நாரத பக்தி சூத்ரம் (Post No.12,391)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,391

Date uploaded in London –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நாரத பக்தி சூத்ரம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 8

ச.நாகராஜன்

இறைவனை அடையும் வழிகளான ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகியவை பற்றி ஹிந்து சாஸ்திரங்கள் மிக நுட்பமாக விளக்குகின்றன.

பக்தி மார்க்கத்தைப் பற்றி விளக்குவதில் ஶ்ரீமத் பாகவதம் மற்றும் புராணங்கள் பல்வேறு விஷயங்களை கதைகள், வரலாறுகள், சம்பவங்கள் மூலமாக விளக்குகின்றன.

பக்தி என்ற பெரும் கடலை சூத்திர வடிவில் தருவது நாரத பக்தி சூத்ரம்.

பக்திமான்களில் மிகச் சிறந்தவரான நாரத முனிவர் இதை விளக்குவது மிகவும் பொருத்தமானது; அதை அடையும் நமது பாக்கியம் சிறப்பானது.

மிக அற்புதமான நாரத பக்தி சூத்ரத்தை ஒவ்வொருவரும் படித்துத் தேர்ந்து அதன் படி நடத்தல் இன்றியமையாதது – இந்தக் கலி யுகத்தில்!

இதில் 84 சூத்ரங்கள் உள்ளன. முதல் 24 சூத்ரங்கள் பக்தியின் இயற்கைத் தன்மை பற்றி விளக்குகின்றன.

அடுத்த ஒன்பது சூத்திரங்கள் (25 முதல் 33 முடிய) பக்தி மார்க்கமானது ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் மற்றும் யோக மார்க்கத்தை விட எப்படி உயர்ந்தது என்பதை விளக்குகின்றன.

அடுத்த பதினேழு சூத்திரங்கள் (34 முதல் 50 முடிய) பக்தி  மார்க்கத்தை எப்படி அப்யசிப்பது என்பதை அழகுற விரிவாக விளக்குகின்றன.

அடுத்த பதினாறு சூத்ரங்கள் (51 முதல் 66 முடிய) உண்மை பக்தனை அடையாளம் காண்பிக்கும் லக்ஷணங்களை விளக்குகின்றன.

கடைசி பதினெட்டு சூத்ரங்கள் (67 முதல் 84 முடிய) பக்தியில் திளைத்து பக்தி மார்க்கத்தை வாழ்ந்து காண்பிக்கும் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்த மகான்களைப் பற்றிக் கூறுகின்றன.

மொத்தத்தில் பக்தி பற்றிய ஒரு கலைக் களஞ்சிய நூலாக இது திகழ்கிறது.

அதாதோ பக்திம் வியாக்யாஸ்யாம் என்பது முதல் சூத்ரம்.

பக்தியைப் பற்றி இப்போது விவரிப்போம் என்பது இதன் பொருள்.

சாதஸ்மின் பரமப்ரேமரூபா என்கிறது அடுத்த சூத்ரம்.

இறைவனிடம் கொள்ளும் ‘பரம ப்ரேமை’ என்பது கணவன் – மனைவி அல்லது இதர குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் கொள்ளும் ப்ரேமையை விட மிக மிக உயர்ந்தது என்பது இதன் பொருள்.

அம்ருதஸ்வரூபாச என்பது அடுத்த சூத்ரம்.

இந்த பக்தியை அடைவதனால் என்ன பயன் ஏற்படுகிறது?

இந்த ரகசியத்தை மிக மிக அருமையாகச் சொல்கிறது அடுத்த சூத்ரம்.

அதை அடைந்தவன் சித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி

பக்தியில் சிறந்து விளங்குபவன் சித்தனாகிறான்.

அமரத்தன்மையை அடைகிறான்.

திருப்தியை அடைகிறான்.

இப்படி படிப்படியாக பக்தி சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முத்தாய்ப்பாக சூக்ஷ்ம விவரங்களை சூத்ரமாக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் இந்த நூல் தருகிறது.

பக்தியின் சிகரமாக அமைந்த ப்ருந்தாவன கோபியர்கள் 21ஆம் சூத்ரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.

பக்திக்கு நிரூபணம் பக்தியே தான் என்று நாரதர் அறுதியிட்டு உறுதி கூறுகிறார். (சூத்ரம் 30 மற்றும் 59)

ஸத்சங்க மகான்களின் சேர்க்கை கிடைப்பது துர்லபம் என்றும் அதை அடைய வேண்டியதன் அவசியத்தையும் 39ஆம் சூத்ரம் கூறுகிறது.

பக்தனின் லக்ஷணங்களும் செய்கைகளும் விரிவாக கூறப்படுகின்றன சூத்ரம் 67,68,69,70 முதலிய சூத்ரங்களில்.

பக்தி என்பது ஒன்றே தான் என்றாலும் அது 11 விதங்களில் பரிமளிக்கிறது. (சூத்ரம் 82)

இந்த நூலுக்கு பல விரிவுரைகள் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன.

1952இல் ஸ்வாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள விரிவுரையை ‘The Yoga Vedanta Forest University m Divine Life Society, Rishikesh வெளியிட்டுள்ளது.

Narada Bhakti Sutras –  A study என்ற நூலை ஸ்வாமி ஹர்ஷானந்தா கன்னடத்தில் எழுதியுள்ளார். இவர் ஶ்ரீ ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த சந்யாசி ஆவார். இந்த நூலில் 21 அத்தியாயங்கள் உள்ளன. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிக அருமையான நூல் இது.

பக்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆதாரமான அடிப்படை நூல் இது என்பதால் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் நாரத பக்தி சூத்ரம்!

***

Leave a comment

Leave a comment