.webp)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,435
Date uploaded in London – 18 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மஹாபாரதம்
சகுனியின் மகனைக் கொல்லாத அர்ஜுனனின் கருணை!
ச.நாகராஜன்
வியாசரின் கட்டளையின் பேரில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அஸ்வமேத யாகத்தைச் செய்ய உறுதி கொண்டார் தர்மர்.
அதையொட்டி யாகத்திற்கான குதிரையைக் காக்க வேண்டிய பொறுப்பை அர்ஜுனனிடம் ஒப்புவித்தார் தர்மர்.
யாக குதிரை அதிவேகமாக எல்லா திசைகளையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
அதை எதிர்த்த அரசர்களை எதிர்கொண்டு அர்ஜுனன் அவர்களை வென்றான்.
யாக குதிரை காந்தாரியின் காந்தார தேசத்தை நோக்கிப் பறந்தது.
அதை எதிர் கொண்டான் சகுனியின் புத்திரன்.
அர்ஜுனன் அவனை நோக்கி, “வீணாக எதிர்க்க வேண்டாம். அரசர்களைக் கொல்ல வேண்டாம் என்பது தர்மரின் உத்தரவு. ஆகவே அடி பணிந்து போ” என்று கூறினான்.
ஆனால் சகுனியின் மகன் அதைக் கேட்கவில்லை.
தனது படையுடன் வந்த சகுனி புத்திரன் குதிரையைச் சூழ்ந்து கொண்டான்.
இதனால் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது காண்டீவத்தால் அந்த வீரர்களின் சிரங்களை அறுத்தான்.
உடனே சகுனி புத்திரன் அர்ஜுனனை நோக்கிப் பாணங்களை இறைத்தான்.
அர்ஜுனன் உடனே அர்த்த சந்திர பாணத்தை சகுனி புத்திரன் மேல் ஏவ அது அவனது தலைப்பாகையை அறுத்தது.
அனைவரும் அந்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததோடு பயந்து ஓட ஆரம்பித்தனர்.
சகுனி புத்திரனும் ஓடினான். அர்ஜுனன் அவர்கள் அனைவரது முடியையும் கவர்ந்தான்.
சிலர் கைகளை உயரத் தூக்கிவாறு ஓடினர். அவர்கள் கைகள் மட்டும் பாணத்தால் அறுக்கப்பட்டன. அது கூடத் தெரியாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
நிலைமை விபரீதமாவதைக் கண்ட காந்தார ராஜனின் தாய் மந்திரிகளையும் வயது முதிர்ந்தோரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.
சிறந்த பூஜா திரவியங்களை எடுத்துக் கொண்டு வந்தாள். அர்ஜுனனை வரவேற்றாள்.
தனது மகனைத் தடுத்தாள்.
அர்ஜுனனும் கோபம் தணிந்தான். அவளை வணங்கிப் பூஜித்தான்.
பிறகு சகுனி மகனைத் தேற்றி, அஸ்வமேத யாகத்திற்கு வருமாறு அழைத்தான்.
“எனக்கு நீ சகோதரனே. காந்தாரியை நினைத்தும் திருதராஷ்டிரனை நினைத்தும் உன்னை நான் கொல்லவில்லை. நீ உயிரோடு இருக்கிறாய். உனது படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விரோதத்தை விடு. சித்ரா பௌர்ணமி அன்று நடக்க இருக்கு அஸ்வமேத யாகத்திற்கு வா.” என்றான்.
பிறகு இஷ்டப்படி சஞ்சரிக்கும் யாக குதிரையைப் பின் தொடர்ந்து செல்லலானான்.
ஆச்வமேதிக பர்வத்தில் எண்பத்தைந்தாவது அத்தியாயமாக அமைகிறது இந்த அர்ஜுனனின் சகுனி மகனுடனான யுத்தம்.
பகைவருக்கும் அருள் புரியும் மனம் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இது விளக்குகிறது.
தங்களை சூதாட்டத்தினால் நயவஞ்சகமாக வென்று நாட்டை விட்டு வெளியேற்றி பல தீய யோசனைகளை துரியோதனனுக்குச் சொல்லித் தந்த சகுனியின் மகனைக் கூட அவன் மன்னித்தான். அப்படிப்பட்ட நல்ல உள்ளத்தைக் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இந்தப் போர் சுட்டிக் காட்டுகிறது.
யாகக் குதிரை அஸ்தினாபுரம் நோக்கித் திரும்ப தர்மர் யாக குதிரை வெற்றியுடன் வருவதை அறிந்து மனக் களிப்புற்றார். பீமனை நோக்கி யாகசாலையை அமைக்கச் சொன்னார்.
யாகம் ஆரம்பிப்பதற்கான வேலைகள் துவங்கின!
****