
Picture of Kumarapuram Temple
Post No. 12,611
Date uploaded in London – – – 20 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 33
66.சித்திர வேலாயுத சுவாமி கோவில். குமாரபுரம், முல்லைத் தீவு
முல்லைத்த தீவில் குமாரபுரம் என்ற கிராமத்தில் .சித்திர வேலாயுத சுவாமி கோவில் இருக்கிறது . வெட்டா பழங்குடி மக்கள் பகுதியில் இந்தக் கோவில் துவங்கியது; பழங்குடி மக்களும் வேல் மற்றும் வேலவனை வணங்கி வருகின்றனர் . அவர்கள் கம்புகளையும் இலை தழைகளையும் கொண்டு சிறு குடில்களில் இறைவனை வணங்குவர். காலப்போக்கில் அது பெரிய கோவில் ஆகிவிடும். வன்னி ஆட்சிக்காலத்தில் இருந்த மன்னர்கள், இத்தகைய இடங்களில் கோவில் கட்டினார்கள்.
இக்கோவில் கதிர்காமம் போன்ற பெருமையுடையதென தட்சிண கயிலாய மான்மியம் கூறுகின்றது. அந்நிய மதத்தினர் இந்துக்கோவில்களைத் தகர்த்து வந்த காலத்தில் இங்குள்ள விக்கிரகமும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது . அப்போது குமாரபுரம் ஜன நடமாட்டமின்றி காடாக மாறியது . பின்னர் 1915ல் வழக்கறிஞர் துரையப்பா , பரமசாமிக் குருக்கள் என்பவரிடம் கோவிலை ஒப்படைத்து திறம்பட கோவிலை நடத்திவைத்தார். 1955 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு நடைபெறும் கந்தர் சஷ்டி விழாவைக் காண்பதற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகின்றனர் .
Xxxx
67.வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்

மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது. திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.
1889 ஆம் ஆண்டில் அகிலேச பிள்ளை எழுதி வெளியிட்ட கோணேச வைபவம் நூலில் இக்கோவில் பற்றி எழுதியுள்ளார். கும்பாபிஷேக மலரில் அருள் சுரக்கும் வெருகலம்பதி என்ற கட்டுரையில் எஸ் . கணபதி பிள்ளையும் நிறைய தகவல் தந்துள்ளார்.
முருகப்பெருமான் சூரபத்மனுடன் நடத்திய போரில் முருகனின் அம்பு ஒன்று இந்த ஊரில் விழவே , அதை வெட்டர்கள் எடுத்து வணங்கி வந்தனர். குளக்கோடன் மன்னர் ஆட்சிக் காலத்தில் அது கோவிலாக உருப்பெற்றது.
இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.
. அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும் கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..
கண்டி மன்னன் கோவிலுக்காக நிறைய தானம் செய்தான். செட்டியாரும் கோவிலைக் கட்டினார். சீரும் சிறப்புடனும் வழிபாடு நடந்த காலத்தில் போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர். பின்னர், பக்தர்கள் சேர்ந்து கோவிலை எழுப்பினர். ஆண்டு தோறும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வருடாந்திர விழா 18 நாட்களுக்கு நடைபெறும். கதிர்காம பாத யாத்திரை செல்லுவோர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல இந்த விழாவையும் தரிசித்து விட்டுச் செல்லுவார்கள் .
இந்தக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டு பற்றி ஹுயூஜ் நெவில் Hugh Neville , Taprobane, 1887 எழுதியுள்ளார் . சுப்பிரமணியனுக்கு நமஸ்காரம் சொல்லிக் கல்வெட்டு துவங்குகிறது கோவிலின் தெற்குச் சுவரை கயிலாய வன்னியரும் மேற்குச் சுவரை சிம்மாபிள்ளையும் வடக்குச் சுவரை மட்டக்களப்புஊர், நீர்க்கொழும்பு கரையாரும் , கிழக்குச் சுவரை செட்டியார்களும் கட்டியதாக தெரிவிக்கிறது.
கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இங்கு மகா மண்டபத்தில் மகாவல்லி, கஜவல்லி சமேதராக ஆறுமுகப் பெருமான், உமையம்மை சமேத சந்திரசேகரர் சிலைகள் தெற்கு வாசல் நோக்கி உள்ளன. வசந்த மண்டபம் வேறாக உள்ளது.
பரிவார மூர்த்திகளான விநாயகருக்கும், பைரவருக்கும் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் தென்புறத்தில் கதிர்காம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கருவறையான மூலஸ்தானத்தில் முருகன் திருவுருவமோ, வேலோ பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அட்சர மந்திரம் எழுதி வைக்கப்பட்ட பேழையே கருவறையில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு கதிர்காமத்தில் பூஜை நிகழ்வது போல் திரைமறைவிலேயே பூசை நடைபெறுகிறது. வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு சற்றுத் தூரத்தில் காவடிப் பிள்ளையார் கோயில் உள்ளது. சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்கு கிழக்கு திசையில் வீரபத்திரர் கோயில், தாமரைக்குளம், சூரன் கோட்டை என்பன அமைந்துள்ளன.
—subham—
TAGS–சித்திர வேலாயுத சுவாமி, கோவில், வெருகல், குமாரபுரம் ஆலயம்