
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,492
Date uploaded in London – 17 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
(பகுதி 2)
ச.நாகராஜன்
மகாத்மாவிற்கு ஆசி!
1921க்கு முன்னமேயே அவர் நாட்டுத் தலைவர்கள் பலரையும் நன்கு இனம் கண்டு வாழ்த்திப் போற்றினார்.
இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட மஹாத்மா காந்தி அடிகள் சென்னைக்கு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் வந்தார். அவரைச் சந்தித்த மஹாகவி அவரை அன்று மாலை நடக்கும் தனது கூட்டத்திற்கு தலைமை வகிக்க அழைத்தார். ஆனால் மஹாத்மா அன்று மாலை தனக்கு உள்ள வேறு நிகழ்ச்சியைக் கருதி, ‘நாளை உங்கள் கூட்டத்தை வைத்துக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.
தன்னால் கூட்டத்தை ஒத்திப் போட முடியாது என்று பதில் கூறிய மகாகவி அவரது தொண்டுக்குத் தனது ஆசியை நல்கினார்.
வாழ்க நீ எம்மான்! என்ற தனது பாடலில் “தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!” என்று பாடி மஹாத்மாவை உரிய படி முதலிலேயே இனம் கண்டு போற்றி விட்டார் அவர்!
அரவிந்தரின் நட்பு!
புதுவை வாழ்க்கை பகுதி பாரதியாரின் கவிதா சக்தி உச்ச நிலை அடைந்த காலம். 1908ஆம் ஆண்டு புதுவை வந்த பாரதியார் 1918 நவம்பர் 20ஆம் தேதி வரை வரை புதுவை வாசத்தை மேற்கொண்டார்.
அரவிந்த மகரிஷி 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி புதுவைக்கு வந்தார். அவரை வரவேற்றார் பாரதியார். அரவிந்தருடனான பாரதியாரின் நட்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அரவிந்தருக்கு தமிழைக் கற்றுத் தந்து திருக்குறளை (கடவுள் வாழ்த்து) மொழிபெயர்க்க வழி வகை செய்தார் அவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூழ்கி தமிழின் அருமையை அரவிந்தர் வெகுவாகப் போற்றினார்.
புதுவை வாசத்தில் வங்க மொழியைக் கற்றுக் கொண்டார் பாரதியார். வேத உபநிடத ஆராய்ச்சியில் ஈடுபட்டு அரவிந்தரிடமிருந்து அவர் கற்றதும் பெற்றதும் அதிகம்! கடைசியாக புதுவையிலிருந்து கிளம்பும் போது அரவிந்தரிடம் விடை பெற அவரது மாளிகைக்குச் சென்ற மகாகவி அவரைத் தனி அறையில் சந்தித்து விடை பெற்றார். பாரதியார் அங்கிருந்து கிளம்பும் போது எப்போதுமே உணர்ச்சி வசப்படாத மஹா யோகி அரவிந்தரின் கண்களில் நீர் அரும்பியது.

பாரதியாரின் பாடும் வல்லமை!
பாரதியார் பாடல்களை அவரே பாடக் கேட்டவர்கள் பிரமித்து பெரும் உந்து சக்தியைப் பெற்றுள்ளனர். அவரது புதுவை வாழ்க்கையில் அவரை நன்கு அறிந்த அமுதன் புதுவை வானொலி நிலையத்தின் வாயிலாக உரையாற்றும் போது, “பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம் தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பந்தமில்லையா?” என்று கூறுகிறார்.
பாரதியார் ஓர் இசை வல்லுநர். தனது பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
தெய்வீக சக்தி!
காளியின் அருள் பெற்ற வரகவியாகவே விளங்கினார் பாரதியார். அவருடைய வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் இதை விளக்கும் வகையில் அமைந்தன.
மனநிலை சரியில்லாத ஒரு இளைஞனைத் தன்னுடன் தன் வீட்டில் தங்க வைத்த கவிஞர் அவனுடன் பேசுவார்; அவனை அடிக்கடி தொடுவார். இதன் விளைவாக அவன் மனநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவனது தந்தையார் மனம் மிக மகிழ்ந்தார்.
பாரதியாரின் நண்பராகிய பொன்னு முருகேசம் பிள்ளை தன் மகன் திரும்பி வரும் கப்பல் உடைந்தது என்று செய்தி கேட்டவுடன் மனம் உடைந்தார். பாரதியார் அவரைத் தேற்றினார். மகன் வருவான் என்று கூறினார். அப்படியே நடந்தது. ராஜாபாதர் என்ற அந்த இளைஞர் உடைந்த கப்பலில் இருந்த ஒரு கட்டையைப் பிடித்தவாறே மிதந்து வந்து காப்பாற்றப்பட்டு உயிருடன் வந்தார்.
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் கவிஞர். 2023, ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் தென் துருவத்தில் நமது சந்த்ராயன் 3 விண்கலம் இறங்கி உலக சாதனை படைத்தது!
இப்படி விரிவாக பாரதியாரின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பாரதி நினைவு தினத்தில் கண்ணதாசனின் பொருத்தமான பாட்டு நினைவு கூரத்தக்கது.
சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்து விட்டான்
இந்திர தேவரும் காலில் விழும்படி
என்னென்ன பாடி விட்டான் – அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்!
வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு
வாரிக்கொணர் என்றான் – அந்த
வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட
வாரும் தமிழரென்றான்
சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு
சேரத்துத் தந்தமென்றான் – இந்த
தேசபெருமைக்கு ஆரம்பம் செய்தவன்
பாரதித் தேவன் என்பான்!
– கண்ணதாசன்
தமிழ் வாழ்க! பாரதி நாமம் வாழ்க!
***
முற்றும்