
Post No. 12,605
Date uploaded in London – 19 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
திருமூலர் கண்ட தச நாதங்கள்!
ச.நாகராஜன்
மிக நுட்பமான ஒலி அல்லது ஓசை பற்றி இந்து மதம் தரும் செய்திகள் அபூர்வமானவை.
இவை இன்றைய விஞ்ஞானத்தால் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இனியும் கண்டுபிடிக்கப்பட முடியுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில் இவை லாபரட்டரி சோதனைகளால் கண்டுபிடிக்கப்பட முடியாது.
ஓம் என்ற ஒலியே ஆதி ஒலி அல்லது ஓசை என்றும் அது அண்டம் முழுவதும் பரவி உள்ள தெய்வீக ஒலி என்பதையும் இந்து மதமே கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இந்த ஓசைகளை எப்படி இந்து மத ரிஷிகளும் மகான்களும் உணர்ந்தார்கள், இன்றும் அனைவரும் உணர முடியும் என்பதற்கும் அவர்கள் விடைகளை அளித்துள்ளார்கள்.
உள்முக தியானத்தால் மட்டுமே இந்த தெய்வீக ஓசையை அறிய முடியும்.
ஆன்மீக நுட்பங்களை விளக்கும் அற்புத யோகி திருமூலர்.
3000 பாக்களை அருளியுள்ள அவர் அவற்றில் இயற்கை இரகசியங்களையும் தெய்வீக இரகசியங்களையும் நுட்பமாக விளக்கி அருளியுள்ளார்.
திருமந்திரத்தில் 606,607 பாடல்களில் இவற்றைக் காணலாம்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்க ஒண்ணாதே (பாடல் 606)
இதன் பொருள்:
தியானத்தில் அமர்ந்து நாம் உள்முகமாகச் செல்லும் போது சுழிமுனை நாடியின் அடி வாசலைத் திறக்கக் கூடிய அற்புத இடத்தை அடைவோம்.
அப்போது இன்னும் மேலே செல்லும் போது அதாவது வாசி மேலே செல்லும் போது பத்து வித ஓசைகள் அல்லது ஒலிகள் அல்லது நாதங்கள் கேட்கும்.
இவை தச நாதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடிக்கு நாத நாடி என்று பெயர்.
இதில் லயம் செய்த யோகி அல்லது சாதகன் அதை வெளியில் செல்லாமல் கட்டி விட்டால் சுழிமுனையின் உச்சி வாயிலுக்குச் சென்று விடுவான்.
சரி தச நாதங்கள் எவை?
(1) மணியோசை
(2) கடல் அலையோசை
(3) யானை பிளிறும் ஓசை
(4) புல்லாங்குழலோசை
(5) இடியோசை
(6) வண்டின் ரீங்கார ஓசை
(7) தும்பியின் முரலோசை
(8) சங்கொலி
(9) பேரிகை ஓசை
(10) யாழிசை
நன்கு தியானம் செய்து உள்முகமாகச் செல்பவர்களே இந்த ஓசை இன்பத்தைக் கேட்டு உணர முடியும்.
“நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுறு நண்ணுவதாகாதே”
“ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே”
“சங்கு திரண்டு முரன்றேழும் ஓசை தழைப்பனவாகாதே”
என்ற திருவாசகத் தொடர்கள் மாணிக்கவாசகரின் தியான அனுபவங்களை விளக்கும் சொற்றொடர்களாகும்.
‘திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென்று உந்தீ பற
நேர்பட அங்கே நின்று உந்தீ பற (பாடல் 17)
என்று திருவுந்தியார் மாபெரும் ரகசியத்தை விளக்குகிறது
திருச்சிலம்பாகிய திருவருள் ஓசை ஒலியாகிய பிரகாசமான ஒலி வழியே செல்வாயாக; அங்கு ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனைக் காண்பாயாக என்பது பாடலின் விளக்கமாகும்
கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே. (பாடல் 607)
என்ற பாடலும் இதை நன்கு விளக்குகிறது.
வன்மையான ஓசையில் ஆரம்பித்து மென்மையான ஓசையான வீணை ஒலியில் பாடல் முடிகிறது.
வீணா நாதத்தில் இறைவனைக் காணலாம் என சங்கீத வித்வான்களும் மகான்களும் கூறுவதில் நுட்பமான இரகசியம் உள்ளது; அதை இந்தப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
நுட்பமாக நமது பயணம் உள்நோக்கிச் செல்லச் செல்ல நுணுகிய ஓசையைக் கேட்டு ஓம் என்ற மந்திரத்தில் லயமடைவோம்.
இந்த ஒலிகளை விஞ்ஞானம் ஆராய ஆரம்பித்தால் பௌதிக உண்மைகளையே விளக்க முடியும்.
மனித மனத்தின் ஆழத்திற்குள் சென்று மனித இயற்கையின் அடித்தளம் சென்று நாம் பெறுகின்ற ஆன்மீக அனுபவங்களை அதனால் விளக்க முடியாது.
ஆனால் யோகிகளும், மகான்களும், ரிஷிகளும் தமது உள்ளுணர்வால் ஓசையின் வகைகளையும், திறன்களையும் அதன் பலன்களையும் உணர்ந்து நமக்கு வெளிப்படுத்தும் திறன் ஒரு மாபெரும் அதிசயமல்லவா?
இதைத் தருவது ஹிந்து மதம் ஒன்றேயல்லவா?
உணர்வோம்; செயல்படுவோம்; ஓசை மஹிமையை உணர்ந்து அதில் லயப்படுவோம்.
***