மா ஆனந்தமயி! – 2 (Post No.12,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,551

Date uploaded in London –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்கள் வாழ்வில் …

மா ஆனந்தமயி! – 2

ச.நாகராஜன்

இந்த ஆசிரமம் அமைந்த விதமே ஒரு அற்புதமான விஷயத்தைச் சுட்டிக் காட்டியது.

ஒரு நாள் ஒன்றரை கிலோ அளவில் பயறு தானியத்தை சுத்தம் செய்த நிர்மலா தேவி என்னும் ஆனந்தமயி மா போலாநாத்திடம், “வாருங்கள் சித்தேஸ்வரியிடம் செல்வோம்” என்றார். அங்கு சென்று அதைச் சமைத்து சித்தேஸ்வரிக்கு நிவேதனம் செய்தார் மா.

பிறகு அவர் போலாநாத்திடம், “நான் இங்கேயே இருக்கிறேன். காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் சிறிய அறையிலேயே தங்குவேன்” என்றார்.

அப்படியே ஆனது.

சிறுகச் சிறுக ஒரு பெரிய ஆசிரமம் உருவாக ஆரம்பித்தது.

அந்த ஆசிரமம் உருவான இடத்தில் குங்கும நிறத்தில் வெதுவெதுப்பான நீர் பீறிட்டு எழுந்தது. அனைவரும் அதிசயித்தனர்.

பல அற்புதங்கள் அங்கு நடக்க ஆரம்பித்தன.

31ஆம் வயதில் ஆனந்தமயி மா டாக்காவை விட்டுக் கிளம்பி பெரும் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.

1928ஆம் ஆண்டு வாரணாசியில் முதல் கூட்டம் கூடியது. அங்கு பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் அளித்தார்.

நூற்றுக் கணக்கில் வர ஆரம்பித்த பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் ஆயிரக் கணக்கில் பெருகியது.

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மனைவியான கமலா தேவி மாவின் பக்தையாக ஆனார்.

இதனால் ஜவஹர்லால் நேருவும் மாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பின்னர் மஹாத்மா காந்திஜியும் ஆனந்தமயி மாவினால் ஈர்க்கப்பட்டார்.

இதனுடைய தாக்கமாக பின்னால் பாரதத்தின் பிரதமராகத் திகழ்ந்த இந்திரா காந்தி அம்மையார் மாவின் தீவிர பக்தையாக ஆனார்.

மா தனது பெரிய ஆசிரமத்தை 1936ஆம் ஆண்டு டாக்காவில் கிஷன்பூரில் அமைத்தார்.

அத்துடன் இன்னும் மூன்று ஆசிரமங்களையும் டேராடூனில் அமைத்தார்.

பின்னர் இன்னும் பல ஆசிரமங்களை அல்மோரா மற்றும் ஸோலன் ஆகிய இடங்களில் அமைத்தார்.

போலாநாத்தின் உற்சாகத்தினாலும் ஊக்கத்தினாலும் இன்னொரு ஆசிரமம் உத்தரகாசியில் அமைக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு தனது 86ஆம் வயதில் ஹரித்வாருக்கு அருகில் இருந்த கங்கல் என்ற இடத்திலிருந்து கிளம்பி கல்கத்தா வரை வந்து பின்னர் அவர் கங்கல் திரும்பினார்.

அதே ஆண்டு ஜூலை மாதம் சிருங்கேரி ஜகத்குரு அங்கு வருகை புரிந்தார்.

அவருக்கு உடல்நலம் சற்று குன்றியிருந்தது போல அனைவரும் உணர்ந்தனர்.

ஆனால் அவரோ, “ இந்த உடலுக்கு ஒரு நோயும் இல்லை.” என்றார்.

சில நாட்கள் கழித்து பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது புதல்வர் ராஜீவ் காந்தியுடனும் மருமகள் சோனியா காந்தியுடனும் பேரக் குழந்தைகளுடனும் அவரை தரிசிக்க வந்தார்.

மா சற்று நேரம் உட்கார்ந்தார். இதுவே அவர் பக்தர்களுக்கு அளிக்கும் கடைசி சந்திப்பாக அமைந்தது.

பௌர்ணமி வந்தது. அதுவே அவர் பக்தர்களுக்கு அளித்த கடைசி தரிசனமாக அமைந்தது.

அவர் கூறினார்: “இதே நாளில் தான் (1922 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) இந்த உடல் தீக்ஷை அளித்துக் கொண்டது” என்றார் அவர்.

ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அவரைக் கவனித்துக் கொண்டிருந்த பணிபுரியும் பெண்கள் அவர் நாராயண ஹரி என்று முணுமுணுத்துக் கொண்டே இருப்பதைக் கவனித்தனர். இதுவே அவரது கடைசி உச்சரிப்பாக அமைந்தது.

அன்று மதியம் தனது கண்களைத் திறந்து பார்த்த மா ஒரு நிமிடம் அனைத்தையும் உற்றுப் பார்த்தார்.

1982 ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி.

இரவு 7.45 மணி அளவில் தனது கண்களைத் திறந்த அவர் மேலே பார்த்தார். சில நிமிடங்களில் அவரது சுவாசம் அடங்கியது.

அவரது பூதவுடல் ஆசிரமத்தின் வாரந்தாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

செய்தி பரவியது. மக்கள் வெள்ளம் ரயில், கார், விமானம் மூலமாக வந்து கூடியது.

கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டு கங்கல் ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவர் தனது உடலை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பையும் தரவில்லை. அவர் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொள்ளவில்லை என்றாலும் அனைவரின் விருப்பத்திற்கிணங்க அப்படிப்பட்ட மத சடங்குகள் செய்யப்பட்டன.  சமாதியில் அவரது உடல் வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி இந்திரா காந்தி முன்னிலை வகித்தார்.

*

கேள்விகளுக்கான அவரது பதில்கள் சுவாரஸ்யமானவை.

ஒருவர் கேட்டார் : தினமும் வரும் இந்த புதிய பக்தர்களின் வரவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : யாருமே புதிதல்ல. அவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள் தான். நீயும் நானும் இரண்டு பேர்கள் தான் என்றாலும் நீயும் நானும் ஒருவரே. இரட்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. பற்றும் வெறுப்பும் இந்த இரட்டை (த்வைதம்) என்ற எண்ணத்தினால் உருவாவதேயாகும்.

அவரது போதனை : உனது எண்ணத்தை மிக உயரிய மட்டத்தில் வைத்துக் கொள்!

ஜெய் மாதா ஆனந்தமயி மா!

***

Leave a comment

Leave a comment