கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3 (Post No.1,446)

Tallest Confucius Statue in China

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,446

Date uploaded in London – –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Confucius, Valluvar- Part 3

கன்பூசியஸ் Confucius சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3

உலக மஹா மேதை வள்ளுவர். உலகிலுள்ள பெரிய தத்துவ ஞானிகள் சொன்ன எல்லா விஷயங்களையும் நமக்கு பஞ்சாமிர்தமாக, ரோஜா குல்கந்தாகக் கொடுத்துவிட்டார். இதனால் தமிழ் மொழி உலகின் தலை சிறந்த மொழிகளில் ஓரிடத்தைப் பெற்றது.

யாமறிந்த புலவரிலே

வள்ளுவர் போல் , இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்று பாரதி சும்மாவா சொன்னான் ?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே– தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்றும் பாரதி சொன்ன வாக்கு வேத வாக்கு.

உலகம் போற்றும் சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பொன்மொழிகளுடன்  இதோ மேலும் சில ஒப்பீடுகள்:

மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்- என்று  கன்பூசியஸ்  சொன்னார்.

வள்ளுவர்., மேலும் ஒருபடி சென்று மன்னிப்பதோடு நின்றுவிடாதீர்கள்; அவர்களே வெட்கப்படும்படி நன்மையும் செய்துவிடுங்கள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்–குறள் 314

[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்

மணக்குடவர் உரை

இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் (தண்டித்தல்) நெறி கூறியது.

பாரதியும் பாடினான்

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்

பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே

பூமியில் கண்டோமே

பகை நடுவினில் அன்புருவான நம்

பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே

பரமன் வாழ்கின்றான் (பகை)

XXX

உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.– இது  கன்பூசியஸ் சொன்ன பொன்மொழி

வள்ளுவர்.இதையே அழகான உவமையுடன் சொல்கிறார் ,

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு–குறள் 595

[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்

ஒரு தாமரைப்பூவின் தண்டு அந்தக் குளத்தின் நீர்மட்டத்தைப் பொறுத்தது; அது போல மக்களின் ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அவர்கள் உயர்வு இருக்கும் .

ஆகையால் எதையும் சாதிக்க முடியும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தேவை

XXX

நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்! — கன்பூசியஸ்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்–குறள் 620

[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

விதியையும் கூட மதியால் வெல்லலாம். நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் , முயற்சி திருவினை ஆக்கும் என்பது வள்ளுவர் வாதம் .மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்- என்பது குறளின் பொருள் ஆகும்

ச்ரத்தாவான் லபதே ஞானம்; முயற்சியுள்ளவன் ஞானத்தை அடைகிறான் — என்பது கண்ணன் வாக்கு (பகவத் கீதை 4-39)

Xxxx

Confucius Temple in Beijing

மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.– கன்பூசியஸ்

வள்ளுவர் இதை இன்னும் அழகாக சொல்கிறார் ,

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு–குறள் 299

[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

சத்யம் / உண்மை/ வாய்மை என்பதே இந்திய அரசின், தமிழ் நாடு அரசின் சின்னம் ; சத்யமேவ ஜயதே = வாய்மையே  வெல்லும் என்பது முண்டகோபநிஷதத்தில் உள்ள வாக்கியம்

மணக்குடவர் உரை

சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

Xxxx

ஒரு உயர்ந்த மனிதர் பேசுவதற்கு முன்பே செயல்படுகிறார், பின்னர் அவரது செயலுக்கு ஏற்ப பேசுகிறார்.— கன்பூசியஸ் பொன் மொழி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்-குறள் 664

[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பெரியாருக்கும் சிறியாருக்கும் என்ன வித்தியாசம். சிறியோர் என்பர் வெறும் வாய்ச் சவடாலோடு நிற்பார்கள் . பெரியவர்களோ செயல்களை செய்த பின்னர்தான் அதை வெளியே சொல்லுவார்கள் . இதை வள்ளுவன் தெளிவாக விளம்புகிறான் :

பெரியவர்கள் செயலை முடித்த பின்னர்தான் சொல்லுவார்கள். இடையிலே சொன்னால் துன்பமே விளையும் ; இதோ வள்ளுவர் மொழிவது :

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்— குறள் 663

[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

—- subham—-

Tags- கன்பூசியஸ் ,வள்ளுவர், Part 3, Confucius

Leave a comment

Leave a comment