துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் ? (Post No.12,607)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,607

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் ஆண்டுதோறும் 4 நவராத்திரிகளைக் கொண்டாடுகிறார்கள் .

அவை

Chaitra Navaratri, சைத்ர  நவராத்திரி

Aashaadha Navaratri, ஆஷாட  நவராத்திரி

Sharadha Navaratri; சாரதா  நவராத்திரி

Magha Navaratri. மாக  நவராத்திரி

இந்த நாலில்,  வசந்த காலத்தில் வரும்  நவராத்திரியும் மழைக்காலத்தில் வரும் சாரதா  நவராத்திரியும் பிரபலமானவை.. தீபாவளிக்கு முன்னர் வரும்  நவராத்திரி சாரதா  நவராத்திரி.; மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் துவங்கும் . நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாள் விஜய தசமி. அதையே தசரா என்பர்.

இந்தப்  பெரிய  நவராத்திரி, வங்காள தேசத்தில் தேசீய விழாவாகத் தெருவுக்குத் தெரு கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் பெரிய மண்டபம் அல்லது ஹால் அல்லது தற்காலிக கொட்டகைகளில்  துர்கா தேவியை படமாகவோ, மண்ணினால் செய்த பொம்மையாகவோ வைத்து வழிபடுவர். துர்கா தேவிக்கு அல்லது 10 கரங்கள் இருக்கும்.

இவ்வாறு 10 கரங்கள் இருக்கும் உருவங்களில் பத்து கைகளிலும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஆயுதம் இருக்கும் அதன்பயனை அறிந்தால் துர்க்கைக்கு ஏன் 10 கரங்கள் என்பது விளங்கும்..

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பத்து கரங்களில் அவள் வைத்துள்ள பொருட்கள் , பக்தர்களளுக்குப் பாதுகாப்பு வழங்கும்.

இதோ பத்து கரம்/ கைகள் உள்ள துர்கையைத் தரிசிப்போம்

1.ஒரு கையில் திரி சூலம் இருக்கும் சிவ பெருமானே  இதை துர்க்கைக்கு அளித்தார்.. மூன்று முனைகள் உள்ள இந்த ஆயுதம் சத்வ, ராஜச, தாமச குணங்களைக் குறிக்கும் .

2.வாள் – இந்த வாளை துர்க்கைக்கு  கணபதி அளித்தார்.. இது ஞானத்தைக் குறிக்கும் ; வாளின் கூர்மை போல புத்தி கூர்மை இருக்கும்.. மின்னும் அந்தவாள் ஞானப் பிரகாசத்தைக் குறிக்கிறது. பாரதியார் போனற கவிஞர்கள் ஞான வாள் பற்றிப் பாடி இருப்பதை அறிவோம்

பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)

ஞான வாளைத்  திருமூலரும் திருமந்திரத்தில் பாடுகிறார்:

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)

எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை..

3.ஈட்டி – அக்கினி தேவன் கொடுத்த இந்த ஆயுதம் துர்க்கையின் இன்னும் ஒரு கையில் இருக்கிறது இது தீவிர சக்தியை, மஹா சக்தியைக் காட்டும் ஆயுதம். அதுமட்டுமல்ல; எது நல்லது, எது கெட்டது என்பதைப் பிரித்துப்பார்க்கும் விவேகத்தைக் குறிக்கும் .

4.இந்திரன்  கொடுத்த வஜ்ராயுதம் துர்கா தேவியின் இன்னும் ஒரு கரத்தை அலங்கரிக்கிறது பலத்தின் , மன உறுதியின் அடையாளம் இது. அன்னையை வணங்குவோருக்கு மனோதிடத்தை, மன உறுதியை, எதையும் தாங்கும் இதயத்தை அன்னை அருளுவாள் என்பது இதன் தாத்பர்யம்.

5.வாயுதேவனும், சூரிய தேவனும் அருளிய வில்லும் அம்பும் ஒரு கரத்தில் இருப்பதைக் காணலாம். தீமையை வீழ்த்தும் சக்தியை இது அளிக்கிறது

6. துர்கா தேவியின் திருக்கரத்தில் இருக்கும் கோடாரி , விஸ்வகர்மாவால் கொடுக்கப்பட்டது புதிய விஷயங்களை, புதுமைகளைப் படைக்கும் ஆற்றலை துர்கா தேவி அளிப்பாள் என்பதை இது காட்டுகிறது .விஸ்வ கர்மாவின் வேலையே அதுதான்

7.சுதர்ஸன சக்கரம் – கிருஷ்ணன் கொடுத்த சுதர்ஸன சக்கரத்தின் சக்தி மஹத்தானது ; தீயோரை வீழ்த்திவிட்டு பூமராங் போலத் திரும்பி வந்து விடும். தென்னகத்தில் சக்கரத்தாழ்வார் என்னும் சுதர்ஸன சக்கரம் இல்லாத பெருமாள் கோவில் கிடையாது

8.கதாயுதம் – பீமன் கையில் கதாயுதம்  இருக்கிறது. கிருஷ்ணன் கையில் கதாயுதம் உண்டு. அதனால் அவர்கள் வீழ்த்திய தீயோரின் எண்ணிக்கையை பாகவதம் , மஹா பாரதத்தில் படிக்கிறோம்.சத்தியத்தை நிலைநாட்டும் சக்தி அது

9.கத்தி அல்லது குத்து வாள் ஒரு கையில் ஏந்தியிருப்பாள் துர்காதேவி. இதுவும் தீயோரை அழிக்கும்.

10.சங்கு : துர்க்கையின் கையில் இருக்கும் சங்கு சுபச் செய்திகள் வருவதையும், தீமைகள் விலகுவதையும் நமக்கு நினைவுபடுத்தும். நம்பிக்கையை வளர்க்கும்; சங்கின் பயன் பற்றிப் பட்டினத்தாரும் பாடுகிறார்

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை

நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்

ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்.– பட்டினத்தார் பாடல்

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள்.

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்; இன்றும் வங்காளிகள் கல்யாணத்தில் இதைக் காணலாம் . ஆண்டாளும் கூட திருமணக் காட்சியை மத்தளம் கொட்டவரி சங்கம் நின்று ஊத,– என்று  நாச்சியார் திருமொழியில் பாடுவதைப் படிக்கிறோம்.மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆக சங்கு என்பது நமக்கு நல்ல, தீய விஷயங்களைச் சொல்லும்.

பத்துக் கரங்களை உடைய துர்கா தேவி நமக்கு பத்து விதங்களில் அருள் புரிவாளாகுக.

–subham–

Tags- துர்கா, பத்து கரங்கள், 4 நவராத்திரி, பத்து ஆயுதங்கள்

Leave a comment

Leave a comment