ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ (Post No.12,377)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,377

Date uploaded in London –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7 

ச.நாகராஜன் 

ஶ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர் அருளிய நூல் ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ 

இதில் 100 ஸ்லோகங்கள் உள்ளன.

இந்த நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 41 ஸ்லோகம் முடிய ஆனந்த லஹரீ என்று கூறப்படுகிறது.

அடுத்து 42 முதல் 100 ஸ்லோகம் முடிய சௌந்தர்ய லஹரீ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நூலில் ஏராளமான சிறப்புகள் உண்டு,

முதலில் இது ஒரு மந்திர சாஸ்திர நூலாகும்.

மந்திரம், தந்திரம், யந்திரம் அடங்கியுள்ள இந்த நூல் ஶ்ரீ வித்யா உபாசகர்களால் பெரிதும் மதிக்கப்படும் நூலாகும்.

ஏராளமான பிரயோக முறைகள் இதில் இருப்பதால் இதை குரு மூலமாகக் கற்பதே சிறந்தது.

தேவியின் பல நாமங்களை சங்கரர் அழகுற இதில் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு சக்தி உண்டு என்பதால் நூல் முழுவதையும் பாராயணம் செய்வோர் தேவியின் அருளுக்குப் பாத்திரமாகி அபாரமான சக்தியைப் பெறுவர்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறலாம். எந்த ஸ்லோகத்தை என்ன பலனுக்காகப் பெற, எப்படி நியமத்துடனும் நிவேதனத்துடனும் செய்ய வேண்டும் என்பதற்கான நியதிகள் உண்டு.

சிவ சக்த்யோ என்று முதல் ஸ்லோகத்தில் ஆரம்பித்து தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் என்று நூல் முடிகிறது.

இகலோகத்தில் சகல சுகமும் பெற 22ஆம் ஸ்லோகத்தைத் துதிக்கலாம்.

பவானி என்று ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகம் பவானி என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அம்பாள் பக்தனுக்கு ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுவதாக உறுதி கூறுகிறது.

ஸ்லோகம் இதோ:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவானி த்வமிதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ||

இதன் பொருள்:

“ஹே, பவானி! உன் அடிமையான் என்னை நீ கருணையுடன் கூடிய உனது கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று துதி செய்ய விரும்பி ஒருவன், “பவானி, நீ” என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அவனுக்கு விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்களாரத்தி செய்யப்பட்ட திருவடிகளுடன் கூடியதாக உன் ஸாயுஜ்ய பதவியையே நீ அளித்து விடுகிறாய்”.

பத்தாம் ஸ்லோகமான ஸுதாதாராஸாரை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் துதித்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளின் அருள் வாக்கு,

செல்வம் செழிக்கக் கூற வேண்டிய ஸ்லோகம் ஸ்மரம் யோநிம் என்று ஆரம்பிக்கும் 33வது ஸ்லோகமாகும்.

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரியமித மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா: |

பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்ஹ்தாக்ஷ வலயா:

சிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி ஸதை: ||

இதன் பொருள்:

“ஓ, பராசக்தியே! புண்ணியவான்களான சில யோகிகள் தமது கையில் தாமரை மணிமாலையைத் தரித்து முறையே காம, யோநி, லக்ஷ்மீ பீஜாக்ஷரங்களான க்லீம், ஹ்ரீம், ஶ்ரீம் என்னு பீஜாக்ஷரங்களையும் சேர்த்து ‘ஸௌபாக்ய பஞ்சதசீ’ என்னும் இந்த மந்திரத்தை திரிகோணாகாரமாகிய சிதக்நியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னைத் திருப்தி செய்விக்கிறார்கள்.”

ஸௌபாக்ய பஞ்சதசீ என்னும் அபூர்வமான மந்திரம் இந்த ஸ்லோகத்தில் சங்கேதமாகக் குறிப்பிடப்படுகிறது.

சௌபாக்யம் அருளும் இந்த ஸ்லோகம் அபூர்வமான ஸ்லோகங்களுள் ஒன்று.

இதைக் கையில் பணத்தை வைத்துக் கொண்டு சொன்னால் அது போல பத்து மடங்காக நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு என்ன பலன் என்பதை லிப்கோ (தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி) வெளியீட்டில் காணலாம்.

ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடாக அண்ணா அவர்களின் சௌந்தர்ய லஹரீ விரிவுரை மிக நிச்சயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.

அம்பாளின் அருளுக்கு உடனே பாத்திரமாக விரும்புவோர் அணுக வேண்டிய நூல் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரீ.

இதன் பெருமையை யாராலும் முற்றிலுமாக உரைக்க முடியாது!

***

Leave a comment

Leave a comment