியாக அருள் சக்தியுடன் விளங்குகிறார். ஒரிஸாவில் புவனேஸ்வரில் 64 யோகினிகளுக்கான கோவில் உள்ளது. இங்கு சாமுண்டாவின் சிலை உள்ளது.

ப்ரஹ்மி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, குமாரி, வராஹி, ஐந்திரி, சாமுண்டா என்ற சப்த மாதர்களில் ஒருவர் சாமுண்டி  தேவி.

சாமுண்டி ஆன்மீக சக்தியை வெளிக் கொணரும் மஹா சக்தியாக வர்ணிக்கப்படுகிறாள்.

தேவியின் பிரதிநிதியாக ஆண்ட மைசூர் மன்னர்கள்

மைசூர் உடையார் மன்னர்களின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி.

மன்னனைக் காத்த அம்மனின் அருள் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மைசூரை நான்காம் சாம்ராஜ உடையார் ஆண்டு வந்தார். அவர் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து திரும்பும் போது மழை பெய்யவே, ஒரு மரத்தடியில் பல்லக்கு

நிறுத்தப்பட்டு அவர் கீழே இறங்கினார். மலை உச்சியை நோக்கி அவர் வேண்ட நினைத்த போது கோவில் சரியாகத் தெரியாததால் அங்கிருந்து நகர்ந்து தள்ளிச் சென்று கோவிலை தரிசனம் செய்தார். அதே சமயம் பல்லக்கு இருந்த மரத்தின் மீது மின்னலுடன் இடி விழ அது எரிந்து சாம்பலானது. தன் உயிரைக் காத்த அம்மனுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் வண்ணம் கோவிலைச் சிறப்புற விரிவாக்கினார்.

மன்னர் அம்மனுக்கு சமர்ப்பித்த காணிக்கையும் விசேஷமான ஒன்றாக அமைந்தது. தங்கக் காசுகளால் அமைந்த நக்ஷத்திர மாலிகா என்ற காசுமாலையை அவர் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்.

அதில் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள முப்பது ஸ்லோகங்கள் தேவியைப் போற்றுகின்றன.

கோவிலின் அமைப்பு

கோவில் அமைப்பு சிறப்புற அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். ராஜ கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கர்ப்பகிருஷம் என நாற்கர வடிவில் இது உள்ளது.

கோவிலின் கோபுர வாயிலில் கண்பதி அருள் பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறையின் முன்னே கொடிமரம், அம்மனின் பாதம் நந்தி ஆகியவை அமைந்துள்ளன. சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்க வாயிலில் நந்தினி மற்றும் கமலினி ஆகியோர் துவாரபாலகியராக உள்ளனர்.

எட்டுக் கரங்களுடன் சாமுண்டி அம்மன் அருள் பாலிக்கிறார்.

ஶ்ரீ சக்கரம்

இங்குள்ள ஶ்ரீ சக்கரம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

6” x 6” x 6” என்ற அளவில் பஞ்ச தாதுக்களால் அமைக்கப்பட்ட யந்திரம் இது. இன்னொரு பூப்ரஸ்தார சக்கரமும்  6” x 6” என்ற அளவில் 1964ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. தங்கத்தினாலான இந்த சக்கரம் 60 தோலா எடையுள்ளது. சாமுண்டியின் பீடத்தில்  தேவியின் பாதங்களுக்கு அருகே இவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சகல தோஷங்களையும் போக்கி நலன்களை அருள்வது ஶ்ரீ சக்கரம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

மகிஷனின் சிலை

சாமுண்டி மலையில் உள்ள பிரம்மாண்டமான நந்தியைப் போலவே இங்குள்ள மகிஷாசுரனின் சிலையும் பிரம்மாண்டமான ஒன்று. இது மேற்கு நோக்கிச் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ளது. வலது கையில் தலைக்கும் மேலே தூக்கிப் பிடித்த பெரிய வாளையும் இடது கையில் படம் எடுக்கும் நாகப் பாம்பையும் ஏந்தியவாறு அச்சுறுத்தும் பார்வையுடன் மகிஷனின் சிலை அமைந்துள்ளது.

பிரச்சினைகளைப் போக்கும் தெய்வம்

இங்கு வந்து வழிபடுவோரின் பிரச்சினைகள் திர்ந்து விடும்.குறிப்பாக கணவன் – மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம்.

சாமுண்டீஸ்வரியை பக்தர்கள் அனைவரும் விமரிசையாக நவராத்திரி –  – தசரா -விழாவில் கொண்டாடி வருகின்றனர். ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள, வண்ண மின் விளக்குகள் ஒளிர, அம்மன் யானை மீது சிம்மாசனத்தில் அமர்ந்து பவனி வருகிறாள்.

மிகச் சிறப்பாக நடக்கும் இந்தத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.

மன்னர் மற்றும் மக்கள் என அனைவருக்குமான தெய்வமாகத் தொன்று தொட்டு இருந்து வரும் சாமுண்டீஸ்வரி தனது அருளால் அனைவரையும் நல்வழிப்படுத்தி சகல நலங்களையும் தந்து வருவது கண்கூடு.

சாமுண்டீஸ்வரியை வணங்குவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்!

****

Leave a comment

Leave a comment