
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,440
Date uploaded in London – 19 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜப்பானிய நாடோடிக் கதை!
கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது? ஜப்பானிய நாடோடிக் கதை தரும் காரணம்!
ச.நாகராஜன்
ஜப்பானிய நாடோடிக் கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இவை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக் காட்டுபவை.
கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?
காரணத்தைச் சொல்கிறது ஒரு ஜப்பானிய குட்டி நாடோடிக் கதை.
ஹிரோயும் அவோயும் சகோதரர்கள்.
ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.
ஹிரோய் தவறான வழியில் நிறைய பொருள் சம்பாதித்து வந்தான்.
ஆனால் அவோய் நியாயமான வழியில் குறைவாகச் சம்பாதித்தான்.
ஒரு சிறிய குடிசையில் அவன் வசித்து வந்தான்.
அன்றாட வாழ்க்கைக்கே அவன் அல்லல்பட்டுக் கொண்டிருந்தான்.
புத்தாண்டு தினம் வந்தது.
அவோய் இறைவனுக்கு நிவேதனமாக ஏதாவது தர வேண்டும் என்று எண்ணினான். அதை அளித்த பின்னரே அவன் உணவு உண்ண வேண்டும்.
கையில் ஒன்றும் இல்லை.
நேராக ஹிரொய் மாளிகைக்குச் சென்று ஒரு கேக் தருமாறு கேட்டான். ஆனால் ஹிரொய் இல்லை என்று கை விரித்தான்.
மனம் சோர்ந்து அவோய் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
வயதானவர் ஒருவர் ஒரு ரொட்டித் துண்டுடன் வழியில் நின்று கொண்டிருந்தார். அதை அவோயிடம் கொடுத்த அவர், ‘இதைச் சாப்பிடு’ என்றார்.
”இறைவனுக்கு படைப்பதற்கு முன்னர் நான் எதையும் சாப்பிட மாட்டேன். பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர இதை நான் சாப்பிட மாட்டேன்” என்றான் அவோய்.
“சரி” என்ற பெரியவர் தொடர்ந்து சொன்னார் :”நேராகக் கோவிலுக்குப் போ. அங்கு முதலில் பார்ப்பவரிடம் இதை கொடுத்து அரைக்கும் கல்லைக் கேள். அவர் தருவார். அதை வாங்கிக் கொள்“ என்றார்.
அவோய் ரொட்டித் துண்டுடன் கோவிலுக்குச் சென்றான்.
அங்கு கோவில் வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.
“அந்த ரொட்டித் துண்டை எனக்குத் தா” என்று கேட்டது.
அவோய் அதை உடனே கொடுத்தான். ‘எனக்கு அரைக்கும் கல்லைத் தா” என்றான்.
கோவிலின் உள்ளே சென்ற தேவதை ஒரு அரைக்கும் கல்லைக் கொண்டு வந்து தந்தது. “இதோ பார், இதன் கைப்பிடியைச் சுற்றி அரைத்தவாறே நீ என்ன நினைத்தாலும் அது நடக்கும்” என்று கூறி விட்டு மறைந்தது.
அரைக்கும் கல்லை எடுத்துக் கொண்டு தன் வீடு வந்த அவோய், அதை அரைத்தவாறே, ‘இது ஒரு மாளிகையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று தனக்குத் தானே கூறினான்.
என்ன ஆச்சரியம். அவனது குடிசை மாளிகையாக மாறியது.
கல்லை அரைத்தவாறே தனக்கு வேண்டியதை எல்லாம் பெற்றுக் கொண்டான் அவோய்.
இந்த அதிசயச் செய்தி ஹிரோயை எட்டியது.
அவோயிடமிருந்து அரைக்கும் கல்லைத் திருட எண்ணினான் ஹிரோய்.
ஒரு நாள் அவோய் வீடு சென்று அவன் இல்லாத சமயம் அந்தக் கல்லைத் திருடினான் ஹிரோய்.
யாருக்கும் தெரியக் கூடாது என்று எண்ணிய அவன் தனது படகில் ஏறி வெகு தூரத்திலிருந்த ஒரு தீவை நோக்கி கடலில் செல்லத் தொடங்கினான்.
போகும்போது வழியில் அதை அரைத்தவாறே, “எனக்கு கேக் வேண்டும்” என்றான். கேக் வர ஆரம்பித்தது.
அதில் உப்பு கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஹிரோய்க்கு,
“உப்பு வேண்டுமே” என்றான்.
உப்பு கொட்ட ஆரம்பித்தது. நிற்கவே இல்லை.
அவன் படகு முழுவது உப்பு நிரம்பவே படகு நீரில் மூழ்கியது. ஹிரோயும் அதனுடன் மூழ்கினான்.
உப்பு கொட்டிக் கொண்டே இருக்கவே கடல் நீர் முழுவதும் உப்பு கரிக்க ஆரம்பித்தது.
இன்றும் அது நிற்கவில்லை. அதனால் தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறது!
ஜப்பானிய நாடோடிக் கதையில் உள்ள நீதியை நாம் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்!
888