
Post No. 12,475
Date uploaded in London – 28 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 54
மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்!
ச.நாகராஜன்
ஆறகழூர் என்பது சேலம் மாவட்டமும் ஆற்காடு மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊர். இது ஆறு அகழிகளால் சூழப் பெற்றதால் ஆறகழூர் என்ற பெயரைப் பெற்றது.
இது மகத மண்டலத்தைச் சேர்ந்தது.
அங்கு மாவலி வாண வம்சத்தைச் சேர்ந்த வாண அரசன் ஒருவன் மிக்க வலிமையோடு இருந்து அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நடுநாட்டு அதிபனாக அவனை மகதைப் பெருமாள் என்னும் மற்றொரு பெயரால் அனைவரும் அழைத்தனர். இவன் சேர சோழ பாண்டிய மன்னர்களை மதிப்பதே இல்லை. அவர்களுடன் வம்பு செய்வது இவன் பழக்கம்.
ஆனால் அதே சமயம் பல புலவர்களாலும் புகழ்ந்து பாடப்படுபவன் இவன்.
இவனது தொல்லை பொறுக்க மாட்டாத பாண்டிய மன்னன் யாரேனும் ஒருவர் இவனைப் பிடித்துத் தன் முன் நிறுத்தினால் வேண்டியதைத் தருவேன் என்று பறையடித்து அறிவித்தான்.
கீழ்கரைப் பூந்துறை மோரூரில் வாழ்ந்து வந்த கண்ண குலத்தானான சூரியன் என்னும் ஒரு வீர வாலிபன் இந்த அறிவிப்பைக் கேட்டான்.
இதனைத் தன்னால் செய்ய முடியும் என்று கூறிய அவன் அதற்கான சாதனங்களைப் பெற்று ஆறகழூர் சென்றான். அங்கு மாறுவேடம் தரித்து உளவு பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் சமயம் வாய்த்த போது உடன் வந்த தனது துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளாய் மாறி மகதைப் பெருமாள் அமர்ந்திருந்த பல்லக்கை தூக்கியவாறே எல்லை கடந்து செல்ல ஆரம்பித்தான்.
அங்கு தயாராகக் காத்திருந்த பாண்டிய வீரர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
மலைமேல் சுற்றுக் கோட்டைகளுடன் அமைந்துள்ள சங்க கிரி துர்க்கத்தில் பாண்டிய ராஜன் முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்தினான் சூரியன்.
இவனைப் புகழ்ந்து கொங்கு மண்டல சதகம் பாடல் 54 பெருமையாகக் கூறுகிறது இப்படி:
வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
தமிழ்நாட்டை ஆண்டை மூவேந்தர்களையும் திகிலுறும்படி செய்து வந்த வல்ல ஆறைகழூர் வாணனைப் பிடித்து, அவனைக் கொல்லாது பாண்டியன் முன்னர் கொண்டு வந்து நிறுத்திய வல்லாண்மை மிக்க சூரியனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.
ஆறைவாணனைப் பற்றிய பல பாடல்கள் உண்டு.
இவை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் வடக்குப் பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு பாடல்:
“கொங்குங் கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்
தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்
பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்
செங்குன்ற பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே”
இவனைப் பற்றிய சாஸனம் ஆறகழூர் காமநாதேஸ்வரர் ஆலயத்திலும் இருக்கிறது. இவன் கி.பி, 1178இல் வாழ்ந்துள்ளான். அப்போது ஆண்டு வந்த சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான்.
சூரியனைப் பற்றியும் பல பாடல்கள் உள்ளன.
மிண்டாறை வாணனை முன் வெட்டாமற் பாண்டியனேர்
கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ
தெண்டிறைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே
மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ் சூரிய காங்கேயனே (பழம் பாடல்)
இன்னொரு பழம் பாடல் இது:
பூதந் துனைகொண்ட போர்வாணன் மாறனிரு
பாதந் துனைகாணப் பண்ணினோர்- ஓதுமிசை
ராமா யணங்கேட்டோர் நவலர் வைப் புப்பொருளாங்
கோமான்வாழ் மோரூர் குடி
போரூர் காங்கேயர் குறித்த பிரபந்தங்களுள் இந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
இந்த சூரியனுக்குக் காங்கேயன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு எழுகரை நாடு அடங்கிய வடகொங்கு மன்னவன் என்றழைக்கப்பட்டான். இதற்கு அடையாளமாக வடகொங்குப்பட்டன் என்று இக்குடி பெயர் கொண்டு வாழ்கின்ற பலரும் இன்று உள்ளனர்.
விரகற நோக்கியு முருகியும் என்ற திருப்புகழில்,
“இமயவர் நாட்டினில் நிறை முடியேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே”
என அருணகிரிநாதர் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத் தக்கது..
***