
Post No. 12,636
Date uploaded in London – 26 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ராஜஸ்தான் ஃபைல்ஸ்!
துர்காதாஸின் விஸ்வாசம்!
ச.நாகராஜன்
ஏராளமான அற்புத வரலாறுகளைக் கொண்டது ராஜஸ்தான்.
வீரத்துடன் முகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களின் சரிதத்தை நாம் தேடிப் பிடித்தாவது படிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட மகத்தான சரிதங்களில் ஒன்று மன்னன் அஜித் சிம்மனுடையது.
அஜித் சிம்மனுடைய தந்தையான மன்னன் ஜஸ்வந்த் சிம்மன் காலமானார். மார்வாட் அரசு அரசனை இழந்தது. ஜோத்பூரில் முடிசூட்டக் கொள்ள முடியாதபடி அஜித் சிம்மனுக்கு அப்போது இளம் வயது.
பார்த்தான் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்!
எப்படியாவது இந்தத் தருணத்தில் மார்வாடை அபகரிக்க அவன் பேராசை கொண்டான்.
ஜஸ்வந்த் சிம்மனுடைய திவானான ஆசகரணனுடைய புதல்வரான துர்காதாஸைத் தன் பக்கம் இழுக்கத் திட்டம் தீட்டினான் அவுரங்கசீப்.
எட்டாயிரம் பொற்காசுகளைத் தருவதாகவும் இளவரசன் அஜித் சிம்மனைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து துர்காதாஸ் விலக வேண்டும் என்றும் அவன் ஆசை காட்டினான்.
துர்காதாஸ் இதற்கு இணங்கவில்லை.
அவுரங்கசீப்பின் சதியிலிருந்து அஜித்சிம்மனைக் காப்பாற்ற அந்த இளவரசனை வெவ்வேறு இடத்திற்கு மாற்றித் தங்க வைத்து அவனது பாதுகாப்பை உறுதி செய்தவண்ணம் இருந்தார் துர்காதாஸ்.
இளவரசன் தனியாக அரசுப் பொறுப்பை ஏற்கும் வரை இப்படி துர்காதாஸ் பாதுகாப்பைத் தொடர்ந்தார்.
உரிய காலத்தில் அஜித்சிம்மன் அரியணை ஏறினார்.
ஒரு நாள் அரசவை கூடியது.
அப்போது அஜித்சிம்மன் துர்காதாஸைப் பார்த்து, “நீங்கள் இளம் வயதில் எனக்குச் செய்த கொடுமையை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. இடம் விட்டு இடம் ஓட வைத்தீர்கள்! தாங்க முடியாத துன்பத்தைத் தந்தீர்கள். ஒரு நாள் இந்த அரியணையில் நான் ஏறி அமர்வேன் என்பதைத் தெரிந்தும் இப்படி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு தக்க தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.
துர்காதாஸோ மென்மையாக, “நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்கத் தயார்” என்றார்.
“கையில் மண்கலயத்தை ஏந்தி ஜோத்பூர் நகரத் தெருக்களில் நீங்கள் பிச்சை எடுத்து உயிர் வாழுங்கள். இங்கே உங்களுக்கு இனி இடம் கிடையாது” என்றார் அஜித்சிம்மன்.
துர்காதாஸ் அங்கிருந்து சென்றார்.
சில நாட்கள கழிந்தன.
ஒரு நாள் ஜோத்பூர் வீதியில் அஜித்சிம்மன் குதிரை மீது அமர்ந்தவாறு சென்று கொண்டிருந்தார். அவரது படை வீரர்கள் அவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர் ஒரு செல்வந்தர் வீட்டின் வாயிலில் மண் கலயத்துடன் நின்றவாறு துர்காதாஸ் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
குதிரையை விட்டு இறங்கினார் அவர்.

துர்காதாஸிடம் சென்ற அஜித் சிம்மன், “என்ன சௌக்கியமா?” என்றார்.
உடனே துர்காதாஸ், “அரசே! எனது சௌக்கியத்திற்கு என்ன குறைச்சல்? உங்களது ஆட்சியில் அனைவரும் தங்கத் தட்டிலும் வெள்ளித் தட்டிலும் அல்லவா உணவு உட்கொள்கின்றனர்! எனக்கோ இந்த மண் கலயம் ஒன்றே சொத்து. சில சமயம் பிச்சை கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. உங்களை அங்குமிங்குமாக அலைக்கழித்துக் கூட்டிச் சென்று காப்பாற்றி இருக்காவிடில் நானும் இவர்களைப் போல தங்கத் தட்டிலோ அல்லது வெள்ளித் தட்டிலோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் – ஒரு கொடுங்கோலன் மார்வாடை அரசாண்டு கொண்டிருப்பான்” என்றார் துர்காதாஸ்.
துர்காதாஸை அணைத்துக் கொண்ட அஜித் சிம்மன், “நீங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு விஸ்வாசமாய் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் உணர்வதற்காகவே தான் இப்படிச் செய்தேன். நீங்கள் எனக்குத் தந்தை போன்றவர் அல்லவா” என்றார்.
இருவர் கண்களும் பனித்தன.
மக்கள் இந்த அதிசயக் காட்சியைக் கண்டு வியப்புற்று மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் துர்காதாஸின் மகிமை தெரிந்தது.
அவரைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்து சென்ற அஜித் சிம்மன் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கினார்.
ராஜஸ்தான் ஃபைல்ஸில் இப்படி ஒரு உண்மை காட்சி உண்டு!
***
ஆதாரம், நன்றி : கல்யாண கல்பதரு ஆங்கில மாத இதழ் 2016 ஆண்டு மலர்.
இப்போது இந்த ஆங்கில இதழ் நின்று விட்டது.