
Post No. 12,602
Date uploaded in London – – – 18 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 31
62.சீரணி நாகபூஷணி கோவில், சண்டிலிப்பாய்
இலங்கையின் வடபகுதி மாகாணமான யாழ்ப்பாணத்தில் , யாழ்ப்பாண நகரிலிருந்து எட்டு மைல் தொலைவில் சண்டிலிப்பாய் கிராமம் இருக்கிறது. நயினாத் தீவு நாகபூஷணி கோவிலுக்கு அடுத்தபடியாகப் பிரபலம் வாய்ந்தது இந்த சீரணி நாகபூஷணி கோவில். ஏப்ரல் மாத பெளர்ணமித் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஷண்முகநாதர் முருகேசப் பிள்ளை என்பவர் தமிழ்நாட்டிலுள்ள காரைக்காலிலிருந்து வந்து குடியேறிய குல நாயக , புனிதவல்ல முதலியார் வழி வந்தவர் ஆவார்.
(முதலியார் என்பது பட்டம் ; ஜாதி அல்ல.)
முருகேசப்பிள்ளை தேவி பக்தர். நாள்தோறும் இறைவன் மீது துதிபாடி நாட்களைக் கழித்து வந்தார். அவர்க்கு ஒரு தேவி யந்திரம் கிடைத்தது. அதாவது மந்திரங்களும் சக்கரங்களும் பொறிக்கப்பட்ட தகடு. ஆயினும் கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு பண பலம் இல்லை. 1896ம் ஆண்டு சித்திரா பெளர்ணமி அன்று அவருக்கு ஒரு கனவு வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தைத் தோண்டும்படி கனவில் கட்டளை பிறந்தது. அப்படித் தோண்டிப்பார்த்தபோது அதிசயம் நிகழ்ந்தது. ஒரு ஐம்பொன் அம்பாள் விக்ரகம் கிடைத்தது. பேரானந்தம் அடைந்த அவர் கோவில் கட்டும் பணியில் இறங்கினார் . பக்தர்கள் பண மழை பொழிந்தனர்..
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம் — என்று மகா கவி பாரதியார் பாடியது உண்மையானது. ஜூலை மாத ஆடி அமாவாசையில், முதல் பூஜை துவங்கியது. அது இன்று வரை நீடிக்கிறது..
1962 ஆம் ஆண்டு பக்தர்கள் ஒன்று கூடி, திருப்பணி சபையை அமைத்தனர் பக்தர்கள் உறுப்பினர்களாகச் சேர்வதில் ஆர்வம் காட்டவே திருப்பணிகள் துவங்கின. மஹா மண்டபம், வசந்த மண்டபம்,, துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிக்கம்பம் ஆகியன புதுப் பொலிவு பெற்றன அம்பாளின் திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் உருவங்கள் புதுப்பிக்கப்பட்டு. பிரகார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். மிகவும் அழகான தேர் ஒன்றை கே. தம்பையா குடும்பத்தினர் நன்கொடையாகக் கொடுத்தனர்.
இப்போது கோவிலுக்குச் செல்லும் தொண்டர்கள், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். தேர்த் திருவிழா போலவே இங்கு நடைபெறும் நவராத்திரி உற்சவமும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
முருகேச பிள்ளைக்கு பூமிக்கடியிலிருந்து கிடைத்த அம்பாள் விக்ரகம் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் கோவில் இருந்திருக்க வேண்டும். கண்ணகி, இலங்கைக்கு வந்து, வற்றாப்பளை வரைக்கும், பல இடங்களுக்குச் சென்றாள் என்றும் அவள் நடந்த வழி எல்லாம் அம்மன் வழிபாடு ஏற்பட்டது என்றும் ஆன்றோர் பகர்வர்..
கோவில் பற்றி மேல் விவரம் வேண்டுவோர் 1963ம் ஆண்டு வெளியான திருப்பணி சபை மலரில் படித்து அறியலாம்.
இலங்கை முழுதும் நாக பூஷணி வழிபாடு
கண்ணகி வழி நடந்த இடம் எல்லாம் அம்பாள் வழிபாடு ஏற்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாகபூஷணி , காளி , துர்கா கோவில்கள் இலங்கை முழுதும் காணப்படுகின்றன.
நாகபூஷணி கோவில்கள் அராலி தெற்கு , கொண்டாவில் , நவாலி, முல்லைத்த தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இருக்கின்றன
லண்டனிலும் கூட நாகபூஷணி அம்மனுக்கு இலங்கைத் தமிழ்ர்கள் கோவில் கட்டியுள்ளனர் அதன் கும்பாபிஷேக சிறப்பு மலர்க கமிட்டி கூட்டத்தில் நானும் அழைப்பாளராகக் கலந்து கொண்டு மலருக்கு கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்தேன்.
Xxxx

63.தெல்லிப்பளை துர்கா கோவில்
யாழ்ப்பாண நகரிலிருந்து காங்கேசந்துறை நோக்கி எட்டு மைல் தொலைவு பயணம் செய்தால் தெல்லிப்பளை துர்கை அம்மனைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்த திசையில் கோவிலை நோக்கிச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தக் கோவில் பிரபலம் அடைந்தாலும் இந்தக் கோவிலுக்கு பழைய வரலாறும் உண்டு
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், கதிர்காமர் என்ற பக்தர் இந்தியாவுக்குச் சென்று பல தலங்களில் வழிபட்டார். மதுரை, காசி, ராமேஸ்வரம் என்று பல இடங்களுக்கும் சென்று வந்தார்; திரும்பிவருகையில் காசியிலிருந்து தேவியின் சக்கரம் பொறித்த தகட்டையும் ( சக்தி யந்திரம்) கொண்டுவந்தார். காங்கேசன் துறையில் வந்து இறங்கிய அவர் நடந்து செல்லுகையில் களைப்பு ஏற்பட்டு ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார். அவர் மனதில் தோன்றியபடி அங்குள்ள இலுப்பை மரத்தின் அடியிலேயே தேவி சக்கரத்தை வைத்து வழிபாட்டினைத் துவக்கினார். பக்தர்கள் தொகை பெருகவே கோவில் எழுப்பப்பட்டது 1829-ம் ஆண்டில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது ; காஞ்சிபுரத்திலிருந்து வந்த குருக்கள் முறையான பூஜைகளை நடத்தினார். அப்போதுமுதல், உடையார் கதிரேச பிள்ளை வழிவந்தோர் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். காலப்போக்கில் மண்டபங்கள் கட்டப்பட்டு அன்னதானம் அளிக்கும் வரைக்கும் வளர்ந்துவிட்டது பிரகாரத்தில் முருகன், பிள்ளையார், பைரவர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
சமய நூல்களைக் கற்றுத்தேர்ந்த தங்கம்மா அப்புக்குட்டி என்பவர் இடையறாது செய்த சேவையால் கோவிலின் புகழ் பரவியது
1968-ம் ஆண்டு முதல் வருடாந்திர உற்சவங்கள் ஆரம்பமாயின. 1978-ல் தேர் ஒன்றும் சேர்ந்தது . ஆகஸ்ட் மாதத்தில் வருட விழாக்கள் நடக்கின்றன ராஜ கோபுரம் கட்டப்பட்டு 1981-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
1981ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் முழுவிவரங்களையும் படித்தறியலாம் .
—subham —-
Tags சீரணி நாகபூஷணி, கோவில், இலங்கை, 108 புகழ் பெற்ற, இந்து ஆலயங்கள், Part 30, தெல்லிப்பளை, துர்கா கோவில்,