மா ஆனந்தமயி! – 1 (Post No.12,549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,549

Date uploaded in London –  3 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 1

ச.நாகராஜன் 

மிகவும் புகழ்பெற்ற மா ஆனந்தமயி சரிதம் அற்புதமான ஒன்று.

இன்று பங்களாதேஷில் இருக்கும் வங்காள மாநிலத்தில் திரிபுரா மாவட்டத்தில் கேரா என்ற குக்கிராமத்தில் அந்தண குலத்தில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி அவதரித்தார் ஆனந்தமயி மா!

குழந்தைக்கு நிர்மலா சுந்தரி தேவி என்று பெயர் சூட்டப்பட்டது.

நிர்மல சுந்தரியின் தந்தை பிபின் பிஹாரி பட்டாசாரியா ஒரு வைணவ பக்தர். இசையில் வல்லவர். குழந்தைக்குப் பல தெய்வீகப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார்.

நிர்மலாவின் தாயாரான மோக்ஷதா சுந்தரி தேவி ஒரு சிறந்த பக்தை; பின்னால் சந்யாசம் மேற்கொண்டு ஸ்வாமி முக்தானந்த கிரி என்ற சந்யாச ஆஸ்ரம பெயரை மேற்கொண்டு தனது மகளுடன் பயணம் செய்தார்.

நிர்மலா சுந்தரி பிறந்தவுடன் அவரை காலை நேரத்தில் ஒரு துளஸி செடியின் கீழ் வைத்தார் தாயார். இந்தப் பழக்கம் 18 மாதங்கள் தொடர்ந்து நீடித்தது.

1909ம் ஆண்டு நிர்மலாவின் 13ஆம் வயதில் அந்தக் கால வழக்கப்படி அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ரமணி மோஹன் சக்ரவர்த்தி என்பவரை மணந்தார் அவர். போலீஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தார் ரமணி மோஹன்.

17ஆம் வயதில் ரமணி மோஹனுடன் சேர்ந்து தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்தார் நிர்மலா. இந்தச் சமயத்தில் தான் அவருக்கு அண்டை வீட்டுக்காரரான ஹரகுமார் அவரை ‘மா’ என்று அழைக்க ஆரம்பித்தார்.

அதுவே பின்னால் நிலைத்து விட்டது.

“அம்மா, நான் உன்னை மா என்று அழைக்கிறேன். ஆனால் உலகமே உன்னை மா என்று அழைக்கப் போகிறது பார்” என்றார். அது பலித்தே விட்டது.

ரமணிமோஹனை அனைவரும் போலாநாத் என்றே அழைத்தனர்.

நிர்மலாதேவிக்கு தாம்பத்யத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாததைக் கண்டார் போலாநாத். அவரது வீட்டாருக்கோ இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. போலாநாத்தை இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தூண்டினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

1918 முதல் 1924 முடிய பஜித்பூர் என்ற நகரில் தம்பதி வாழ்ந்து வந்தனர்.

அப்போது நிர்மல சுந்தரிக்கு ஏராளமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.

1922 ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி நாள். நிர்மல சுந்தரி நள்ளிரவில் தனக்குத் தானே தீக்ஷை அளித்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 26 தான். அடுத்த ஐந்து மாதங்கள் ஓம் மந்திரத்தை உச்சரித்தவாறே அவர் சாதனை தீவிரமடைந்தது.

செய்தி அனைவருக்கும் பரவ அவரது மாமா வந்தார். போலாநாத்தைப் பார்த்து, “இங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்த நிர்மலா தீவிரமாக, “இப்படிக் கேட்பதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

“நீ யார், சொல்” என்றார் மாமா.

நிர்மலாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்தன:

“பூர்ண ப்ரஹ்ம நாராயணீ”.

ஒரு நாள் போலோநாத் அலுவலகம் சென்றிருந்த போது அவரை உடனே வரச் சொன்னார் நிர்மலா.

அவர் வந்தவுடன் அவரைக் குளிக்கச் சொல்லி தன் எதிரில் அமரச் சொன்னார்.

பின்னர் மந்திரங்களைச் சொல்லி அவருக்கு ஆன்மீக உபதேசத்தைச் செய்தார்.

இப்படியாக அவரது கணவரே அவரது முதல் சிஷ்யராக ஆனார்.

1922 நவம்பரிலிருந்து மூன்று வருடங்கள் நிர்மலா மௌனவிரதம் அனுஷ்டித்தார். பல நாட்கள் குடிதண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்தார்.

1926லிருந்து அவரால் மற்றவர் போல உணவை உண்ண முடியவில்லை.

வாயில் உணவை வைத்தாலும் அது விழுந்தது. ஆகவே தினமும் பகலில் ஒரு முறையும் இரவில் ஒரு முறையும் அவரது இரண்டு விரல்கள் ஏற்கும் வகையில் அவருக்கு உணவு அளிக்கப்பட்டது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறிது நீரும் அவர் அருந்த ஆரம்பித்தார்.

1924ஆம் ஆண்டு போலாநாத்திற்கு டாக்காவில் மானேஜராக ஒரு வேலை கிடைத்தது.  அங்கு ஒரு பழைய காளி கோவில் இருந்தது.

அங்கு இருந்த ஒரு அரச மரத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.

அந்த சித்தேஸ்வரி கோவில் சக்தி சாதனைக்கான இடம்.  இந்த இடம் ஆதி சங்கரருடன் தொடர்பு கொண்ட இடம். போலாநாத்தும் சென்ற ஜென்மத்தில் இங்கு தவம் புரிந்திருந்தாராம்.

நிர்மலா தேவி தனது முதலாவது ஆசிரமத்தை இங்கு ஆரம்பித்தார்.                           ***                   தொடரும்

Tagged with Anandamayee Ma

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma

1 Jun 2017 — “Shri Anandamayee Ma is one of the most outstanding (1896-1982) religious figures of modern times and was the last great representative of the …

Anandamayee ma- part2 | Tamil and …

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › anandamayee-ma-pa…

2 Jun 2017 — BENGALI MYSTIC SHRI ANANDAMAYEE MA- PART 2 (Post No. 3965) · Written by London Swaminathan · Date: 2 June 2017 · Time uploaded in London- 14-59.

Leave a comment

Leave a comment