
Post No. 12,431
Date uploaded in London – – 17 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப் பிள்ளையார் ! (Post No.12,431)
சிறுவயதிலிருந்தே தனக்கு தெய்வ பக்தி ஊட்டிய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து பிரிட்டிஷ் பிரதமர் சுனக் ரிஷி பேசினார். தனக்கு ஹனுமான் சாலீஸா ( துளசிதாசர் எழுதியது ), பகவத் கீதை ( மஹாபாரதத்தில் உள்ளது ) ஆகியவை சிறு வயது முதலே தெரியும் என்றார் . பிரிட்டிஷ் பிரதமர் வசிக்கும் லண்டன் வீட்டை 10, டவுனிங் ஸ்ட்ரீட் என்பார்கள். அங்கு தனது மேஜை மீது தங்க கணபதியை வைத்து இருப்பதாகவும் கஷ்டமான முடிவுகளை எடுக்க ராமரும், பிள்ளையாரும் தனக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார். தனது சொற்பொழிவினை ஜெய் சீதா ராம் என்று சொல்லி துவக்கினார் (Jai Siya Ram)

லண்டனிலிருந்து 60 மைல் தொலைவில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் நகரம் இருக்கிறது. அங்கு பிரபல இந்துமத உபன்யாசகர் ஸ்ரீ மொராரி பாபு ராமாயண சொற்பொழிவு நடத்தி வருகிறார். இந்திய சுதந்திர தினத்தன்று (15-8-2023) சுனக் ரிஷியை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர் . அப்போது அவர் மனம் திறந்து பேசினார்
இந்த நிகழ்வில் திரளான இந்துக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த கௌரவம் எனவும் ரிஷி சுனக் கூறினார்.. ஒரு பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என்றார். மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று கூறினார். அவர் ஆற்றிய உரையில், இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழி நடத்துகிறது என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றாலும், இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். எனது இந்த இந்துமத நம்பிக்கை தான் நாட்டிற்காக நான் உழைப்பதற்கான தைரியத்தையும், வலிமையையும், போராடும் குணத்தையும் அளிக்கிறது என ரிஷி சுனக் தெரிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹாம்ப்டனில் வசித்த போது தனது குழந்தைப் பருவத்தில் தனது உடன்பிறப்புகளுடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வந்ததை நினைவு கூர்ந்த அவர், தான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த மேடையின் பின்னணியில் தங்க நிறத்தில் ஹனுமனின் உருவப்படத்தை வைத்துள்ளீர்கள். இதே போன்று, 10 டவுனிங் தெருவில் உள்ள என் மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ராமாயணத்தையும், பகவத் கீதையையும், ஹனுமான் சாலிசாவையும் நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் எப்போதும் ஸ்ரீ ராம பிரான் உத்வேகம் ஊட்டும் ஒருவராக இருப்பார் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
முன்னதாக மேடையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனிதப் பிரசாதமாக சோம்நாத் கோயிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மொராரி பாபு அவருக்கு வழங்க, பிரதமர் ரிஷி சுனக் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி, அதனை பெற்றுக்கொண்டார் .
—SUBHAM—
Tags- சுனக் ரிஷி, மொராரி பாபு, கேம்பிரிட்ஜ் , தங்க பிள்ளையார், 10 டவுனிங் ஸ்ட்ரீட், பிரிட்டிஷ் பிரதமர் , ராமர் ,வழிகாட்டி