திரவுபதி அம்மன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 43 (Post No.12,653)

Temple at Pandiruppu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,653

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 43

93. முத்துமாரி அம்மன் கோவில் , கொழும்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்  சுமார் 170 வருடங்களாக முத்துமாரி அம்மன் கோவில், இயங்கி வருகிறது  தமிழ்நாட்டிலுள்ள கோவில்பட்டி தாலுகா,  எருக்கன்குடி அம்மன் கோவில் நிலத்தின் மண்ணை  இங்கு கொண்டு வந்து  கோவில் கட்டினர்; சைவப்பெரியார் காளியன் செட்டி குப்பமுத்து என்பவர் முயற்சியில் கோவில் நிறுவப்பட்டது . அரச சுவடிகள் திணைக்கள ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன..திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது. 1954 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவை ஆடிவேல் போன்று ஐந்து தினங்கள் கொண்டாடி வந்தனர். அம்பிகை ரதத்தில் எழுந்தருளி கப்பிகாவத்தை சிவன் ஆலயத்தில் மூன்று மூன்று தினங்கள் எழுந்தருளி மீண்டும் கொட்டாஞ்சேனைப் பதியை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 1967 முதல் மாசிமக உற்சவத்தையும் சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு 2022ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கருவறையில் முத்துமாரி அம்மனும் பிரகாரங்களில் விநாயகர், விஷ்ணு, நடராஜர், கண்ணகை அம்மன், சிவன், பார்வதி, சுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன . ரங்கநாத மூர்த்தியின் சயன கோல சுதை உருவத்தையும் தரிசிக்கலாம் இவை தவிர  நாகர், பைரவர் , நவக்கிரக தேவைதைகளும் இருக்கிறார்கள்.

ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் பக்தர்கள் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில்  மிகப்பெரிய கூட்டம் சேருகிறது.

XXXXX

94.மட்டக்களப்பு திரவுபதி அம்மன் கோவில்

பாண்டவர்களுடன் தொடர்புடைய கதைகள் இலங்கையிலும்  பிரபலமாகியுள்ளன .

பஞ்ச கன்யா என்று  இந்துக்கள் வழிபடும் பத்தினிகளில் திரௌபதியும் ஒருவர். இந்துக்கள் தினமும் காலைல சொல்லும் பிராத ஸ்மரண ஸ்லோகத்தில்

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்  –

என்று சொல்லி வழிபடுகின்றனர் . இலங்கையில் திரௌபதை அம்மன் வழிபாடு கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் பரவலாகக் காணப்படுகிறது . இதை கொங்கு நாட்டிலிருந்து வந்த தாத்தன் என்ற முனிவர் அறிமுகப்படுத்தினார். முதலில் மட்டக்களப்பு வட்டார பாண்டிருப்பு கிராமத்தில் த்ரௌபதீ வழிபாடு துவங்கியது. இப்போது ஆரையம்பதி, பழுகாமம், மட்டக்குழி , புதூர், புளியந்தீவு  ஆகிய இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன . இவை தவிர புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு திரவுபதி அம்மன் கோவிலு ம் பிரசித்திபெற்ற  ஆலயங்களில்  ஒன்றாகும்.

கல் முனைக்கு வடக்கில்  பாண்டிருப்பு கிராமம் இருக்கிறது ;தாதன் என்ற முனிவர் வந்து இறங்கியதை அறிந்து , எதிர்மன்ன சிங்கம் என்ற குறுநில மன்னர் அவரைச் சந்தித்தார். மஹாபாரதக் கதையை அவர் சொல்லக்கேட்டு, அவர் சொற்படி , கொக்கட்டிமரம் சூழ்ந்த சோலையில் அம்மனுக்கு ஆலயத்தை எழுப்பினார். ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு நடக்கும் விழாவில் தீக்குழி இறங்கும் சடங்கும் உண்டு. 18 பர்வங்களின் கதை பாராயணம் செய்து முடிக்கும் கடைசி நாளில்  20 அ டி நீள தீக்குழியில் பக்தர்கள் இறங்கி நடப்பார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் ஐவர் மற்றும் திரவுபதி போல வேடம் தரித்த 6 பெரும் தீ மிதித்து நடந்த பின்னர் ஏனைய பக்தர்களும் தீ மிதிப்பர். கடலில் ஸ்நானம் செய்வது, தீக்குளித்தோரிடம் புனித சாம்பல் வாங்குவது ஆகியனவும் இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

மகாபாரதத்தில்  திரெளபதி தேவியே  தீ யிலிருந்து வந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது. அவள்  யாக குண்டத்தில் தோன்றியவள் கற்புக்கரசிகளில் அருந்ததிக்கு நிகரானவர்.

கண்டி மன்னன் விமல தரும சூரியன் 1594-1604 , இந்த தீ மிதி வைபவத்தைக் கண்டு வியந்து, கோவிலுக்கு நிலபுலங்களையும் தானம் செய்தான் இதிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் இருந்ததை அறிகிறோம்.

XXXXX

95.உடப்பு திரெளபதி அம்மன்- விஷ்ணு கோவில்

Draupadi Templt at Sri Lanka

இலங்கையின் வடமேற்கில் புத்தளம் இடம்பெறுகிறது. அந்த

மாவட்டத்தில் உள்ள சிற்றூர் உடப்பு கிராமம்; இங்கு  திரெளபதி அம்மன் ஆலயம், ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில், ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், குளத்தடி ஐயனார் கோவில், கந்தசுவாமி கோவில்,  ஐயப்ப சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஊரிலுள்ள திரெளபதி அம்மன் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மகாபாரதம் தொடர்பான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடை பெறுவதாகும் . அத்தோடு தீ மிதிப்பு, தீக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இது ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 18 நாள் உற்சவத்தின் முத்ததாய்ப்பாக அமைகிறது .

உடப்பு கிராம மக்களின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர் . மன்னாரில் தரை இறங்கிய அவர்கள் தென் திசை நோக்கி நடந்து வந்து இந்த இடத்தில் குடியேறினர்.. இது புவனேக பாஹு மன்னனின் காலத்தில் நடந்தது.

முதலில் சந்தன மரத்தால் ஆன திரவுபதி உருவம் பூஜிக்கப்பட்டது.1907ம் ஆண்டில் அதற்குப்பதிலாக அம்மனின் கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் மகாபாரதம் போற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று செல்லப்பா குருக்கள் ஆலோசனை வழங்கினார். 1912 முதல் கிருஷ்ணனை மூலஸ்தானத்தில் வைத்துவிட்டு திரெளபதி அம்மனை அர்த்த மண்டபத்தில் விஷேச ந்நிதியில் வைத்து வணங்கி வருகின்றனர் . அங்கே விநாயகர், முருகன் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ராஜ கோபுரமும், கலை வேலைப்பாடுமிக்க தூண்களும் கோவிலுக்கு மெருகூட்டுகின்றன. கோபுரத்தில் கிருஷ்ண லீலைகளை விளக்கும்

சிற்பங்கள்  காணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் நடக்கும் உற்சவத்தின் கடைசி நாளில் நடக்கும் பூக்குழி (தீ மிதி) வைபவத்தைக் காண அந்த வட்டார மக்கள் எல்லோரும் உடப்பு கிராமத்துக்கு வந்துவிடுவார்கள் .

–subham—

Tags- திரவுபதி, திரெளபதி, கோவில், பூக்குழி, தீக்குழி , தீமிதி வைபவம், பாண்டிருப்பு, உடப்பு

Leave a comment

Leave a comment