
Post No. 12,452
Date uploaded in London – 22 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
(முதல் பகுதி)
ச. நாகராஜன்
புகழ் பெற்ற பகவதி அம்மன்
கேரளத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்வது சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம்.
எர்ணாகுளத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது
ஆயிரக்கணக்கான மக்கள் அம்மன் அருளைப் பெற வேண்டி இங்கு வருவதால் இங்கு பல தங்குமிடங்கள் சிறப்பாக உள்ளன.
ஜோதியாக நின்ற கரை அம்மன் – ஜோதின்னக்கரை அம்மன் – என்பது நாளடைவில் மருவி சோட்டாணிக்கரை அம்மன் என்று இப்போது வழக்கில் கூறப்படுகிறது..
அடர்ந்த காட்டுப் பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்த இடத்தில் பராசக்தி ஜோதி வடிவமாக மும்மூர்த்திகளுக்கும் முக்கோடி தேவர்களுக்கும் காட்சி அளித்த இடம் இது.
ஒரே நாளில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை அருள்!
ராஜராஜேஸ்வரி, மஹாலட்சுமி, துர்க்கை, பகவதி அம்மன், ஆதி பராசக்தி, மஹா சரஸ்வதி என்று பல பெயர்களுடன் அம்பிகை இங்கு அருள் பாலிக்கிறாள்
அதுமட்டுமல்ல, ஒரே நாளில் மூன்று உருவங்களில் பகவதி அம்மன் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.
காலையில் வெண்ணிறப் புடவை உடுத்தி சரஸ்வதியாகவும் பகலில் இளநீலம் கலந்த சிவப்பு வண்ண ஆடையில் மகாலட்சுமியாகவும், இரவில் நீல வண்ண உடையில் துர்க்கையாகவும் அன்னை காட்சி தருகிறாள்.
பொதுவாக அம்மன் விக்ரகங்கள் அனைத்தும் இடது கை பாதத்தைச் சுட்டிக் காட்டி இருக்க வலது கை அருள் பாலிக்கும். ஆனால் இங்கு அனைத்துப் பாவங்களையும் போக்க வல்ல அம்மன் வலது கை பாதத்தைச் சுட்டிக் காட்ட இடது கையால் அருள் பாலிக்கிறாள். வலது புறம் மஹாவிஷ்ணு இருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மனை அம்மே நாராயணா என்று கூறி வழிபடுகின்றனர். நாராயணன் இதயத்தில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே அருள் புரிவாயாக என்பதே இதன் அர்த்தம்.
கோவிலில் சிவன், கணபதி, தர்மசாஸ்தா உள்ளிட்ட சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இந்தத் தலம் 1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தலமாகக் கருதப்படுகிறது.
மிகப் பண்டைய காலத்தில் விஸ்வகர்மா ஸ்தபதிகளால் அழகிய மர வேலைப்பாடுகளுடனும் தெய்வீக ஆற்றல் தொடர்ந்து இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட கோவில் இது. கோவிலின் கிழக்கே கொடிக்கம்பம் உள்ளது. இதன் எதிரில் சுமார் இருநூறு அடி தூரத்தில் திருக்குளமும் அமைந்துள்ளது. குளத்தின் மறுகரையில் கொலுவீற்றிருக்கும் உக்ர காளியின் சந்நிதியே கீழ்க்காவு அம்மனாகும்.
இங்குள்ள பலா மரம் ஒன்றில் தங்கள் நோய்களைத் தீர்க்க விரும்புவோர் ஆணி அடிப்பது வழக்கம்.
தல வரலாறு
இந்தத் திருத்தலத்தைப் பற்றிய தல வரலாறுகள் பல உண்டு.
முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதியில் கண்ணப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மகாகாளியின் பரம பக்தர்.
காளிக்குத் தினமும் ஒரு எருமையைப் பலியாகத் தருவது அவர் வழக்கம். ஒரு நாள் காட்டில் கன்று ஒன்றைக் கண்ட அவர் அதைப் பலி கொடுக்க எடுத்து வந்தார். ஆனால் அவரது மகள் பவளம் அதைத் தடுத்து பலி கொடுக்க வேண்டாம் என்று தந்தையை வேண்டினாள். மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட கண்ணப்பன் கன்றைப் பலியாகக் கொடுக்கவில்லை. ஆனால் சில நாட்களிலேயே அவரது அன்பு மகள் இறந்தாள். அழுது புலம்பிய கண்ணப்பன் மகளது சவத்தை எரியூட்ட நினைத்த போது அந்த உடல் திடீரென மறைந்து விட்டது. அப்போது ஒரு பெரியவர் கண்ணப்பனிடம் கன்றுகளைத் தாயிடமிருந்து வலியப் பிரித்த பாவத்தால் மகளைப் பிரியும் இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தன்னிடமிருந்த கன்றைப் பார்க்க கண்ணப்பன் விழைந்த போது அது கர்பக்ருஹத்தில் மறைந்து ஒளிர்ந்தது. பெரியவர் அந்தக் கன்றே விஷ்ணுவும் லக்ஷ்மியும் என்று விளக்கியதோடு தினமும் விஷ்ணுவையும் லட்சுமியையும் வழிபட்டு இதுவரை அவர் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு அன்புரை கூறினார்.
பின்னோரு காலத்தில் அந்த இடத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஒரு கல்லைத் தெரியாமல் வெட்ட அந்த கல்லிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. இதைக் கண்டு அவள் அலறி ஓட அங்கிருந்த மக்கள் அங்கு கூடினர். ஒரு அர்ச்சகர் தேவப்ரஸ்னம் செய்து பார்த்து அது தெய்வீகச் சிலை என்றார். அங்கிருந்த முதிய அந்தணர் ஒருவர் ஒரு தேங்காய் ஓட்டில் அரிசிப் பொரியை நிவேதனமாக அர்ப்பணித்தார். இந்த நிவேதன முறை இன்றும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அந்தணர் பரம்பரை வழி வந்தோரே இதை இன்றும் செய்வது மரபாகியுள்ளது.
– தொடரும்