பொலன்னறுவையில் 16 கோவில்கள் : இலங்கைத் தீவின் 108….. Part 32 (Post.12,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,606

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 32

64.பொலன்னறுவையில் 10 சிவன் கோவில்கள் , 5 விஷ்ணு  கோவில்கள்

பொலன்னறுவை என்ற நகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் நிலவிய சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக விளங்கியது  அங்கு பலமுறை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 10  சிவன் கோவில்களும்  5 விஷ்ணு  கோவில்களும் , ஒரு காளி கோவிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன ; இவைகளில் பெரும்பாலானவை முழுதும் இடிந்து, அழிந்து போய், அஸ்திவாரம் அல்லது தூண்கள் மட்டுமே உள்ளன. இவைகளில் மிகவும் பழைய கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் கட்டியது . அவர்க்குப் பின்னர் பாண்டிய வம்ச மன்னர்கள் சில கோவில்களைக் கட்டினார்கள் . சில ஆலயங்கள் கலிங்க மாகன் என்ற மன்னர் காலத்தவை .

இவைகளில் முழு அளவுக்கு உயர்ந்து நிற்கும் சிவாலயத்துக்கு இரண்டு 2 என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இதில் கல்வெட்டும் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இங்கு தோண்டும் பணிகளை 1901ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் துவக்கினார்கள் . பல சிவலிங்கங்களும் , சதுர அல்லது செவ்வக  வடிவ ஆவுடையார் பகுதிகளும் கிடைத்தன. இந்த வடிவங்கள் சோழர் காலத்தவை என்பதைக் காட்டுகின்றன.

சிவன் கோவிலுக்கு அருகருகே விஷ்ணு கோவிலும், சிவன் கோவில்களில் செங்கல் கட்டிடத்தில் விநாயகர் சந்நிதியும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . சில கோவில்களில் சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகள் இருந்த தடயங்களும் காணப்படுகின்றன.

சிவாலயம் எண்  1

பொலன்னறுவை நகருக்கு மிக அருகில் இருக்கிறது; சிறிய கர்ப்பக்கிரகம்; 60 அடிக்கு 40 அடி அளவில் மஹா மண்டபம். கருங்கல் கட்டிடம். நல்ல சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இடிபட்ட சுவரில் அம்பாள் உருவம்;

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிவகாமி அம்மன் விக்ரகம், பொலன்னறுவை மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது . விநாயகர் , சுப்ரமணியர் , பைரவர் சந்நிதிகள் செங்கற்களால்  ஆனவை . சிவலிங்கம் சிறியது . இங்கு புதைந்து போயிருந்த 3 அடி உயர நடராஜர், சோமாஸ்கந்த மூர்த்தி, 2 அம்பாள் விக்கிரகங்கள் , அப்பர் சிலை ஆகியன கொழும்பு மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டன. இவைகள் சென்னை மியூசியத்திலுள்ள சோழர்கால ஐம்பொன் விக்கிரக அழகிற்கு வரவில்லை. தரம் குறைந்தே காணப்படுவதால் இங்கேயே செய்யப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் அறிஞர்களின் துணிபு

சிவாலயம் எண் 2

இதுதான்  முழுமையாக உள்ள கோவில்

தொல்பொருட் துறை அனுமதியுடன் ஆனி உத்திரம், சிவராத்திரி உற்சவம் முதலிய வழிபாடுகள் மட்டும் நடைபெறும் இடம் இது . இங்கு சுவர்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன ; கருங்கல் , சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது  மூன்றடுக்கு விமானம். ஏனைய சந்நிதிகள் செங்கல் கட்டிடங்கள் . மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையாரில் சிவலிங்கம்.

சிறிய கல்வெட்டு வானவன்  மாதேவி ஈஸ்வரமுடையார் கோவிலில் உள்ள பள்ளி கொண்டார், அழகிய மணவாளர் பற்றிக் குறிப்பிட்டு ராஜேந்திர சோழனின் புகழ் பாடுவதால் காலத்தை அறிய உதவுகிறது.

 இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி 

இரண்டாவது கல்வெட்டு விளக்கு எரிக்க செய்த தானம்  பற்றியது. சோழ மன்னன் அதி ராஜேந்திர தேவன் பெயர் காணப்படுகிறது .

சிவாலயம் எண் 5

இங்குதான்  அதிக எண்ணிக்கையிலான ஐம்பொன் விக்கிரகங்கள் கிடைத்தன உடைந்த நிலையில் காணப்பட்ட லிங்கத்தை இப்போது ஒட்டிவைத்துள்ளனர் . 1908ம் ஆண்டில் இவை கண்டுபிடிக்கப்பட்டன பிற்காலத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஐம்பொன் விக்கிரகங்கள் –

ஆறு அடி உயர நடராஜர், , சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், விநாயகர், மஹா விஷ்ணு,

மற்ற என்னுள்ள சிவாலயங்கள் அளவில் சிறியவை.

ராஜராஜ சோழனும், அவருடைய மகன் ராஜேந்திர சோழனும் இலங்கையின் பெரும்பகுதியை வென்று 1070, ஆண்டுவரை ஆண்டனர். ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும் அங்குள்ள ஆலயங்கள் அவர்களுடைய புகழ் பாடிய வண்ணமுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளில் சில விநோதங்கள் உண்டு.

பொலன்னறுவையில் 1908ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தியில்  ஸ்கந்தன் இல்லை!

சோம +உமா+ஸ்கந்தன் = சோமாஸ்கந்தன் என்பதை நாம் அறிவோம்.

1960ம் ஆண்டில் பொலன்னறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் மிகவும் வினோதமானது. நடராஜரின் பறக்கும் ஜடாமுடி இல்லை. திருவாச்சி வட்ட வடிவில் இல்லை ; காதணிகளும் இல்லை. இடது கரத்தின் கக்கத்தில் பைபோல தொங்குகிறது. உள்ளூர் கலைஞர்கள் முயற்சி போலும்! படங்கள் அனைத்தையும் 1964ம் ஆண் டில் சி.எஸ். நவரத்தினம் எழுதிய ஆங்கில புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON , C S  NAVARATNAM, 1964 காணலாம்.

Xxxx

65.செல்வச்சந்நிதி முருகன் கோவில் , தொண்டைமானாறு

பல வினோதமான வழக்கங்களைக் கொண்ட கோவில் இது !

யாழ்ப்பாண நல்லூர் போலவே வேல்தான் மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது.

ஆனால் பூஜை முறையோ கதிர்காமம் போன்றது. வாயில் துணியைக்கட்டிக்கொண்டு மந்திரம் ஏதுமில்லாமல் வழிபாடு.

அது மட்டுமல்ல 65 ஆலம் இலைகளில் பிரசாதமாக அமுது படை க்கும் புது வழக்கம்!

ஆரம்பித்தவர் பெயரும் கதிர்காமர்; ஊரின் பெயரும் சின்னக் கதிர்காமம். ஒவ்வொரு வழக்கத்துக்கும் பின்னால்  ஒரு நீண்ட கதை சொல்லப்படுகிறது..

சுருக்கமாகக்  காண்போம்

கோவில் இருக்கும் இடம் — யாழ்ப்பாணத்திலிருந்து 20 மைல் தொலைவில் தொண்டைமான் ஆற்ற்றின் கரையில் உள்ளது.

கோவிலின் மற்ற பெயர்கள் — ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை

ஆறு ஓடுவதால் தீர்த்தம், தலம் , மூர்த்தி என்ற முச்சிறப்புகளும் உண்டு .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கருணாகரத் தொண்டைமானை உப்பு வாங்கி வர சோழ மன்னன் அனுப்பின்னான். உப்பு ஏற்றிய படகுகள் கடல் வரை செல்ல அவர் வெட்டிய கால்வாய் தொண்டைமானாறு ஆனது

எல்லா யாழ்ப்பாணக் கோவில்களையும் தரை மட்டம் ஆக்கிய ஹாலந்து நாட்டு, போர்ச்சுகல் நாட்டு மதவெறியர்கள் பழைய   கோவிலை இடித்து நொறுக்கினர். மனம் நொந்து போன கதிர்காமர் என்ற பக்தர் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றார். அங்கு அவருக்கு ஒரு வேல் கிடைத்தது. அதைப் பூவரசு மரத்தின் கீழே ஸ்தாபித்து வழிபட்டு வந்தார் . பக்தர் தொகை பெருகவே கோவில் கட்டிடங்கள் எழுந்தன . பக்தர்கள், வேண்டுதல் காணிக்கையாக அன்னதானம் செய்வதால் பக்தர்களுக்கு பிரசாதம் கிடைக்கிறது.. இதனால் வேல் முருகனின் பெயரே அன்னதான முருகன் என்றும் மாறியது .

பிராமண குருக்கள்கள் செய்யும் பூஜை முறைகள் இங்கு இல்லை ஆயினும் நித்திய பூஜைகளும் வருடாந்திர விழாவும் உண்டு.

உயர்ந்த மணிக்கூண்டு கோபுரமும் , கோவில் தேரும் கோவிலின் பெருமையை மேலும் அதிகரிக்கிறது.

FROM COLOMBO MUSEUM BOOK

—Subham—

Tags– செல்வச்சந்நிதி, முருகன் கோவில் , தொண்டைமானாறு,  சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம்,, பொலன்னறுவை, கோவில்கள், சிவாலய 2, Ploannaruvai

Leave a comment

Leave a comment