
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,554
Date uploaded in London – 5 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் ராமப்ரபன்னன் என்ற ஏழை அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். வெறும் காய் கனிகளே அவனுக்கு உணவாக இருந்தது. அவ்வளவு ஏழ்மை!
தினமும் இறை தியானத்திலேயே இருந்த அவன், ஒரு நாள் பகவானை நோக்கி, “இவ்வளவு கஷ்டப்படுகிறேனே, எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டக் கூடாதா?” என்று வேண்டினான்.
பகவான் அவன் முன் உடனே தோன்றினார்.
“அன்பனே! கவலைப்படாதே! இதோ இந்தக் கண்ணாடியை அணிந்து கொள்; ஒரு மனிதனைப் பார்; அவன் உனக்கு உதவி செய்வான்” என்று கூறி மறைந்தார்.
பரம சந்தோஷம் அடைந்த ராமப்ரபன்னன் அந்தக் கண்ணாடியை கண்ணில் அணிந்து கொண்டான்.
என்ன ஆச்சரியம்! எந்த மனிதனைப் பார்த்தாலும் அவன் புலியாகவோ, கரடியாகவோ, நரியாகவோ, கழுதையாகவோ அல்லது ஏதோ ஒரு மிருகமாகவோ தான் தென்பட்டான்.
மனிதனையே காணோம்!
அவன் மனிதனைத் தேடி அலைய ஆரம்பித்தான்.
ஒரு நாள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தான்.
என்ன ஆச்சரியம்! அவன் மனிதனாகவே தோன்றினான்.
மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவன் அந்த செருப்புத் தைக்கும் ஏழை தொழிலாளியை அணுகி, தன் ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி செய்யுமாறு வேண்டினான்.
அந்த ஏழைக்கோ ஒரே ஆச்சரியம்!
ஏராளமான பிரபுக்களும் அரசனும் நாட்டில் இருக்கும் போது தன்னிடம் உதவி கேட்க ஒரு ஆளா?
அவன் வியப்புடன் ராமப்ரபன்னனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான்.
ராமப்ரபன்னனும் நடந்தை விவரித்து பகவான் தந்த கண்ணாடியையும் காண்பித்து தான் பார்த்ததில் அவன் ஒருவனே மனிதனாகத் தோன்றுகிறான் என்று கூறினான்.
இதை நம்பாத அந்தத் தொழிலாளி அந்தக் கண்ணாடியை வாங்கி தான் அணிந்து பார்த்தான்.
உண்மை, யாருமே மனிதர்களாகத் தோற்றமளிக்கவில்லை – ராமப்ரபன்னனைத் தவிர.
அப்போது அரசவையிலிருந்த வந்த சேவகன் ஒருவன், மன்னர் அணிய வேண்டிய செருப்பைத் தைத்தாயிற்றா என்று அந்தத் தொழிலாளியைக் கேட்டான்.
“தயாராக இருக்கிறது” என்ற பதிலைக் கேட்ட அவன் அதை வாங்கிப் புறப்படத் தயாரானான்.
ஆனால் உடனே தொழிலாளி அவனைத் தடுத்து நிறுத்தி தானே மன்னரிடம் வந்து தருவதாகக் கூறி அதை வாங்கிக் கொண்டான்.
மன்னனிடம் வந்த அவன் ராமப்ரபன்னனை மன்னரிடம் காட்டி அவனுக்கு உதவுமாறு வேண்டினான்.
மன்னனுக்கு இது விநோதமாகப் பட்டது.
ராமப்ரபன்னன் தன்னை நேரடியாக வந்து அணுகாமல் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் எதற்குச் செல்ல வேண்டும்?
இதை அவன் கேட்கவே தொழிலாளி நடந்ததைச் சொன்னான்.
வியப்புற்ற மன்னன், ராமப்ரபன்னனிடம் “அரசவையில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.
ஒரே மிருகங்களைப் பார்ப்பதாகப் பதில் அளித்தான் ராமப்ரபன்னன்.
உடனே தன்னைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது? தனது மந்திரியைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான்.
“மன்னரே! நான் சொல்லி விடுவேன் பதிலை. ஆனால் எனக்குத் தண்டனை அளிக்கக் கூடாது” என்று வேண்டினான் ராமப்ரபன்னன்.
மன்னன் தண்டனை அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறினான்.
உடனே ராமப்ரபன்னன், “அரசே! நீங்கள் கர்ஜிக்கும் சிங்கம் போல காணப்படுகிறீர்கள். மந்திரியோ கழுதையாகத் தோற்றமளிக்கிறார்” என்றான்.
உடனே மன்னன் அந்தக் கண்ணாடியை வாங்கித் தன் கண்ணில் அணிந்து பார்த்தான்.
அந்த அரசவையில் அவன் ராமப்ரபன்னனையும் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியையும் மட்டுமே மனிதர்களாகக் கண்டான்.
வியப்படைந்த அவன் தன்னலமற்ற இடைவிடாது இருக்கும் பக்தியே அவர்களை மனிதர்களாகக் காட்டுகிறது என்றும் சுய நலம் நோக்கம் கொண்ட வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை அவர்களது நிலைக்கு ஏற்ப அந்தந்த மிருகங்களாக கண்ணாடி காட்டுகிறது என்றும் தன் அறிவினால் ஆய்ந்து அறிந்தான்.
ராமப்ரபன்னனுக்கு உரிய உதவிகளைச் செய்த அவன் இறை தியானத்தில் மூழ்கி சுயநலமற்று அரசாள ஆரம்பித்தான். தனக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பளித்த தொழிலாளியை அவன் போற்றி கௌரவித்தான்.
இந்தச் சம்பவத்தால் நாட்டில் உள்ள மக்களும் பக்தியில் ஊன்றி இறைவனை தியானிக்க ஆரம்பித்தனர். நாடே தெய்வீக நாடாக மாறியது!
***