
Post No. 12,644
Date uploaded in London – – – 28 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
pictures are from wikipedia; thanks
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 41
88. திருகோணமலை பத்ரகாளி அம்மன் கோவில்
திருகோணமலை நகருக்குள் அமைந்த மிகப்பழைய கோவில் பத்ரகாளி கோவில். இவள்தான் நகரத்தின் காவல் தேவதை என்பதால் நகர காளி என்ற பெயரும் உண்டு. மூலஸ்தானத்தில் கம்பீரமாககே காட்சி தரும் காளிதேவி ,கோவிலுக்கு வரும் பக்தர் மீது அருள் மழை பொழிந்த வண்ணம் உள்ளாள்.
இலங்கைத் தமிழர்கள் தீபாவளி வரை அனுஷ்டிக்கும் கேதார கெளரி நோன்பும் விரதமும் எல்லோரும் அறிந்ததே புரட்டாசி மாத விஜய தசமியில் துவங்கும் இந்த விரதம், ஐப்பசி அமாவாசை வரை நீடிக்கும். இதற்கான பூஜைகளைச் செய்து, நோன்புக் கயிற்றையும் பூஜை சாதனங்களையும் அளிப்பது இந்த பத்ர காளி கோவிலின் சிறப்பு வைபவம் ஆகும் . ஏராளமான பெண்கள் இதற்காக இங்கே வருவார்கள் .
கோவிலின் வரலாறு சோழர் காலத்திலிருந்து துவங்குகிறது ; குளக்கோட்ட மன்னன் காலம் முதல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. பழங்காலத்தில் கோவில் இருந்த இடத்தில் 1933-ல் கோவில் கட்டப்பட்டு 1947-ல் விரிவாக்கப்பட் து. மஹா மண்டபம் , கோபுரம் முதலியன கட்டப்பட்டன; கிழக்கு நோக்கிய வாசல், மணிக்கூண்டு கோபுரம் முதலியனவும் கலை வேலைப்பாடு மிக்க தூண்களும் அமைந்தன.
பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், பைரவர், நாக தம்பிரான் சந்நிதிகள் இருக்கின்றன. மார்ச் மாதம் நடக்கும் 10 நாள் உற்சவம் தேர்த் திருவிழாவுடன் நிறைவடைகிறது
கேதார கெளரி விரதம் துவங்கும் முன் வரும் 9 நாட்களிலும், நவராத்திரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடபடுகிறது . 21 நாள் விரதம் முடிந்தவுடன் பெண்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து நோன்பினை முடிக்கிறார்கள்.
இந்தக்கோவிலில் 1980ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது ; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.
xxxx
விக்கிபீடியா தரும் கூடுதல் தகவல் இதோ:
இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலை நகரம் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.
XXXX
89.நல்லூர் வீர மகாகாளி அம்மன் கோவில்

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் , யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில்,சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது . நல்லூர் வட்டாரத்தில் இரவு முழுதும் நடக்கும் தண்டிகை பவனி, பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பெறும். மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய பின்னர், அவருக்கு மண்டகப்படி தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதமும் வழங்கப்படுவது போல காளி உலா வருகையிலும் மண்டகப்படிகள் உண்டு.
யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை ஏற்படுத்திய முதல் ஆரிய சக்ரவர்த்தி காலிங்க சிங்கை சக்கரவர்த்தி, காலத்தில் நல்லூரின் நான்கு திசைகளிலும் 4 கோவில்களை கட்டினர். அதில் ஒன்று நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில்.
போருக்குச் செல்லும்போதும், பெரிய வீரதீரச் செயல்களில் ஈடுபடும்போதும் காளி தேவியின் அருளை முதலில் பெறுவது சம்பிரதாயம் ஆகும்; போர் வீரர்கள் தங்கள் வாட்களுடன் வந்து மன்னருக்கு வெற்றிவாகை சூட்ட சபதம் செய்வது வழக்கம். இன்றும் தொழில் சம்பந்த மான கருவிகளை தொழில் வினைஞர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்து ஆசி வேண்டுகின்றனர் .
xxx
சோக வரலாறு
யாழ்ப்பாணத்தின் மன்னனாக சங்கிலி இருந்த 16- ஆம் நூற்றாண்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்ததால் , இந்த இடம் வரலாற்றிலும் இடம்பெற்றுவிட்டது . பரராஜ, செகராஜ என்ற பெயர்களில் மன்னர் பெயர்கள் அடுத்தடுத்து வரும். அவ்வகையில் சங்கிலி, செகராஜசேகரம் என்ற பெயரில் ஆண்ட காலம் அது 1519- 1564 . போர்ச்சுகீசிய படைகள் யாழ்ப்பாணத்தைச் சூறையாடியபோது பறங்கியர்க்கு எதிராக சங்கிலிக்கும் விடிய பண்டாரத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது . அதை உறுதி செய்வதற்கு இரு தரப்பினரும் கோவிலுக்கு முன்னர் கூடியபோது அருகிலுள்ள வெடி மருந்து ஆலை வெடித்ததில் பெரும் குழப்பம் ஏற்பட்டது ; அதில் பண்டாரம் இறந்தார் ; சங்கிலிக்கு மிகவும் வருத்தம் ஏற்படவே பரிகாரமாக , அவருடைய நினைவாக பூதராயர் கோவிலைக் கட்டினார் .. சங்கிலிக்கு போர்ச்சு கீசியருக்கும் இடையே போர் மூண்டபோது நடந்த 11 நாள் முற்றுகை நடந்ததும் இந்த இடத்தில்தான் 1560-ம் ஆண்டுப் போரில் சங்கிலி வெற்றிபெற்றார். ஆயினும் பின்னர் ஒரு சண்டையில் பிடிபட்டார்.
1621ம் ஆண்டில் மதவெறி கொண்ட போர்ச்சுகீசியர் காளி கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமத மறுமலர்ச்சி ஏற்பட்டது. கோவில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது . ஜூன் மாத பெளர்ணமியில் நிறைவுபெறும் 25 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது
XXX
முத்துமாரி அம்மன் கோவில்கள்
இலங்கை முழுதும் பல ஊர்களில் முத்துமாரி அம்மன் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன . மாரி அம்மன் வழிபாடு எல்லாக் கிராமங்களிலும் நடைபெறுகிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. கோடையில் வரும் நோய்களிலிருந்து , மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, மாரியை வணங்குவதும் , அவளுடைய வேப்பிலையால் குணம் பெறுவதும் தென் இந்தியாவிலும் உண்டு. நூறு கோவில்களுக்கு மேல் மாரி அம்மன், முத்து மாரி அம்மன், என்ற பெயர்களில் இந்த வகைக் கோவில்கள் காணப்படுகின்றன.
மாத்தளை, வல்வை, அராலி, பண்டாரிகுளம் , சுன்னாகம், அல்வாய் , ஹேரி, பலகொல்ல , சல்லி, சாவகச்சேரி , நாவலபிடிய , கோப்பாய், கொழும்பு கொட்டாஞ்சேனை முதலியன குறிப்பிடத் தக்கவை.
பெரிய நகரங்களில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில்களை அடுத்தாக காண்போம்
தொடரும் ………………………………………………………..
,TAGS– மாகாளி , முத்துமாரி , காளி , அம்மன் , கோவில்கள், கேதார கெளரி விரதம்