
Picture of Parasara Bhattar
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,465
Date uploaded in London – 25 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas
எல்லாம் அறிந்த சர்வக்ஞரை மடக்கிய சிறுவன் யார்?
ச.நாகராஜன்
சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.
தென்னிந்தியாவில் நன்கு படித்த ஒரு பிராமணர் தன் படிப்பினால் மிகவும் அகந்தை கொண்டார்.
தன்னை எல்லாவற்றையும் பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் அறியக் கூடிய சர்வக்ஞர் என்று கூறிக் கொண்டார்.
ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கு இருந்த பண்டிதர்களை வாதுக்கு இழுத்து அவர்களை மடக்கி அவர்களது படிப்பை ஏளனம் செய்வதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் படித்த புத்தகங்களை அனைத்தும் பல வண்டிகளில் ஏற்றப்பட்டு அவருக்கு முன்னே போய்க் கொண்டிருக்கும்.
அவர் பின்னால் வருவார்.
அவரது புத்தகக் குவியலைப் பார்த்த எவரும் அவருடன் வாதுக்கு வரத் தயங்கி தமது தோல்வியை முன்னதாகவே தெரிவிப்பது வழக்கமானது.
வழக்கம் போல ஒரு நாள் ஒரு கிராமத்தில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அவரது புத்தக மூட்டைகள் முன்னால் சென்றன. அவரது சீடர்கள் ஆரவாரத்துடன் யாராவது சர்வக்ஞருடன் இங்கு வாதிடத் தயாரா?’ என்று கூவி அழைத்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர்.
சர்வக்ஞர் அகம்பாவத்துடன் பீடு நடை போட்டுப் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் முன்னே வந்த ஒரு சிறுவன் கீழே கிடந்த ஒரு பிடி மண்ணை எடுத்தான். அவர் முன்னே நீட்டினான்.
“சர்வக்ஞரே! எல்லாம் அறிந்தவரே! எதையும் பார்க்கக் கூடியவரே! என் கையில் எவ்வளவு மணல் இருக்கிறது? சரியான பதிலைக் கூறுங்கள்” என்றான்.
சர்வக்ஞர் திகைத்தார். “பையா! கையில் மூடி இருக்கும் மணல் துகள்களைப் பார்க்கவே முடியாதே! அதன் எண்ணிக்கையை எப்படிச் சொல்வது?” என்றார்.
உடனே அந்தச் சிறுவன், “என் கையில் இருப்பது கைப்பிடி மண்” என்று பதில் அளித்தான்.
பிறகு அவன் தொடர்ந்து கூறினான்: ”சின்னக் கையில் இருக்கும் மணல் துகள்களின் எண்ணிக்கையையே சரியாகச் சொல்ல முடியாது என்கிறீர்கள். ஆனால் எதையும் அறிந்தவன் – சர்வக்ஞர்- என்ற பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டு உலா வருகிறீர்கள். இது நியாயமா? எல்லையற்ற பிரம்மாண்டமான படைப்பில் ஒரு சிறு புழு பூச்சி போல இருக்கும் மனிதன் தன் எதிரில் கையில் இருப்பதையே சரியாக அறிய முடியவில்லை. அனைத்தையும் படைத்த இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன் அல்லவா? அவனே அல்லவா உண்மையில் சர்வக்ஞன்!
இந்தப் பட்டப் பெயர் உமக்கு எப்படித் தகும்?” என்று கேட்டான்.
சர்வக்ஞர் தலை குனிந்தார். தனது ‘சர்வக்ஞர்’ பட்டத்தை அன்றே துறந்தார்.
அவரை அப்படி மடக்கி அவருக்கு உண்மையை உணர்த்தியவர் பின்னால் பெரும் மகானாக ஒளிர்ந்தார்.
அவர் தான் பராசரர்!
***

அவர் பல நூல்கள் இயற்றி இருந்தாலும் நமக்கு இப்போது கிடைத்திருப்பவை ஐந்து நூல்களே! அவை:
விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்.
ரங்கநாத அஷ்டகம்.
ஸ்ரீரங்கராஜஸ்தவம்.
அஷ்டச்லோகீ.
ஸ்ரீகுணரத்னகோசம்.
பராசர பட்டர் வாழ்ந்த காலத்தைப் பற்றி இருவிதக் கருத்துகள் உள்ளன. சிலர் அவர் 1078 முதல் 1175 வரை வாழ்ந்தார் என்று கூற இன்னும் சிலரோ அவரது காலம் 1123-1151 என்று தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
வைணவ சித்தாந்தத்தில் மாபெரும் மகானாக அவர் ஒளிர்ந்தார்.
***