சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! – Part 2 (Post No.12,457)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,457

Date uploaded in London –  23 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சோட்டாணிக்கரை பகவதி அம்மன்!

(இரண்டாம் பகுதி)

ச. நாகராஜன் 

சங்கரர் ஸ்தாபித்த வரலாறு

குறிப்பிடத்தகுந்த இன்னொரு வரலாறும் இந்தக் கோவிலைப் பற்றி உண்டு. அது கொல்லூர் மூகாம்பிகையை இந்தத் திருத்தலத்துடன் தொடர்பு படுத்துகிறது.

தென்னகத்தில் சரஸ்வதி தேவிக்கு ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணிய சங்கரர் சரஸ்வதி தேவியை வேண்ட சரஸ்வதி தேவியும் அருள் பாலித்தாள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆதி சங்கரர் வழிகாட்டி அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் ஆனால் திரும்பிப் பார்க்கக் கூடாதென்பதும் தான் நிபந்தனை. ஆதிசங்கரர் மகிழ்ச்சியுடன் முன்னே செல்ல அன்னையின் நூபுர ஓசை பின்னால் கேட்டு வந்தது. ஓரிடத்தில் இந்த ஓசை நிற்கவே ஆர்வம் மீதூற சங்கரர் திரும்பிப் பார்த்தார். நிபந்தனையை மீறியதால் அன்னை அந்த இடத்திலேயே நின்று விட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். பின்னர் சங்கரரின் வேண்டுதலுக்கு இணங்க அம்மன் சோட்டாணிக்கரையில் எழுந்தருளி அருள்பாலிக்க ஆரம்பித்தாள்.

மகம் தொழல்

இந்தத் திருத்தலத்தில் ஏராளமான விழாக்கள் நடைபெறுகின்றன. முக்கியமான ஒரு விழா மகம் தொழல் ஆகும்.

மாசி மாத மகத்தன்று வில்வமங்களர் அன்னையை இங்கு தரிசித்தார். அதையொட்டி இந்த மகம் தொழல் சிறப்பாக ஆண்டு தோறும் இங்கு நடைபெறுகிறது. காலையில் இங்குள்ள திருக்குளத்தில் அம்மன் நீராடிய பின்னர் சாஸ்தா பின் தொடர அம்மன் ஏழு யானைகள் அணிவகுத்து வர பூரபரம்பு என்னும் இடத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். உச்சி காலத்தில்  மகம் தரிசனம் நடைபெறும். பூரண ஆடை ஆபரண அலங்காரங்களுடன் கீழக்காவு பகவதி அம்மன் தரிசனம் அளிக்கிறார். இந்த தரிசனத்தைக் கண்டவர்கள் சகல பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் வேண்டுதல் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.

குருதி பூஜை

இந்த ஆலயத்தில் நடைபெறும் இன்னொரு புனிதமான நிகழ்ச்சி குருதி பூஜை ஆகும். இங்குள்ள கீழ்க்காவில் நடைபெறும் இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். தினமும் இரவு 8.45 மணிக்கு இது ஆரம்பிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் இது மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. குருதி பூஜையில் கலந்து கொண்டால் தீய ஆவிகளால் ஏற்படும் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட அனைத்துத் தொல்லைகளும் கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கை. அத்துடன் மனோவியாதி, மனநிலை சீரின்மை உள்ளிட்ட மன நோய்களும் போய்விடும் என்பது ஐதீகம். குருதி என்றால் இரத்தம் என்பது பொருள். நீரில் மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து இரத்த நிறத்தில் உள்ள குருதியை அர்ப்பணிப்பது பக்தர்களின் வழக்கம். மூன்று முதல் 12 பாத்திரங்கள் கொண்டு இது நடைபெறுகிறது. இந்த பூஜையை முடித்து வீடு திரும்பும் பக்தர்கள் இந்த குருதியைத் தங்கள் இல்லங்களில் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அப்போது எந்த விதமான தீய ஆவிகளும் இல்லத்தின் உள்ளே நுழையாது. இந்த பூஜையைச் செய்ய கோவில் நிர்வாகத்திடம் முன்பாகவே முன் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணங்கள் தனி. குருதி பூஜை செய்ய வரும் ஆண்களும் பெண்களும் சம்பிரதாய உடைகளை மட்டுமெ அணிவது மரபாகும்.

தீராத வியாதி தீர்க்கும் திருத்தலம்

தொடர்ந்து 41 நாட்கள் பகவதி அம்மனை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆகவே மனநிலை பாதிக்கப்பட்டோர், தீய ஆவிகளின் தீய சக்திகளுக்கு உள்ளானோர், திருமணத் தடை நீங்க விரும்புவோர், தங்கள் இஷ்டங்களை நிறைவேற்ற விரும்புவோர் என பலதரப்பட்ட பக்தர்கள் வருகை புரியும் பிரபலமான தலமாக இது திகழ்கிறது. பெண்கள் அதிக அளவில் வந்து வழிபடும் தலமாகவும் இது அமைகிறது.

எள் நைவேத்யம், வெல்ல நைவேத்யம், கூட்டு, பிழிஞ்சு, நெய் பாயசம், அப்பம் உள்ளிட்டவை இங்கு அம்மனுக்கு நைவேத்ய பொருள்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

அனைத்து ஆதார சக்திகளையும் கொண்டுள்ள பகவதி அம்மனின் கோவில் பாரதத்தின் தலையாய கோவில்களில் ஒன்று.

பகவதி அம்மனைத் தொழுவோம். நோயற்ற வளமான வாழ்வைப் பெறுவோம்!

***

Leave a comment

Leave a comment