
Post No. 12,592
Date uploaded in London – 16 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
வியாஸர் யார்?
ச.நாகராஜன்
வியாஸரே பிரம்மா, விஷ்ணு, சிவன்!
அசதுர்வதனோ ப்ரஹ்மா த்விபாஹுரபரோ ஹரி: |
அபாலலோசன: சம்புர் பகவான் பாதராயண: ||
புனிதரான வியாஸ மஹரிஷி பிரம்மாவே தான் ஆனால் அவருக்கு நான்கு முகங்கள் இல்லை.
அவர் விஷ்ணுவே தான். ஆனால் அவருக்கு இரண்டு கைகள் தான் உண்டு.
அவர் சிவனே தான். ஆனால் அவருக்கு மூன்றாவது கண் கிடையாது.
ஆக வியாஸர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று இப்படி போற்றப்படுகிறார்.
நிரந்தரமான உடலைக் கொண்டவர் யார்?
அசலா கமலா கஸ்ய கஸ்ய மித்ரம் மஹீபதி: |
சரீரம் ச ஸ்திரம் கஸ்ய கஸ்ய வஷ்யா வராங்கனா ||
எவருடைய செழிப்பான வளம் நிரந்தரமானது?
யாருடைய நண்பன் அரசன்?
எவருடைய உடல் நிரந்தரமானது?
வேசியின் காதலைக் கொண்டவர் யார்?
விடை இது தான்; செல்வம் வரும் போகும். எவருக்கும் அது நிரந்தரமல்ல!
அரசனுடன் பழகுபவர் குளிர்காலத்தில் நெருப்பில் குளிர் காய்பவர் போல விலகாமலும் கிட்ட நெருங்காமலும் இருக்க வேண்டும்.
அரசனுக்கு யார் தான் நண்பர்? ஒருவருமில்லை!
யாருக்கு உடல் நிரந்தரம். பிறந்தவர் இறக்க வேண்டும். இது நியதி; விதி.
காசுக்கு உடலை விற்கும் வேசி காதலிப்பது போலப் பேசினாலும் அவளது காதலைக் கொண்டவர் யார்? யாருமில்லை!
எட்டு சித்திகள்
அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |
ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||
யோகிகள் அடையும் சித்திகள் எட்டு.
அவையானவன:
அணிமா – அணுவைப் போல மிகச் சிறியதாக ஆதல்
மஹிமா – மலையை விடப் பெரியதாக ஆதல்
லகிமா – காற்றைப் போல லேசாக ஆதல்
கரிமா – மலை, வாயு போன்ற எதாலும் அசைக்க முடியாதபடி கனமாக ஆதல்
ப்ராப்தி – அனைத்தையும் தன்வயப்படுத்தல், மனதில் நினைத்த அனைத்தையும் அடைதல், பெறுதல்
ப்ராகாம்யம் – தனது உடலை விட்டு இன்னொரு உடலில் புகுதல் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்
ஈசத்வம் – பிரம்மா போன்ற தேவர்களிடத்திலும் கூட தனது ஆணையைச் செலுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தல்
வசித்வம் – அனைத்தையும் வசப்படுத்தல்
இவையே அஷ்டமாசித்திகள் – எட்டு சித்திகள் எனப்படும்!
படைத்தவனின் மூன்று மாபெரும் தவறுகள்!
நம்மைப் படைத்தவன் மூன்று மாபெரும் தவறுகளைச் செய்து விட்டான்.
அவை என்னென்ன?
இந்த ஸ்லோகம் சொல்கிறது:
அத்யல்பசம்பத: சந்த: புமானிஷ்டஸ்ச துர்குலே |
லக்ஷ்மீரனபிஜாதஸ்ய வேதஸ: ஸ்வலிதத்ரயம் ||
படைத்தவனின் மூன்று தவறுகள்:-
1) அருமையான மனிதர்கள் செல்வமின்றி ஏழ்மையில் இருப்பது.
2) தாழ்ந்தகுலத்தில் பிறந்தாலும் அருமையான மனிதர்களாய் இருப்பது.
3) மோசமான கெட்டவர்களிடம் ஏராளமான பணம் இருப்பது.
தனது இடத்தில் இருப்பதே பலம்!
ஒருவன் தனது சொந்த இடத்தில், சொந்த நாட்டில் இருப்பதே அவனுக்கு பலம். இல்லை என்றால் என்ன ஆகும்?
இதோ ஸ்லோகத்தைப் பார்ப்போம்:
அதேஷஸ்யோ ஹி ரிபுணா ஸ்வல்பகேநாபி ஹன்யதே |
ப்ராஹோல்ப்யானபி ஜலே கஜேந்த்ரமபி கர்ஷதி ||
ஒருவன் தனது சொந்த இடத்தில் இல்லையெனில் சிறிய எதிரியால் கூட வீழ்த்தப்படுவான். முதலை ஒன்று மிகச் சிறியதாக இருந்தாலும் கூட ஜலத்தில் இருக்கும் போது யானைகளின் அரசனான கஜேந்திரனைக் கூட இழுத்துச் சென்று விடும்.
அஞ்ஞானமே வாழ்க்கையில் வியாதி
அஞ்ஞானமிஹ நிதானம் ப்ராப்யூபம் ஜனனமேவ பவரோகே |
பரிபாக: சம்சரணம் பைஷஜ்யம் நைஷ்டிகீ சாந்தி : ||
உலக வாழ்க்கையின் வியாதிக்கான முதல் காரணம் அஞ்ஞானமே.
அதனுடைய முதல் அறிகுறி இந்த உலகில் பிறப்பது – ஜனனம் தான்!
உலகியல் வாழ்க்கை அதன் அபிவிருத்தியாகும்.
இதற்கான பரிகாரம் அல்லது தீர்வு நிரந்தரமான சாந்தி தான்!
***